ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதை நிறுத்திய டாக்டர்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதை ஏன் நிறுத்தினார் என்கிற கேள்விக்கு, இப்படித் தான் விடையளிக்கிறார் மருத்துவர் ஜேம்ஸ் ஹாம்ப்ளின்.

“நீங்கள் பழகிக் கொள்வீர்கள், இது வழக்கம் போலத் தோன்றும்” என்கிறார் அவர்.

37 வயதான ஹாம்பிளின், யேல் பல்கலைக்கழகத்தின் பப்ளிக் ஹெல்த் ஸ்கூலில் பேராசிரியராகவும், தடுப்பு மருத்துவ நிபுணராகவும் இருக்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ‘தி அட்லான்டிக்’ என்கிற அமெரிக்க பத்திரிகையில் “நான் குளிப்பதை நிறுத்திவிட்டேன், வாழ்க்கை தொடர்கிறது” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார் ஹாம்பிளின்.

“நாம் நம் வாழ்க்கையின் இரண்டு முழு ஆண்டு காலத்தை குளிப்பதற்கு செலவழிக்கிறோம். அதனால் எவ்வளவு நேரம் எவ்வளவு பணமும், தண்ணீரும் வீணாகிறது?” என அவர் எழுதியிருந்தார்.

2020 ஆம் ஆண்டில், Clean: The New Science of Skin and the Beauty of Doing Less எனும் புத்தகத்தில் இன்னும் விரிவாக தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் அவர்.

குளிப்பதை நிறுத்தினாலும், கைகளை சோப்புபோட்டுக் கழுவுவது மற்றும் பல் துலக்குவதை நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பல் மற்றும் கைகளைப் போல உடலின் மற்ற பாகங்களையும் தூய்மையாக வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார் ஹாம்பிளின்.

சோப்பைத் தவிர்க்கும் சோதனை

குளிப்பதை நிறுத்துவதற்கான முடிவு ஒரு சோதனையாகத் தான் தொடங்கியது.

“குளிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்பினேன், மிகக் குறைவாகக் குளிக்கும் பலரைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் குளிப்பதை நிறுத்தினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க முயற்சிக்க விரும்பினேன்” என்கிறார் ஹாம்பிளின்.

2015-ல் குளிப்பதை நிறுத்தியதால் என்ன விளைவுகள் ஏற்பட்டன?

“காலப்போக்கில் உங்கள் உடல் பழகிக் கொள்கிறது, எனவே நீங்கள் டியோடரண்ட் (வாசனை திரவியங்கள்) மற்றும் சோப்புகளைப் பயன்படுத்தாவிட்டால் பெரிதாக துர்நாற்றம் வீசுவதில்லை. உங்கள் தோலில் இருந்து அத்தனை அதிகமாக கிரீஸைப் போன்ற கருப்பு நிற அழுக்கு வருவதில்லை” என்கிறார் மருத்துவர் ஹாம்பிளின்.

“பலர் கூந்தலில் இருந்து எண்ணெய் பிசுக்கை அகற்ற ஷாம்பூவைப் பயன்படுத்துகிறார்கள், பின்னர் செயற்கை எண்ணெய்களைச் சேர்க்க ஒரு கண்டிஷனரை பயன்படுத்துகிறார்கள். அந்த சுழற்சியை உங்களால் உடைக்க முடிந்தால், நீங்கள் அந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன் உங்கள் தலைமுடி எப்படி இருந்ததோ அதே போலப் பார்க்க முடிகிறது,” என்கிறார்.

படக்குறிப்பு,தனது பரிசோதனையை செய்து பார்க்க விரும்புவோர், முதலில் மெதுவாகவும், குறைவாகவும் குளியலில் ஈடுபடத் தொடங்கி பிறகு அதை அப்படியே நிறுத்த வேண்டும் என்கிறார் ஹாம்பிளின்.

ஆனால் இது ஒரு படிப்படியான செயல்.

ஹாம்பிளின் குறைவாக சோப்பு, ஷாம்பு மற்றும் டியோடரண்டைப் பயன்படுத்தத் தொடங்கினார். குறைவாக குளிக்கத் தொடங்கினார். தினமும் குளிப்பதற்கு பதிலாக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிக்கத் தொடங்கினார்.

“நான் குளிக்க விரும்பிய நேரங்கள் இருந்தன, என் உடலில் துர்நாற்றம் வீசியது, க்ரீஸ் போன்ற அழுக்கு சேர்வதாக உணர்ந்தேன். நாளடைவில் அந்த உணர்வு எனக்கு குறையத் தொடங்கியது.”

குறைந்த அளவிலான நீர் மற்றும் சோப்பு போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தியதால், தனக்கு மென்மேலும் அதன் தேவை குறைந்தது என்கிறார் ஜேம்ஸ் ஹாம்பிளின்

உடல் துர்நாற்றம் மற்றும் பாக்டீரியா

நமது சருமத்தில் வாழும் பாக்டீரியாக்களினால் தான் நமது உடலில் துர்நாற்றம் வீசுகிறது. நம் உடலில் உருவாகும் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்புகளை உணவாகக் கொண்டு இந்த பாக்டீரியாக்கள் நம் தோலில் வாழ்கின்றன என்கிறார் இந்த அமெரிக்க கல்வியாளர்.

ஒவ்வொரு நாளும் நம் சருமத்தின் மீதும், கூந்தலின் மீதும் பல தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நம் சருமத்தில் உள்ள எண்ணெய்க்கும் பாக்டீரியாவுக்கும் இடையில் ஒரு சமநிலை பிரச்சனை ஏற்படுவதாக ஹாம்பிளின் வாதிடுகிறார்.

படக்குறிப்பு,குறைவான குளியல் என்றால், குறைவாக சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களை வாங்க முடியும் என்கிறார் ஹாம்பிளின்

“நீங்கள் அதிகம் குளிக்கும்போது, உடலமைப்புச் சூழலை அழிக்கிறீர்கள்” என தி அட்லாண்டிக் பத்திரிகையில் 2016-ல் எழுதியிருந்தார்.

“அதிகம் குளிப்பதால், உடலில் விரைவாக பாக்டீரியா உருவாக சாதகமான சூழலை உருவாக்கும். இது துர்நாற்றத்தை உண்டாக்கும். குளிப்பதை நிறுத்திய பிறகு, ஒரு ஒழுங்குமுறை செயல்பாடு நம் உடலில் தூண்டப்படுகிறது, அதில் உடலமைப்பு சூழல் ஒரு ஸ்திரமான நிலையை அடைகிறது. அது நம் உடலில் இருந்து வீசும் துர்நாற்றத்தை நிறுத்துகிறது” என மருத்துவர் கூறுகிறார்.

உங்கள் உடலில் இருந்து பன்னீர் வாசனை எல்லாம் வராது. ஆனால் உங்கள் உடலில் இருந்து மோசமான நாற்றமும் வராது. நீங்கள் மனித வாசனையில் இருப்பீர்கள் என்கிறார்.

ஹாம்ப்ளினின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கலாம், ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள், அவரிடம் தெரிவிக்காமலோ அல்லது மிகவும் தயங்கியோ தெரிவித்திருக்கலாம். இதைக் குறித்து கவலைப்பட்டீர்களா என, கடந்த ஆகஸ்ட் 2020-ல் பிபிசி அறிவியல் பத்திரிகை நேர்காணலின் போது கேட்கப்பட்டது.

தன் உடலில் இருந்து துர்நாற்றம் வீசினால், தன்னிடம் வெளிப்படையாகத் தயங்காமல் தெரிவிக்குமாறு தன்னுடைய சக பணியாளர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் கூறியிருந்ததாக விளக்குகிறார்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு என் உடலில் இருந்து எந்த துர்நாற்றம் வீசவில்லை. அதோடு இந்த வாசனை என் மனைவிக்கு பிடித்திருந்தது. மற்றவர்களுக்கு இந்த வாசனை அத்தனை மோசமாக இல்லை என கருதுகிறேன் என்கிறார் ஹாம்பிளின்.

வரலாற்று ரீதியாக, நம்மிடம் சில வாசனைகள் இருந்தன. இந்த வாசனைகளும் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் விஷயமாக இருந்தது.

ஆனால் தற்போது அதில் பல வாசனைகள், நம் சமூக உயிரியலில் (Social Biology) இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.

எனவே மக்கள் வாசனை திரவியங்களைப் போலவும், சோப்புகளைப் போலவும் மணப்பார்கள், மற்ற எந்த வாசனையும் மனிதர்களுக்கு இருக்காது என நாம் நம்புகிறோம்.

அப்படிப்பட்ட மணம் அவர்களிடம் இருந்து வரவில்லை என்றால், அதை நாற்றம் என்கிறோம். மற்றவர்களால் கண்டுபிடிக்கப்படும் அளவுக்கு ஏதாவது மனித வாசனை வந்துவிட்டால் அது நாற்றமாகத் தான் பார்க்கப்படுகிறது.

உண்மையாகவே ஜேம்ஸ் ஹாம்பிளின் குளிப்பதை நிறுத்திவிட்டாரா?

உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு அல்லது உடலில் அழுக்கு இருப்பது கண்ணுக்குத் தெரியும் போது குளிப்பதாகக் கூறுகிறார் அவர். நம் உடலில் தோன்றும் கிரீஸ் போன்ற கருப்பு நிற அழுக்கை நம் கைகளாலேயே எடுத்துவிடலாம் என்கிறார் அவர்.

வாழ்கை முறையை பிரதிபலிக்கும் தோல்

ஹாம்பிளின் குளிப்பதை நிறுத்துவது வெறுமனே ஒரு சோதனை கிடையாது.

அவர் எழுதிய புத்தகத்துக்காக ஆராய்ச்சி மேற்கொண்டதன் ஒரு பகுதியாக சரும நிபுணர்கள், நோய் எதிர்ப்பு மண்டல நிபுணர்கள், ஒவ்வாமை நிபுணர்கள், இறையியல் நிபுணர்கள் என பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

James Hamblin

ஜேம்ஸ் ஹாம்பிளினின் புத்தகம் சரும பாதுகாப்புச் சந்தையை விமர்சிக்கிறது.

சரும பாதுகாப்பு மற்றும் சோப்பு போன்ற பொருட்களை விற்கும் நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு மட்டுமே தீர்வுகளை வழங்குகின்றன. அதில் சில பொருட்கள் உதவிகரமாக இருக்கலாம் என நம்புகிறார் ஹாம்பிளின்.

சரும நலனைப் பொருத்தவரை, நாம் உள்ளிருந்து வெளியாக யோசிக்க வேண்டும். அதாவது நம் சருமம், நம் வாழ்க்கை முறை மற்றும் நாம் உண்ணும் உணவின் வெளிப்பாடு.

அறிவியல் மற்றும் சந்தைப்படுத்தல்

சந்தைப்படுத்துதலிருந்து விஞ்ஞானம் எது என்பதை வேறுபடுத்துவது முக்கியம் எனக் கருதுகிறார் அவர்.

அதிக சோப்பு மற்றும் சரும தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நம்மை ஆரோக்கியமாக்குகிறது என்ற நம்பிக்கையின் காரணத்தால், நமக்கு உண்மையில் தேவைப்படுவதை விட அதிகமான தயாரிப்புகளை நாம் பயன்படுத்துகிறோம் என்கிறார் ஹாம்பிளின்.

“இந்த குளியல் பழக்கங்கள் எல்லாம் ஒரு நவீன கண்டுபிடிப்பு. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான மக்களுக்கு முறையான நீர் வசதியைப் பெற முடியவில்லை. இது பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. வெகுஜன மக்கள் எப்போதாவது மட்டுமே அனுபவிக்க முடியும்” என்கிறார் ஜேம்ஸ்.

“ஒருவேளை அவர்கள் ஓடும் நதி அல்லது ஏரிக்குச் சென்றிருக்கலாம், ஆனால் அது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒன்றல்ல” எனக் கூறுகிறார்.

“அதே போல அந்த காலத்தில், வெகுஜன மக்களுக்கு சோப்புகளை வழங்கும் அளவுக்கு அன்று உற்பத்திக்கான திறன் நம்மிடம் இல்லை. எனவே, நிறைய பேர் வீட்டிலேயே தயாரித்த சோப்புகளைப் பயன்படுத்தினர், அவர்களின் தோல் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர்கள் ஒவ்வொரு நாளும் சோப்பைப் பயன்படுத்தவில்லை” என விளக்குகிறார் ஜேம்ஸ் ஹாம்பிளின்.

Bars of soap

நாம் அதிகமாக குளித்திருக்கலாம். அதைக் குறைப்பது நமக்கு நன்மை பயக்கும் என்று ஹாம்ப்ளின் புத்தகத்தை முடித்திருக்கிறார்.

இந்த யோசனையின் பின்னணியில் உள்ள ஒரு காரணம் என்னவென்றால், நம் தோலில் உள்ள நுண்ணுயிர்களை மாற்றும் போது என்ன நடக்கிறது என்பது இன்னும் நமக்கு முழுமையாக புரியவில்லை.

“குடல் பாக்டீரியாக்கள் செரிமான அமைப்புக்கு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நம் தோலில் உள்ள பாக்டீரியாக்களும் முக்கியம்” என்கிறார் அவர்.

இருப்பினும், நுண்ணுயிரிகளுக்கு வரலாற்று ரீதியாகவே நிறைய கெட்ட பெயர் உண்டு.

“ஆனால் கடந்த தசாப்தத்தில், நம்மிடம் டி.என்.ஏ வரிசைமுறை தொழில்நுட்பம் இருந்ததால், நுண்ணுயிரிகள் இருக்கும் இடங்களைக் கண்டோம். நுண்ணுயிரிகள் எல்லா இடங்களிலும் உள்ளன, அவை பொதுவாக மனிதர்களுக்கு நோயை உண்டாக்குவதில்லை. மிகச் சிறிய அளவிலான நுண்ணுயிரிகள் தான் நோய்களை ஏற்படுத்தும்” என்று ஹாம்பிளின் விளக்குகிறார்.

“மக்கள் தங்கள் உடலை சுத்தம் செய்யும் போது அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில், நிச்சயமாக, நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நோயிலிருந்து விடுபட வேண்டும். ஆனால் நுண்ணுயிரிகள் அனைத்தையும் அகற்ற நாங்கள் விரும்பவில்லை.”

குளியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதா?

சுத்தமாக இருப்பது என்றால் என்ன? என்பது பற்றிய, ஒரே கருத்தை எல்லோரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என பேராசிரியர் ஜேம்ஸ் ஹாம்பிளின் கருதுகிறார்.

குளியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் நம்புகிறார்.

“குளியலை ஒரு விருப்பம் என்று நான் கூறுவேன், ஆனால் மருத்துவ தேவை அல்ல. ஆனால் மக்கள் குளிப்பதை விட்டுவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை” என்கிறார் ஹாம்பிளின்.

Bacteria

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *