வருமானம் இல்லாத தியேட்டர்கள் மாஸ்டர் வந்தால் நிலைமை மாறுமா?

தினமும் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகின்றன. பாதியளவு இருக்கைகளே நிரம்ப வேண்டுமென்ற கட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன் இப்படியொரு நிலை இல்லை எனும் அளவுக்கு, கொரோனா கால ஊரடங்கு தியேட்டர்களை ஈயாட வைத்திருக்கிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், மால்கள், பூங்காக்கள், கடைகள் என்று மக்கள் கூடும் இடங்களில் மிகமெதுவாக சகஜநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், தியேட்டர்கள் வழித்து துடைக்கப்பட்ட மாதிரியே இருக்கின்றன கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக..

அதலபாதாளத்தில் தியேட்டர்கள்!

எத்தனை மோசமான படமாக இருந்தாலும் வசூல் கையைக் கடிக்காது என்றிருந்த காலமொன்று உண்டு. இப்போது, தியேட்டர் உரிமையாளர்களின் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சிக்கு முன்பாகவும் தியேட்டரில் காத்துக் கிடக்கும் சொச்ச பேரை திருப்பி அனுப்புவதற்குள் பணியாளர்கள் படும் பாடு பெரும் திண்டாட்டம். மெனக்கெட்டு தியேட்டருக்கு வருபவர்களிடம் ‘காட்சி ரத்து’ என்று சொல்லும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது.

கடந்த மார்ச் 13 அன்று தாராளபிரபு, அசுரகுரு, வால்டர், கயிறு, தஞ்சமடா நீ எனக்கு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. வெள்ளியன்று வெளியான இந்தத் திரைப்படங்கள் திங்கள் கிழமையை எதிர்கொள்ளும் முன்பாகவே, சில தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகின.
அதற்கடுத்த சில நாட்களில் அமலுக்கு வந்த ஊரடங்கு விதிகளால், இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட ஏழரை மாத காலம் பூட்டிக் கிடந்தன. கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை இயக்கலாம் என்று அறிவித்தது தமிழக அரசு.

ஆனாலும், தீபாவளி (நவம்பர் 14) அன்றே பெரும்பாலான சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதுவும் கூட, படத்தை திரையிடுவதற்கான விபிஎஃப் கட்டணத்தை இரண்டு வார காலத்துக்கு ரத்து செய்வதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்தபிறகே சில படங்கள் ரிலீஸ் ஆகின.

இயல்பு எப்போது திரும்பும்?

தீபாவளிக்கு வெளியான ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’ ஆகியன கொஞ்சமாய் மக்களை தியேட்டருக்கு இழுத்து வந்தன. அவற்றுடன் வெளியான ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’ படங்களுக்கு அந்த வரவேற்பு கூட கிடைக்கவில்லை.
அதையும் மீறி அப்படங்களை பார்க்க நினைத்தவர்களுக்கு, ‘காட்சி ரத்து’ என்பதே பதிலாகக் கிடைத்தது. காரணம், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதே தவிர முற்றிலுமாக நீக்கப்படவில்லை.

மார்ச் மாதத்துக்கு முன்பிருந்த நிலைமை இப்போது சுத்தமாக இல்லை. இதனால், தியேட்டர்களில் நான்காவது காட்சி இல்லாத நிலையே இப்போதுவரை தொடர்கிறது.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ மட்டுமே, கடந்த ஆண்டு தியேட்டர் சார்ந்தவர்களை மகிழ்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் என்பதும் அந்த நிறைவுக்கு காரணம்.
பத்துக்கும் குறைவான நபர்களுக்குப் படம் காட்டும் திறன், இன்று தியேட்டர்களில் சுத்தமாக இல்லை. வெகு அரிதாக, பார்வையாளர்கள் மனம் வருந்தக் கூடாது என்று சில தியேட்டர்கள் இயங்குகின்றன.
பெருநிறுவனங்களைப் பொறுத்தவரை இன்னும் நிலைமை மோசம். குறைந்தபட்சம் 25 பேராவது வந்தால் காட்சி திரையிடலாம் என்பதே மல்டிப்ளெக்ஸ்களில் எழுதப்படாத விதியாக உள்ளது.

இதனால், முன்பதிவு செய்து வந்தாலும் கூட தியேட்டருக்குள் சென்று உட்காரும்வரையோ அல்லது கும்பல் சேரும் வரையோ காட்சி திரையிடப்படுவதற்கான உத்தரவாதம் இல்லை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் கொரோனா குறித்த பயமும் பதற்றமும், தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் கொஞ்சம் கூட இல்லை. ஆனாலும், தியேட்டர்களை பொறுத்தவரை எவ்விடத்திலும் ஒரே நிலைதான்.

மொபைல் தியேட்டர்?!

ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று காட்சிகளை அடுத்தடுத்து பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், இன்று மழைக்கு கூட தியேட்டர் பக்கம் ஒதுங்குவதில்லை. அந்த வேலையை, அவர்களது கையில் இருக்கும் மொபைல் செய்துவிடுகிறது.

சில ஆண்டுகளாகவே தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் குறைவென்றாலும் கூட, கொரோனா அந்த விகிதத்தைப் பெருமளவுக்குச் சரித்திருக்கிறது. போதாக்குறைக்கு, மொபைல் அல்லது லேப்டாப்பில் சினிமா, டிவி நிகழ்ச்சி, சீரியல், குறும்படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ5 உட்பட ஓடிடி தளங்களின் சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் கூட இதில் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஓடிடியில் பெரிய நட்சத்திரங்களின் படங்களும் கூட வெளியாகும் என்பதற்குப் பிள்ளையார் சுழி போட்ட பெருமை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு உண்டு.

கடந்த மே 29-ம் தேதியன்று ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. தொடர்ந்து ‘பெண்குயின்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘சைலன்ஸ்’, ‘வர்மா’, ‘புத்தம்புதுகாலை’ ஆகியன இத்தளங்களில் வெளியாகின.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 12 அன்று வெளியான ‘சூரரைப் போற்று’ மற்றும் 14ஆம் தேதியன்று வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டும் இந்த பரபரப்பை தக்கவைத்துக்கொண்டன. சமீபத்தில் வெளியான ‘ஒருபக்க கதை’ மற்றும் ‘அந்தகாரம்’ ஆகியன சினிமாவிரும்பிகளுக்குப் பிடித்தமான படைப்புகளாகி உள்ளன.

தியேட்டர்களில் வெளியாக முடியாத சூழலை இத்திரைப்படங்கள் பயன்படுத்திக் கொண்டாலும்கூட, ஓடிடி தளங்கள் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

மாஸ்டரும் ஈஸ்வரனும்..!

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய ‘மாஸ்டர்’, வரும் ஜனவரி 13-ம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.

தியேட்டரில் ரசிகர்களின் வரவேற்பை அள்ளுவதற்காக, ஓடிடியில் வெளியாகும் வாய்ப்புகளைத் தவிர்த்தது தயாரிப்பு தரப்பு. 100 சதவீத பார்வையாளர்களுக்கான அனுமதியை எதிர்பார்த்து தீபாவளி வெளியீட்டை ஒத்திவைத்தது.

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் அரசிடம் தெரிவித்தவண்ணம் இருந்தனர். இதனை வலியுறுத்தி, சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் மாஸ்டர் நாயகன் விஜய்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 4-ம் தேதியன்று தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்று அறிவித்தது தமிழக அரசு. ஜனவரி 5-ம் தேதி முதல் கேரளாவில் தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குகின்றன.
இதனாலேயே, வரும் 13-ம் தேதியன்று ‘மாஸ்டர்’ மற்றும் ஜனவரி 14-ம் தேதியன்று ‘ஈஸ்வரன்’ வெளியாவதை எதிர்நோக்கியிருக்கின்றனர் தியேட்டர் அதிபர்கள்.

சுசீந்திரன், இசையமைப்பாளர் தமன் மற்றும் பாரதிராஜா, நிதி அகர்வால் என்ற கூட்டணியின் காரணமாக, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.
தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் மாஸ்டர் வெளியாவதால், அப்படக்குழுவினருக்குப் பெரிதாக பதற்றம் இருக்காது. இப்படங்களுடன் மேலும் சில படங்களும் தியேட்டருக்கு வரலாம்.

இவற்றுக்குப் போட்டியாக, ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. ஓடிடியை நாடும், தியேட்டரை விரும்பும் படைப்பாளிகளுக்கான எல்லைகளை அதன் வெற்றி கோடிட்டுக் காட்டிவிடும்.

பொங்கலையொட்டி திருவிழா கோலம் பூணும் தியேட்டர்கள் தொடர்ந்து ஜொலிக்க வேண்டும். மாஸ்டரும் ஈஸ்வரனும் அதைக் கொஞ்சமாய் சாத்தியப்படுத்தினால் கூட, சினிமாவுலகின் இயல்பான இயக்கம் மீட்டெடுக்கப்படும்.

அதனைச் செய்யாமல் விட்டுவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறை சொந்தபந்தங்கள் ஒன்றுகூடி விருந்து உண்ணுவது போல தியேட்டரில் திரைப்படம் பார்ப்பதும் அரிய நிகழ்வாகிவிடும்.

மாறப்போகும் நிலை!

சரியாகச் சொல்லப்போனால் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களின் வெற்றி பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆக வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்கக்கூடும். அங்கு ரசித்து திகட்டியபின்னரே, வெவ்வேறு தளங்களில் வெளியிடப்படும் நிலைமை வரலாம்.
ஓடிடி வெளியீட்டுக்கான படைப்புகளும் படைப்பாளிகளும் தனியாக அணி பிரியும் நிலை கூட ஏற்படலாம். அதன் மூலமாக சினிமா, சீரியல், யூடியூப் போன்று ஓடிடிக்கு என்றே தனிப்பட்ட பார்வையாளர்களும் உருவாகலாம்.

எல்லாவற்றையும் தீர்மானிக்கப்போவது, தியேட்டருக்கு வரும் மக்கள் வெள்ளம்தான்.
கொரோனா உருவாக்கியுள்ள புதிய இயல்புநிலையுடன் ஒன்றிணைந்து மாஸ்டருக்கு பெருவரவேற்பு கிடைத்தால் மட்டுமே மேற்கூறியது சாத்தியமாகும். அது, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் வெற்றியாகவும் கருதப்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *