போலி மருத்துவ அறிக்கை சமர்ப்பித்து நாட்டைவிட்டு வெளியேறிய கொரோனா நோயாளி!

போலி மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்து மஹர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள எந்தேரமுல்லையைச் சேர்ந்த கொரோனா தொற்று நோயாளி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையிலிருந்து இரு முரண்பாடான பிசிஆர் சோதனை அறிக்கைகளை குறித்த நபர் பெற்றிருந்ததாகவும் அதில் ஒன்று கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர் என்றும் மற்றொன்று இல்லையென்றும் அறிக்கைகள் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில்(MOH) புதிய பிசிஆர் சோதனைக்கு உட்படுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்ட தாகவும் மஹர சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் நிஹால் கமகே கூறினார்.

இதன் பின்னர் டிசம்பர் 24ஆம் திகதி குறித்த நபர் புதிய பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அத்தோடு நாட்டை விட்டு வெளியேறும் அனுமதிச் சான்றிதழ் வழங்க பிசிஆர் சோதனை அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

அத்தோடு டிசம்பர் 30இல் பெறப்பட்ட அறிக்கை குறித்த நபர் கொரோனா வைரஸ்தொற்றுக்கு ஆளாகியிருப்பதை உறுதிப்படுத்தியது.

எனவே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பொதுச் சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் டிசம்பர் 29ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக நாட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலியான பிசிஆர் சோதனை அறிக்கையைப் பயன்படுத்தி குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் எனத் தான் நம்புவதாகவும் அவர் இப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரை இல்லாமல் எப்படி வெளியேறினார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மிஹார எபா கூறினார்.

மேலும் இது தொடர்பில் விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *