கொரோனா உடல்கள் எரிப்பு வர்த்தமானியில் திருத்தம் கொண்டுவரலாம்?

கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யவேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பு தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது.

இருந்தபோதும் குறித்த வைரஸ் தொடர்பில் விஞ்ஞான அடிப்படையிலான தீர்மானங்களின் பிரகாரம் வர்த்தமானியில் திருத்தம் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என சுகாதார சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமும் சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனாவில் மரணிப்பவர்களை தகனம் செய்யவேண்டும் என தெரிவித்து விடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யவேண்டும் என தெரிவித்து வெளியிடப்பட்ட ஆரம்ப வர்த்தமானி அறிவிப்பு தற்போதும் அமுலில் இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களை தகனம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது,

இந்த வைரஸ் பரவலின் ஆரம்பத்திலாகும். அன்றைய நிலைமையை கருத்திற்கொண்டு, எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் இருந்தே தகனம் செய்ய மட்டும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

என்றாலும் 6 மாதங்களின் பின்னர் வைரஸ் தொடர்பில் வெளிப்படும் நிலைமையின் பிரகாரம், விஞ்ஞான ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு, அந்த தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் குறித்த வரத்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் கொரோனா வைரஸ் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான தீர்மானங்களை அடிப்படையாகக்கொண்டு, சுகாதார அமைச்சினால் குறித்த வர்த்தமானியில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். அத்துடன் கொரோனா தொற்றில் மரணிக்கும் சடலம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடினேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *