இலங்கையில் 10 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட உள்ள விமான நிலையங்கள்!

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயண சேவைகளுக்காக விமான நிலையங்கள் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக, விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, விமான சேவைகள் மற்றும விமான நிறுவனங்களின் அலுவல்கள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமான நிலையங்களைத் திறந்துள்ள மற்றும் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்துள்ள நாடுகளிடம் இருந்து, இலங்கை படிப்பினைகளைப் பெறவுள்ளதாக, விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிர்க்கதிக்குள்ளாகிளுள்ள 68 ஆயிரம் இலங்கையர்கள், நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை 60 ஆயிரத்து 470 பேர் வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, யாத்திரிகர்கள், மாணவர்கள், அரச அல்லது ஆயுதப்படை அதிகாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறுகிய கால விஜயங்களை மேற்கொண்டவர்கள், மற்றும் கடல் பிரயாணிகள் என பலர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, 137 நாடுகளில் இருந்து அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களும்,  ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களில் இருந்து 20,000 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின்  வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு, இதுவரை 80 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகா அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாலி, துபாய் மற்றும் தோஹாவுக்கு போன்ற இடங்களுக்கு சுமார் 10,000 உலர் உணவுப் பொதிகள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் என அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *