வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி அதிரடி வீரரும், கிரிக்கெட் ரசிகர்களால் “யுனிவர்ஸ் பாஸ்” என்று அழைக்கப்படும் கிரிஸ் கெயில் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி தற்போது வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். தற்போது 41 வயதாகும் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் 301 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

40 வயதை கடந்த பின்னரும் தற்போது வரை ஓய்வை அறிவிக்காமல் விளையாடி வரும் இவர் உலகெங்கிலும் நடைபெறும் டி20 தொடர்களில் முக்கிய அதிரடி ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசி உள்ள கிரிஸ் கெயில் அசத்தலான பதில் ஒன்றினையும் அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே 45 வயது வரை நான் கிரிக்கெட்டில் இருந்து விலக வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் இன்னும் இரண்டு உலகக் கோப்பையில் விளையாடிய பின்னரே நான் ஓய்வு பற்றி யோசிப்பேன். என்னை பொறுத்தவரை வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டும் தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர் இரண்டு உலக கோப்பை என்று குறிப்பிட்டது யாதெனில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டுதான் இவற்றை கூறியுள்ளார். மேலும் இந்த இரண்டு உலகக் கோப்பை தொடரிலும் தான் விளையாடுவதை ஆவலாக எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிக்சர் மழை பொழியும் கெயிலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உலகெங்கும் உள்ள.து மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசி அசுரத்தனமான பிளேயர் என்றே அவரை கூறலாம். டி20 போட்டிகளில் பொதுவாக ரன்களை ஓடி எடுக்காமல் சிக்சர்களை அனைத்து திசைகளிலும் பறக்கவிடும் இவருக்கு “யுனிவர்ஸ் பாஸ்” என்ற பட்டம் சரியானதே என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *