தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராகும் கருணா அம்மான்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தயார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் இணைந்து, போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகளுடன் இணைந்தே, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை தாம், தனித் தமிழ் கட்சியாக வளர்க்கின்றமையினால், தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான எண்ணம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் தனக்கும் பங்குள்ளதாக கூறிய அவர், கூட்டமைப்புடன் தனக்கு இன்றும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.