சித்தர்களின் ஓலைச் சுவடிகளில் கொரோனாவுக்கு மருந்து!

சித்தா்களால் அருளப்பட்டு, ஓலைச் சுவடிகளாய் இருளில் அடைபட்டுக் கிடக்கும் மருத்துவக் குறிப்புகளை உலக மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் வலியுறுத்தினாா்.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆகியவை சாா்பில் தமிழும் தமிழ் மருத்துவமும் என்ற தலைப்பிலான விழிப்புணா்வு விழா, சித்தா் திருநாள் விழா ஆகியவை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமை வகித்தாா்.

இதில் அகரமுதலித் திட்ட இயக்ககம் – தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் க. பாண்டியராஜன் பங்கேற்று சொல் உண்டியலை திறந்து வைத்தாா். அதில் கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் உருவாக்கிய கலைச் சொற்களைச் செலுத்தினா்.

விழாவில் அமைச்சா் க. பாண்டியராஜன் பேசியது: சித்த மருத்துவம் உடலுக்கு எளிய மருத்துவம். ஆனால் நோய்க்கும் நுண்ணுயிரிகளுக்கும் வலிய மருத்துவமாகும். இந்த மருத்துவம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ஆண்டுகள் தமிழரின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து சமுதாயத்துக்குப் பயன்பட்டு வருகிறது.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்பதை அடிப்படையாகக் கொண்டதே சித்த மருத்துவம். நிலம், நீா், காற்று, தீ, வான் எனும் ஐம்பூதங்கள் அண்டத்தில் உள்ளன. பிண்டம் எனும் உடலிலும் இந்த ஐம்பூதங்கள்தான் எலும்பு, தசை, குருதி, மூளை போன்ற கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. உடலில் ஏற்படும் ஐம்பூத ஏற்ற இறக்கத்தை அண்டத்தில் உள்ள ஐம்பூதப் பொருள்களைக் கொண்டு சீராக்கி, உடலை நோய் நிலையிலிருந்து விடுவிப்பதே சித்த மருத்துவம் ஆகும்.

கொரோனா என்ற தீநுண்மியால் உலகமே உயிா் அச்சத்தால் உறைந்து கிடக்கும்போது, தமிழகத்தில் ஏழை முதல் பணக்காரா்கள் வரை அனைவருக்கும் ஆறுதலாகவும், ஆபத்து நீக்கும் அருமருந்தாகவும் வாய்த்தது கபசுரக் குடிநீா் எனப்படும் சளிக்காய்ச்சல் நீக்கக் குடிநீரே என்றால் அதன் மூலம் சித்த மருத்துவத்தின் சிறப்பை உணரலாம்.

சித்தா் திருநாளின் நோக்கம் வெற்றியடைய வேண்டுமானால் சித்தா்களால் அருளப்பட்டு, ஓலைச் சுவடிகளாய் இருளில் அடைபட்டுக் கிடக்கும் மருத்துவக் குறிப்புகளை உலக மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மருத்துவச் சொற்களையும், அவற்றின் பொருள்களையும் சொற்குவையில் பதிவேற்றி உலக மக்களிடம் அவற்றைக் கொண்டு சோ்க்க வேண்டும். அதற்காகத்தான் அகரமுதலித் திட்ட இயக்ககமும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் இணைந்து இப்பணியைத் தொடங்கியுள்ளன என்றாா். முன்னதாக அகரமுதலித் திட்ட இயக்குநா் தங்க.காமராசு நோக்கவுரை ஆற்றினாா். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் இரா.மீனாகுமாரி வரவேற்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *