ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டது.
மக்கள் அத்தியாவசியப் பயணத்திற்கு மட்டுமே வெளிவர அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

அதன்பின் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், நோய்த்தொற்று குறைந்த பகுதிகளில், பல படிநிலைகளாக ஊரடங்கில் தளர்வும் அறிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 25-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை 2021 ஜனவரி 31-ம் தேதி வரை பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், உலக அளவில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள உருமாறிய கொரோனாவைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம். அதனால், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் கொரோனா தொற்றுநிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மத்தியஅரசு அனுமதி பெற்று இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தலாம் என்று உள்துறை செயலாளர் அஜய்பல்லா கடிதம் எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *