முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பது பேரழிவை தரும்!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தாய்நாட்டில் அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய இலங்கை அரசு எடுத்துள்ள தீர்மானம் குறித்து அரசாங்கத்திற்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) கூட முஸ்லிம்களின் இறுதி சடங்குகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என அறிவித்துள்ளதோடு, தீவிரவாத சிந்தனையில் இருந்து வெளியேறி அறிவார்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு நாட்டிற்கு காணப்படுவதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரும் முன்னால் அமைச்சருமான மிலிந்த மொரகொட அறிவுறுத்தயுள்ளார்.

“சந்தர்ப்பவாத அரசியல் எதிர்ப்பு களையப்பட்டு, ஒரு நேர்மறையான சமூக சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு பயிற்சியாக இது மாற்றப்பட வேண்டும்” என முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

“அனைத்து மத மற்றும் தேசிய பழக்க வழக்கங்களுக்கு மதிப்பளிப்போம்” என்ற தலைப்பில் கொழும்பு சிங்கள் பத்திரிக்கை ஒன்றுக்கு எழுதிய பந்தியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக முஸ்லிம்கள் இறந்தால் அவர்களின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து வலுவான விவாதம் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமூக கலாச்சாரங்களுக்கு மரியாதை உள்ள உயர் சமூகமாக நடுநிலை தீர்வை எட்டுவது பொருத்தமானது என வலியுறுத்தியுள்ளார்.

அயல் வீட்டாரின் மரணத்தை நல்லிணக்கத்திற்கான முதல் படியாக மாற்ற முன்மொழிந்துள்ள இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, வைரஸால் ஏற்படும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு உடலை தகனம் செய்வதற்கான தீர்மானமானது, முஸ்லிம்களின் நம்பிக்கைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எதிர்காலத்தில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

”சக்தி உதவியற்றது, ஆனால் பொறுமை முடிவுக்கு வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. இது வெறுப்பாக இருக்கக்கூடும்.”

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய உலகின் பிற நாடுகள் அனுமதித்துள்ளது எனவும், சுட்டிக்காட்டியுள்ள அவர், மேலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில் தடை விதிக்கப்படுவது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *