பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது அமீர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது அமீர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009-ம் ஆண்டு தனது 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.  பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது அமீர் 28 வயது முகமது அமீர் இதுவரை 259 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் முகமது அமீர் கேல்-ஷெல் எனும் பாகிஸ்தான் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில்; தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவது குறித்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்; தான் அணி நிர்வாகத்தின் மூலம் மனரீதியாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும், இதனால் தற்போதுள்ள பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்தின் கீழ் தன்னால் விளையாட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுவரை அந்த டார்ச்சரை நான் சந்தித்தேன். பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தேன். பாகிஸ்தான் அணிக்காக பலவிஷயங்கள் செய்து தண்டனைதான் அனுபவித்தேன். தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது.

ஒருநாள், டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு என்னால் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு மாதமும், அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை என்னுடைய பந்துவீச்சு குறித்து ஏதாவது ஒரு குறையை வாரிய அதிகாரிகள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் திரும்பிவிடுவேன் அப்போது தனது குடும்பத்தினரிடம் பேசிய பின், தான் ஓய்வு பெறப் போவதற்கான காரணம் குறித்து இன்னும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் தடைக் காலத்திலிருந்து திரும்பிய பின் எனக்கு முன்னாள் வாரியத் தலைவர் நிஜாம் சேத்தியும், முன்னாள் கேப்டன் அப்ரிதியும் ஆதரவு அளித்தார்கள். இருவருக்கு மட்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் சுயமாகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என கூறியுள்ளார். பாகிஸ்தான் அணிகளில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசும் அமீரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ள நிலையில், அவர் தெரிவித்துள்ள காரணமும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்குள் நடப்பது என்ன என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *