நடிகை சித்ராவின் மரணத்தில் பொலிஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் இன்று 5 வது நாளாக நசரத்பேட்டை பொலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் சில மாறுபட்ட தகவல்களை தெரிவித்து வருவதால் விசாரணை தொடர்கிறது. சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும், இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இவர்களின் திருமணத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

சம்பவம் நடந்த அன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு மேக்கப்பை கலைத்து குளித்துவிட்டு உடைகளை மாற்றிவிட்டு அறையில் நீண்ட நேரம் அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், சித்ரா படப்பிடிப்பில் இருந்து வந்தபோது வேறு உடையில் இருந்தார். இறக்கும்போது நைட்டியுடன் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தாயாருடன் பேசும்போது ஏற்பட்ட மனஉளைச்சல் ஒருபுறம் கணவரைவிட்டுப் பிரிய முடியாமலும், பெற்று வளர்த்த தாயின் பேச்சை தட்ட மனமில்லாமலும் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக பொலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

ஏற்கனவே, ஹேம்நாத் அவரது தந்தை, சித்ரா கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் பொலீசார் விசாரணை செய்து முடித்துள்ளனர். சித்ரா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் மீட்டபோது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வெளியிலிருந்து ஆம்புலன்சை வரவழைத்து உள்ளனர். எனவே அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் பொலீசார் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். நாளை முதல் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்ட உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ நாளை விசாரணையை  தொடங்க உள்ளார்.

முதலாவதாக சித்ராவின் பெற்றோரிடமும், அதனை தொடர்ந்து ஹேம்நாத்தின் பெற்றோரிடமும்,  இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை செய்ய உள்ளார். இரு தரப்பினருக்கும் தலா ஒரு மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை வளையத்தில் இருப்பதால் அவர்களுக்கு சம்மன் அனுப்ப தேவை இல்லை என்றும் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு மட்டும் சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் மாறுபட்ட தகவல்கள் வெளியானால் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *