கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகள் நாளை விடுவிப்பு!

நாளைய தினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி மற்றும் சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

மேலும், மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், கொழும்பின் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயூரா ஒழுங்கை தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை நாளை அதிகாலை 5 மணிக்கு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் அவ்வாறே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளும் நாளையதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டிய கிராம சேவையாளர் பிரிவு, ஹேகித்த கிராம சேவையாளர் பிரிவு, குருந்துஹேன கிராம சேவையாளர் பிரிவு, எவரிவத்த கிராம சேவையாளர் பிரிவு மற்றும் வெலிகடமுல்ல கிராம சேவையாளர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
மேலும், பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிய -வடக்கு கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டிய கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நய்துவ பிரதேசம் மற்றும் வெலிகடமுல்ல கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள துவே வத்த ஆகிய பிரதேசங்கள் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுணுபிட்டிய வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள வெதிகந்த பிரதேசம் மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில்  அமைந்துள்ள வாரண விகாரை வீதி, கத்தொட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை ஆகியவற்றுக்கு உட்பட்ட பிரதேசங்கள் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு ஆகிய பிரதேசங்கள் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் ஹீனிடியன்கல கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள மரிக்கார் வீதியும் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *