பாவித்த துணிகளில் இருந்து மீளத் துணிகள் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு!

உலகில் தயாரிக்கப்படும் உடைகளில் ஒரு சில விகிதமானவை மட்டுமே மீள்பாவிப்புக்காக உபயோகிக்கப்படுகின்றன. அழிந்துபோகும் பெரும்பகுதித் துணிகளுக்குப் பின்னாலிருக்கும் தயாரிப்புச் செலவு, சக்தி, தயாரிப்புக்காகப் பயன்படும் பூமியின் அளவு ஆகியவைகளைக் கவனிக்கும்போது குப்பையாகும் அந்த 85 விகிதத்துணிகளை மீண்டும் பாவிக்க முடியுமானால் இயற்கையை எவ்வளவு பாதுகாக்கலாம் என்பது புரியும்.

அப்படியான எண்ணத்தின் பின்னணியிலிருக்கும் கண்டுபிடிப்பே சுவீடன் நிறுவனமான ரினியூஸெல் அறிமுகம் செய்யும் ஸெல்லோலூஸ். டைம்ஸ் நிறுவனம் வருடாவருடம் சுட்டிக்காட்டும் உலகின் 100 முக்கிய கண்டுபிடிப்புக்களில் இவ்வருடத்துக்கானவையில் இடம்பிடித்திருக்கிறது ஸெல்லோலூஸ்.
பாவித்து முடிந்த துணிகளிலிருந்து இயற்கையை மாசுபடுத்தாத சக்தியையும், இரசாயணங்களையும் கொண்டு பருத்தித் துகள்களைப் பிரித்தெடுத்து அவற்றிலிருந்து திரும்பவும் துணிகளைத் தயாரிப்பதே ஸெல்லோலூஸின் வழி.

தற்போது சுமார் 5,000 தொன் துணிக்குப்பைகளைத் தயாரிப்புக்கு உட்படுத்தும் இந்த நிறுவனம் 2022 இல் தனது தயாரிப்பை 60,000 தொன்னாக அதிகரிக்கப்போகிறது. அது ஒரு வருடம் சுவீடனில் கொள்வனவு செய்யப்படும் உடைகளின் நிறைக்கு இணையானது.

ஹெச் அண்ட் எம், லெவி ஆகிய நிறுவனங்கள் இவ்வருடமே இத்தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உடைகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பருத்தித்துகள் தயாரிக்கும் நிறுவனமான Tanghsan Sanyou உடன் புதியதாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் இந்த நிறுவனம் அதன்மூலம் மிகப்பெருமளவில் தயாரிப்பைச் சர்வதேச அளவில் உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *