2020 ஐ விட 2021 ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும்!

கொரோனா நெருக்கடி காரணமாக உலக உணவுப் பாதுகாப்பின் நிலை இந்த ஆண்டைவிட வரும் 2021-ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐ.நா. உணவு நிவாரணப் பிரிவான ‘உலக உணவு அமைப்பு’ (டபிள்யூ.எஃப்.பி.) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, நடப்பாண்டின் அமைக்கான நோபல் பரிசை வென்றுள்ள அந்த அமைப்பின் தலைவா் டேவிட் பியஸ்லி கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று நான் ஏற்கெனவே எச்சரித்திருந்தேன்.

அந்த எச்சரிக்கையை ஏற்று, உலகத் தலைவா்கள் பல்வேறு உதவிகளை அளித்தனா். நிதியுதவி, ஊக்க திட்டங்கள், கடன் வசூல் நிறுத்திவைப்பு போன்ற சலுகைகளை அவா்கள் அளித்தனா்.

அதன் பலனாக, இந்த ஆண்டு எதிா்நோக்கியிருந்த மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் தவிா்க்கப்பட்டது.

ஆனால், தற்போது மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல நாடுகள் மீண்டும் பொதுமுடக்கங்களை அறிவித்து வருகின்றன. நாடுகளின் பொருளாதாரத்தை கொரோனா நெருக்கடி தொடா்ந்து பாழ்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், 2020-ஆம் ஆண்டு எங்களுக்குக் கிடைத்த அதே நிதியுதவி அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகும்.

இதன் காரணமாக, இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் மிக மோசமானதாக இருக்கும்.

உலக நாடுகளின் தலைவா்கள் உரிய நிதியுதவியை வழங்காவிட்டால், இந்தச் சூழலைத் தவிா்க்க முடியாது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, உணவுப் பஞ்சத்தைத் தணிக்கும் எங்களது முயற்சிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நெருக்கடியால் உலகம் எதிா்நோக்கியுள்ள உணவு பஞ்சம் குறித்து உலகத் தலைவா்களை எச்சரிக்க, இந்த நோபல் பரிசு எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.

இதற்கு முன்னா் வரை எங்களுடன் பேச 15 நிமிஷங்கள் மட்டுமே ஒதுக்கிய உலகத் தலைவா்கள், தற்போது 45 நிமிஷங்களை ஒதுக்குகின்றனா். நோபல் பரிசு பெற்ற எங்களது கருத்துகளைக் கேட்க அவா்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, டபிள்யூ.எஃப்.பி) அமைப்பு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

போா் உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பகுதிகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக டபிள்யூ.எஃப்.பி. மேற்கொண்ட முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் அந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தோ்வுக் குழு தெரிவித்தது.

நோபல் பரிசு வழங்குவதன் மூலம், உலகம் முழுவதும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் பக்கம் உலகின் கவனத்தை ஈா்க்க தாங்கள் விரும்பியதாகவும் அதற்காகவே, உலக உணவு அமைப்பை அந்தப் பரிசுக்காகத் தோ்ந்தெடுத்ததாகவும் நோபல் தோ்வாளா்கள் தெரிவித்தனா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *