இலங்கையில் தனி மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் சமுத்திரம்!

உலகில் எத்தனையோ சமுத்திரங்கள் காணப்படுகின்றன அவை அனைத்தும் , யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. இயற்கையாக உருவானதாகும்.

ஆனால் உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு சமுத்திரத்தைக் கொண்ட நாடு என்றால் அது கட்டாயம் இலங்கையாக மட்டுமே இருக்க முடியும். அந்தவகையில் மாபெரும் சமுத்திரமாக இலங்கையில் திகழும் ஒரு சமுத்திரம்தான் பராக்கிரம சமுத்திரம்.

“ வானத்திலிருந்து விழும் ஒருதுளி நீரையேனும் விவசாயத்திற்கு பயன்படாது வீணே கடலை சென்றடைய விடமாட்டேன்” என சிங்கம்போல் முழங்கிய ஒருவனின் படைப்பு, காலம் கடந்தாலும் இலங்கை தேசத்தின் வரலாற்றினையும் இலங்கைக்கான புகழையும் தினம் தினம் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நீர்த்தேக்கம்தான் பராக்கிரம சமுத்திரம்.

கி.பி 1153 முதல் 1186 வரை இலங்கையினை ஒரு குடையின் கீழ் கொண்டு ஆட்சிபுரிந்த மன்னனான முதலாம் பராக்கிரம பாகுவினால் பராக்கிரம சமுத்திரம் பொலன்நறுவையில் உருவாக்கப்பட்டது.

பொலன்னறுவை நகருக்கு முதன் முதலில் பயணம் மேற்கொள்ளும் ஒருவர் நகரை அண்மித்ததும் காணும் கால்வாய்க்கு அடுத்ததாக, இது குளமா அல்லது சமுத்திரமா என வாய் பிளக்கும் அளவுக்கு நீண்டு காணப்படும் சமுத்திரம் இது.

பல்வேறு தொழில்நுட்ப சக்திகளை வரலாற்று காலத்திலேயே பயன்படுத்தியமைக்கான சக்தியாக மிளிர்கின்றது.

கி.பி 1123 இல் கேகாலையில் புங்கமவில் அரசர் மாணா பரணவுக்கும் ரத்னாவலிக்கும் பராக்கிரமபாகு மகனாக பிறந்தான்.

இராச்சியங்களை ஒன்றினைப்பதிலும் இலங்கை நாட்டை குறிப்பாக பொலன்னறுவையை வளர்ச்சி மிக்க பிரதேசமாகவும் மாற்றுவதற்காக அயராது உழைத்தான்.

மேலும் தன்னுடைய தலைநகரை அழகாக பேணுதல், மேற்பார்வை செய்தல், போன்ற பணிகளில் சுயமாகவே ஈடுபட்டான்.

இவனின் ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்படாத குளங்கள் அதிகம் காணப்பட்டன. எனவே குளங்களை புனரமைத்து நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதில் அதிகம் கரிசனையுடன் செயற்பட்டான்.

குறிப்பாக அந்த காலத்திலேயே தனது நாட்டுக்கென தனியானதொரு இராணுவப்படைகளை உருவாக்கி வைத்திருந்தான்.

விவசாயத் தேவைகளுக்கு இவன் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் இலங்கையை தெற்காசியாவின் தானியக்களஞ்சியம் என பெயர் வருவதற்கு காரணமாக அமைந்தது.

“ வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் விவசாயத்திற்கு பயன்படாது வீணே கடலை சென்றடைய விடமாட்டேன்” என்பதே அவனது புகழ்பெற்ற மகுட வாசகமாகும்.

நாட்டின் விவசாயத் தேவைக்காக தனியானதொரு நீர்த்தேக்கத்தை உருவாக்க நினைத்தான், அதற்கு பராக்கிரம சமுத்திரம் என பெயரிட்டதோடு பெயருக்கேற்றாற் போல மிகப்பெரும் சமுத்திரத்தை உருவாக்கினான்.

55 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்டடத்தை எழுப்பினான். இச்சமுத்திரத்தின் நீர்க்கொள்ளளவு 109,000 ஏக்கர் அடியாகும்.

சமுத்திரத்தின் பிரதான மூன்று ”கலிங்கற்களால்” விவசாயத்திற்கு தேவையான நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

குறிப்பாக சமுத்திரத்தில் நீர் மட்டம் குறையாதிருக்க தோபா வாவி, எரமுது வாவி, தும்புட்டுழு வாவி, கல்லகஹல வாவி, பூ வாவி, பெதி வாவி முதலான வாவிகளை பராக்கிரம சமுத்திரத்தோடு இணைத்தான்.

ஆனாலும் பராக்கிரம சமுத்திரத்தோடு 11 வாவிகள் தொடர்புபட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது.

குறித்த வாவி மூலம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வயற்பரப்புக்கு நீர் விநியோகம் செய்யப்படும் அளவிற்கு நீர்மட்டம் நிரம்பி காணப்பட்டது.

இதன் காரணமாக பெருமளவிலான உற்பத்திகள் அதிகரித்தன. பராக்கிரமபாகுவின் ஆட்சி காலம் வரலாற்றில் தடம் பதிப்பதற்கு அவன் ஆற்றிய சேவைகளே பெரும்பாலும் காரணமாயின.

ஆனாலும் இந்நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்காக இவன் பயன்படுத்திய தொழில்நுட்பம் தற்கால தொழில்நுட்பவியலாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இச்சமுத்திரம் உருவாக்கப்பட்டது என்பது புரியாத பதிராகவே காணப்படுகின்றது.

ஏனெனில் தனி மனிதன் மாபெரும் சமுத்திரம் போன்று ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கியிருக்கின்றான் என்றால் எத்தகைய தொழில்நுட்ப அறிவினை கொண்டிருக்க வேண்டும் என பொறியிலாளர்களே பிரமித்து நிற்கின்றனர்.

பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கட்டப்படும் இன்றைய கட்டடங்களுக்கு அமைவாக கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கு மேல் நிலைத்து நிற்கும் ஒரு சமுத்திரத்தை தனி மனிதனால் எவ்வாறு சிந்தனை செய்து படைத்திருக்க முடியும் என்று பலரும் குழம்பிதான் போயுள்ளனர்.

ஆனாலும் அவர்களின் கனவு, எதிர்பார்ப்பு என்பவற்றையெல்லாம் தகர்த்து வரலாற்றில் நினைத்துப்பார்க்க முடியாதளவிற்கு சாதனையின் சின்னமாகவும் விவசாயத்தின் அடித்தளமாகவும், பராக்கிரம சமுத்திரம் மிளிர்கின்றது.

இலங்கையில் விவசாயத்திற்கென உருவாக்கப்பட்ட மாபெரும் சமுத்திரமும் இதுதான். உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு செயற்கை சமுத்திரமும் இதுதான்.

காலங்கள் அழிந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகள் தாண்டினாலும் அழியாத இலங்கையின் சின்னமாய் இது மட்டுமே வரலாற்றில் அழுத்தமாகப்பதியப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *