உலக மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான சிங்கக் குகை சிகிரியா!

இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி எனும் நகருக்கு 72 km வட கிழக்கே மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.கி.பி 5 ம் நூற்றாண்டில் காசியப்பன் எனும் மன்னன் (கி.பி 473-491) இக் குன்றின் மீது மிகப் பெரிய அரண்மனையை கட்டி இதனை தன் தலைநகராகக் கொண்டான்.கி.மு காலத்தில் இருந்தே இக் குன்று முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

இதனை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள்உறுதிப்படுத்துகின்றன. அகழ்வாய்வின் மூலம் சுடுமண் பாவைகள்,யானை உருவங்கள் மற்றும் நாணயங்கள் குறிப்பாக கர்ஷாபணம், ஹகபண போன்ற நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்குத்தான இக் குன்றின் மீது ஏற படிக்கட்டுக்களை அமைத்து அதற்கு சிங்க உருவ அமைப்பில் ஒரு நூழைவாயிலும் அமைக்கப் பட்டுள்ளது.இதனால் இக் குன்று சிங்க மலை என்ற பொருள் கொண்ட சிகிரியா எனப்பட்டது.

இப் பகுதியின் பெருமையை கி.பி 1831 ல் கண்டுபிடித்து உலகறியச் செய்தவர் பார்பசு என்பவர் ஆவார்.செனிவரட்னா என்ற தொல்லியலாளர் இங்கு மேற்கொண்ட அகழ்வாய்வின் மூலம் பெருங்கற்காலப் பண்பாடும் அதற்கு முற்பட்ட பண்பாட்டு மக்களும் வாழ்ந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
           காலத்தால் முற்பட்ட பிராமணிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தக் கூடிய சுடுமண் சிற்பங்கள் இப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற சிகிரியாக் குகையுடன் இருக்கைக் குகை,நாகபடக் குகை, சித்திரகூடக் குகை போன்ற முக்கியமான மூன்று குகைகள் காணப்படுகின்றன. குகையின் கீழ்ப் பகுதியில் உள்ள நாகபடக்குகையின் மேல் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டு கி.பி முதலாம் நூற்றாண்டுக்குரியது. குன்றின் கீழ்ப் பகுதியில் அழகிய பூங்கா ஒன்றின் இடிபாடுகள் காணப்படுகின்றன. மனதைக் கவரும் குளங்கள்,அரச மாளிகைகள்,நீர்க் கால்வாய்கள்,அகழிகள் போன்றவற்றால் சிகிரியா சூழப்பட்டுள்ளது.

500 வரையான சிகிரியா ஓவியங்கள் இருந்ததாக இங்குள்ள சுவர்க்கவிகள் சுட்டிக் காட்டுகின்றன.1300 ஆண்டுகளுக்கு முன்பு இது தீட்டப்பட்டுள்ளது.தற்பொழுது 12 பெண் உருவ ஓவியங்களே காணப்படுகின்றது. உயரமான பாறையின் மேற்கு முகப்பில் மிகுந்த அபாயகரமான நிலையில் இவ் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இவ் ஓவியங்கள் புராதன கால கலைத்திறனின் உயர்ந்த தன்மையையும் தெளிவான அழகான புறவுருவ வரைபு வேலைப்பாட்டையும் வண்ணச்சாயலின் கனிசத்தையும் வெளிக்காட்டுகின்றன.
        உலகின் எப்பாகத்திலும் உள்ள தலை சிறந்த ஓவியங்களுடன் ஒப்பிட்டு பார்க்குமளவிற்கு கலைத்திறன் கொண்டதாக இவ் ஓவியங்கள் காணப்படுகின்றன.இங்கு காணப்படுகின்ற பெண் உருவங்கள் பொன்னிறம் உடையதாகவும் மாமை நிறம் உடையதாகவும் தீட்டப்பட்டுள்ளது. இடுப்பிற்கு கீழே முகிற கற்றைகள் இவ்வுருவங்களை மறைக்கின்றன. பொன்னிறப் பெண்களில் சிலர் மார்பினை மென்மையான உடையால் அலங்கரித்துள்ளதை இவ் ஓவியங்கள் புலப்படுத்துகின்றன.எல்லாப் பெண்களும் பெறுமதியான தலைக் கிரீடங்களை அணிந்துள்ளனர்.எல்லோரினதும் இடைப்பகுதி ஆடை அலங்காரங்களால் மறைக்கப்பட்டுள்ளது.ஒரு சில பகுதிகள் முகில்களால் மறைக்கப்பட்ட நிலையில் வரையப்பட்டுள்ளன.

இப் பெண்களின் கைகளில் கைமுத்திரைகள் காணப்படுகின்றன.இவ் ஓவியங்கள் ஈரமான கலவையால் வரையப்பட்டுள்ளன. இவ்வாறான ஈரக்கலவையில் ஓவியம் வரையும் முறை “ப்ரெஸ்கேர் புவனோ” அதாவது ஈரச்சுதை ஓவியம் என அழைக்கப்படுகின்றது.இவ் ஓவியங்களில் நேர் கோடுகள் முன்பு வரையப்பட்டது போன்று இருப்பதை காணலாம்.
        இவ் ஓவியம் வரைவதற்கு களி,மணல்,சுண்ணாம்பு,தும்பு,தேன், முட்டை,பசை போன்ற கலவைகளை உபயோகித்துள்ளனர்.சிகிரியா ஓவியங்களில் கடும் சிகப்பு,கடும் மஞ்சள், பொன் மஞ்சள்,பச்சைக் கபிலம்,கறுப்பு என்பன அதிகமாகவும் பச்சை வர்ணம் மிகக் குறைவாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது.இந்த ஓவியங்களின் நிறங்கள் இன்று வரை மங்காமல் பிரகாசித்த வண்ணமே காணப்படுகின்றன.இது அக்கால நிறத் தயாரிப்பு திறமையை புலப் படுத்துகின்றன.ஓவியங்களின் முப்பரிமாணத்தை காட்டும் போது ஔி,நிழல்,பரிமாண அளவு,எழில் என்பன சிறந்த முறையில் காட்டப்பட்டுள்ளது. மங்கையரின் கண்கள் கயல் விழிகள் போலவும் நீண்ட மூக்கு, திரண்ட மார்பு, நீள்விரல் ,நுண்ணிய இடை ஆகியன ஓவியத்தின் சிறப்பையும், ஓவியரின் திறனையும் வெளிக் காட்டுகின்றது.
       இவ் ஓவியங்கள் ஈரச்சுதை முறையில் கலை நுணுக்கங்களுடன் நிறம் மங்காதவாறு பிரகாசிப்பதனாலும், உள்நாட்டு சுதேச பண்புகளை பிரதிபலிப்பதனாலும் உலகப் பிரசித்தி பெற்ற ஓவியங்களாக திகழ்கின்றன. இதனால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.1300 ஆண்டுகளிற்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்னும் மாறாத நிலையில் இருப்பதற்கு அதன் இரசாயன கலவை முறை ஓவியம் தீட்டுதலில் பின்பற்றப்பட்ட கணித முறையும் தொழில்நுட்பமும் இயற்கையாக அமைந்த குகையை செயற்கையாக வடிவமைத்தலில் பின்பற்றப்பட்ட பொறியியல் தொழில்நுட்பம் காரணமாகவும் இங்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.அத்தோடு இது இந்திய அஜந்தா குகை ஓவியத்தினை ஒத்ததாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான சிறப்புக்களை கொண்டு மிகப் பழமையான மையமாக காணப் படுவதினால் இது இலங்கையின் மிக முக்கிய தொல்லியல் மையமாக திகழ்கின்றது.மேற்கூறப்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்ததால் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பண்பாட்டு மரபுரிமைச் சுற்றுலா மையங்களில் ஒன்றாக பிரகடணப் படுத்தப்பட்டுள்ளது.இதனால் சிகிரியா இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் பரிணமித்துள்ளது.இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டி தருகின்ற மிக முக்கிய தொல்லியற் சுற்றுலா மையமாகவும் இது திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *