உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம்!


அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் 30 நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ என்ற சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தண்ணீர் பற்றாக் குறையால் ஏற்கனவே உலகின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய்வு முடிவு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வில், வரும் 2050ம் ஆண்டில் உலகின் 100 பெரு நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதில், 30 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்திய நகரங்களில் ஜெய்ப்பூர் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தானே, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

உலகளவில் பெய்ஜிங், ஜகார்த்தா, ஜோகன்னஸ்பர்க், இஸ்தான்புல், ஹாங்காங், மெக்கா, ரியோ டி ஜெனிரோ உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சீனாவின் கிட்டதட்ட பாதி நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

2050ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படும் 100 நகரங்களில் தற்போது 35 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அலவில் பொருளாதார ரீதியில் முக்கிய நகரங்களாக இவை உள்ளன.

உலகில் தற்போது 17 சதவிகித மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். 2050ல் இது 51 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது.

இந்த நிதியத்தின் இந்திய கிளைக்கான திட்ட இயக்குநர் செஜல் வோரா கூறுகையில், “இந்தியாவின் சுற்றுச்சூழல் எதிர்காலம் அதன் நகரங்களை சார்ந்துள்ளது.

இந்தியா விரைவாக நகரமயமாக்கப்பட்டு வருவதால் அதன் வளர்ச்சியில் நகரங்கள் முன்னணியில் இருக்கும். நகர்ப்புற நீராதாரங்களை புனரமைப்பது, நீர்பிடிப்புப் பகுதிகளை மீட்டெடுப்பது போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகள் இந்தியாவுக்கு நன்மைகளை வழங்கக் கூடும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *