காலநிலை மாற்றத்தால்  புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!

காலநிலை மாற்றத்தால்  புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்றவற்றால் சூழலியலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தி லான்செட் ஆன்காலஜி இதழ் காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு, காற்று மாசுபாடு, தொற்றுநோய் பாதிப்புகள், உணவு மற்றும் நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவையைத் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய போரில், பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் உலக நாடுகள் சரியாக ஈடுபடுவதில்லை என கவலை தெரிவித்துள்ள இந்த ஆய்வு காலநிலை மாற்றம் மனித ஆரோக்கியத்தில் அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மாறிவரும் பருவமழை முறைகள் போன்றவற்றால் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் பரவலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் 21 ஆம் நூற்றாண்டில் புற்றுநோய் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்றும் 2050 ஆம் ஆண்டளவில் உணவு விநியோகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களின் விளைவாக புற்றுநோய் இறப்புகள் உள்பட உலகளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான காலநிலை தொடர்பான இறப்புகள் ஏற்படும் என இந்த ஆய்வு கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *