முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று விஜய் சேதுபதி விலகல்!

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து  நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், முத்தையா முரளிதரன் அறிக்கையை மேற்கோள்காட்டி  நன்றி வணக்கம் என்று பதிவிட்டுள்ளார். அதில், வணக்கம், எனது சயசரிதை படமான 800 திரைப்படத்தை பற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏறபடுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான  புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன்  பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலகளில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக்  கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம்  கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த  படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன்.  இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக  இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக  மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *