வத்திகானில் முதல்முறையாக பாலியல் அத்துமீறல் குறித்து விசாரணை!

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவின் தலைமையகமான வத்திகானில், முதல்முறையாக பாலியல் அத்துமீறல் குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது.

இதன்படி, பாலியல் அத்துமீறல் குறித்த முதல் விசாரணையில் இரண்டு கத்தோலிக்க மதகுருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் திருச்சபை உதவியாளராக பணியாற்றிய சிறுவன் ஒருவனை 2007ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேப்ரியல் மார்டினெல்லி எனும் 28 வயதாகும் பாதிரியார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வத்திகானில் உள்ள சமயப் பாடசாலைக்கு தலைமை தாங்கிய என்ரிகோ ரேடைஸ் எனும் 72 வயதாகும் பாதிரியார் அந்தப் பாலியல் குற்றத்தை மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவர்கள் இருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இது குறித்து கருத்து எதையும் வெளியிடவில்லை.

வத்திகான் நகரிலேயே பாலியல் அத்துமீறல் குறித்த விசாரணை நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *