கையடக்க தொலைபேசியில் கொரோனா 28 நாட்கள் உயிருடன் இருக்குமாம்!

கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த ஆய்வானது இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்படும் வைரஸ் பரவுவதால் ஏற்படும் உண்மையான அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது பேசும்போதே பரவுகிறது.

ஆனால், காற்றில் மிதக்கும் துகள்களாலும் இது பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. கொரோனா வைரஸ் படர்ந்துள்ள உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றை தொடுவதன் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பரவக்கூடும் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில், பணத்தாள்கள் மற்றும் கண்ணாடிகளில் கொரோனா வைரஸ், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையிலும், பிளாஸ்டிக் மற்றும் துருவுறா எஃகு மீது ஆறு நாட்கள் வரையிலும் உயிர்ப்புடன் இருக்கும் என்று கண்டறியப்பட்டிருந்தது.

இருப்பினும், ஆஸ்திரேலிய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸானது, செல்பேசி திரைகளில் காணப்படும் கண்ணாடி, பிளாஸ்டிக், பணத்தாள்கள் போன்ற மென்மையான பரப்புகளில் 28 நாட்கள் தொற்றும் தன்மையுடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, இருட்டில், 20 டிகிரி செல்ஸியஸ் அறை வெப்பநிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண காய்ச்சலை ஏற்படும் வைரஸ்கள் இதே சூழ்நிலையில் அதிகபட்சம் 17 நாட்கள் மட்டுமே தொற்றும் தன்மையுடன் இருக்கும்.

வைராலஜி ஜர்னல் என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையில், SARS-Cov-2 வைரஸ் குளிர்ந்த வெப்பநிலையை விட வெப்பமான சூழ்நிலையில் குறைந்த நேரம் மட்டுமே தொற்றும் தன்மையுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 40 டிகிரி வெப்பநிலையில் சில பொருட்களின் மேற்பரப்புகளில் 24 மணி நேரத்திற்குள் வைரஸ் தொற்றும் தன்மையை இழந்துவிடுவதும் தெரியவந்துள்ளது.

துணி போன்ற நுண்ணிய பொருள்களைக் காட்டிலும் மென்மையான, நுண்துளை இல்லாத பரப்புகளில் கொரோனா வைரஸ் நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் காமன் கோல்டு மையத்தின் (Common Cold Centre) முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான ரான் எக்லெஸ், கொரோனா வைரஸ் பல்வேறு பரப்புகளில் 28 நாட்கள் வரை உயிர்வாழ முடியும் என்ற ஆய்வு முடிவு “பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை” ஏற்படுத்துவதாக விமர்சனம் செய்துள்ளார்.

“இருமல், தும்மல் உள்ளிட்டவற்றின்போது வெளியேறும் சளி மற்றும் அழுக்கு விரல்களின் மூலம் பரப்புகளில் வைரஸ்கள் படர்கின்றன. ஆனால், இந்த ஆய்வில் மனிதர்களின் சளியை முதலாக கொண்டு சோதனை நடத்தப்படவில்லை” என்று அவர் கூறினார்.

“வைரஸ்களை அழிக்க நொதிகளை உருவாக்கும் ஏராளமான வெள்ளை செல்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பிற ரசாயனங்களை கொண்டுள்ளதால் சளி, வைரஸ்களுக்கு எதிரான சூழலாகும். எனவே, என்னைப்பொறுத்தவரை பரப்புகளில் படரும் சளியில் உள்ள வைரஸ்கள் சில மணிநேரங்கள் மட்டுமே தொற்றும் தன்மையுடன் இருக்குமே தவிர, நாட்கணக்கில் அல்ல” என்று அவர் கூறுகிறார்.

கடந்த ஜூலை மாதம் இதையொத்த தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் எமானுவேல் கோல்ட்மேன், “உயிரற்ற மேற்பரப்புகள் வழியாக நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ்கள் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதற்கு நேரெதிரான கருத்துகளை முன்வைக்கும் ஆய்வுகள் ‘நிஜ வாழ்க்கையுடன்’ ஒத்தில்லாத சூழ்நிலையில் மேற்கொள்ளப்படுகிறது” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியரான மோனிகா காந்தி, கொரோனா வைரஸ் உயிரற்ற பரப்புகள் வழியே பரவவில்லை என்று கூறியிருந்தார்.

“வைரஸ் உண்மையில் எவ்வளவு காலம் பல்வேறு பொருட்களின் மேற்பரப்பில் தொற்றும் தன்மையுடன் இருக்கிறது என்பதை நிறுவுவது, அதன் பரவலை இன்னும் துல்லியமாக கணிக்கவும் குறைக்கவும் உதவுகிறது” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான லாரி மார்ஷல் கூறியுள்ளார்.

குளிரான வெப்பநிலையில் துருவுறா எஃகு பரப்புகளின் மீது கொரோனா வைரஸ் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பது அந்த வைரஸ் இறைச்சி சந்தையில் இருந்து பரவியதற்கான காரணத்தை விளக்கும் வகையில் அமைத்துள்ளன.

உலகமெங்கும் இறைச்சி கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, போதிய சமூக இடைவெளி இன்றியும், குளிர்ச்சியான அல்லது ஈரமான இடத்திலும், இயந்திரங்களின் சத்தத்திற்கு எதிராக வலுவாக கத்தி பேசுவது உள்ளிட்டவற்றின் காரணமாக நோய்த்தொற்று அதிகம் பரவுவதாக கூறப்பட்டது.

புதிய மற்றும் உறைந்த நிலையில் உள்ள உணவில் வைரஸ் உயிர்வாழ முடியும் என்று கூறிய முந்தைய ஆய்வு முடிவுகளையும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆதரித்துள்ளனர்.

“தற்போதைய சூழ்நிலையில், உணவு அல்லது உணவு பொட்டலங்கள் வழியே கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை” என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனினும், மறைமுகமாக வழிகளில் நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அது பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *