IPL போட்டியில் சென்னை அணி அபார வெற்றி!

போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 18-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.

179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வாட்சன் 2 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார்.
ஆனால், அடுத்த ஓவரில் ஷமி முதல் 2 பந்துகளை சிறப்பாக வீச வாட்சன் சற்று திணறினார். ஆனால், 3-வது பந்தை வைடாக வீச சென்னைக்கு பவுண்டரி கிடைத்தது.
இதன்பிறகு வாட்சன், டு பிளெஸ்ஸி இருவரும் திணறல் இல்லாமல் துடுப்பெடுத்தாடினர். ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து விளையாட முதல் 5 ஓவர்களில் சென்னை அணி 40 ஓட்டங்கள் எடுத்தது.

ஜார்டன் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் டு பிளெஸ்ஸி 4 பவுண்டரிகள் அடிக்க சென்னை இன்னிங்ஸுக்கும் டு பிளெஸ்ஸிக்கும் அது நேர்மறையாக அமைந்தது.

இதன்பிறகு, இருவரும் தங்களது அனுபவத்தைப் பயன்படுத்தி ஓட்ட வேகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்து, விக்கெட்டையும் பாதுகாத்து சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
இதனால், ஓவருக்கு 10 ஓட்டங்கள் என்ற ரீதியிலேய ஓட்ட வேகம் இருந்து வந்தது. அதேசமயம், 10 ஓவரிலேயே சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை எட்டியது.

ஜார்டன் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த வாட்சன் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அதே ஓவரில் டு பிளெஸ்ஸியும் தனது 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். இந்த ஆட்டத்தால் வெற்றிக்குத் தேவையான ஓட்ட வேகம் ஓவருக்கு 8-க்கு கீழ் குறைந்தது.

6-வது பந்துவீச்சாளரும் இல்லாததால், பந்துவீச்சு மாற்றம் இல்லாமல் பஞ்சாப் அணி திணறியது.

இதையும், இதுவரை போட்ட அடித்தளத்தையும் நன்கு பயன்படுத்தி வாட்சனும், டு பிளெஸ்ஸியும் விளையாடினர். இதன்மூலம், சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 15-வது ஓவரில் 150 ஓட்டங்களை எட்டியது.

இதன்பிறகு, டு பிளெஸ்ஸி துரிதமாக விளையாடினார். ஷமி வீசிய 18-வது ஓவரில் டு பிளெஸ்ஸி சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் எடுத்த சென்னை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெட் ரன்ரேட்டும் உயரும் வகையில் சென்னை அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வாட்சன் 83 ஓட்டங்களுடனும், டு பிளெஸ்ஸி 87 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு சென்னையின் அதிகபட்ச பாட்னர்ஷிப் இதுவாகும்.

விக்கெட் இழப்பின்றி 2-வது அதிகபட்ச சேஸிங்க் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *