மகாத்மா காந்தியை மாற்றிய மதுரை வீடு!

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளையொட்டி காந்தியின் வாழ்க்கை குறித்த மீள்பதிவு…

தூரத்தில் கோவில் கோபுரங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. புகை வண்டி மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது. வானத்தில் இளம் வெளிச்சம் பரவி பொழுது விடிந்து கொண்டிருந்தது.

காந்தி இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இரவில் ரயிலில் ஏறி உட்கார்ந்ததும் பலர் அவரிடம் பேச விரும்பினார்கள்.

அவர்களுடைய உடைகளைக் கவனித்தார் காந்தி. பெரும்பாலும் வெளிநாட்டு ஆலைகளிலிருந்து கொடுக்கப்பட்ட துணிகளில் தைக்கப்பட்ட உடைகள்.
பத்து முழம் வேட்டி. மேலே சட்டை அதன் மேல் ஓர் அங்கவஸ்திரம். தலையில் தொப்பி அணிந்து குஜராத்தியத் தோற்றத்தில் மற்ற பயணிகளிடமிருந்து தனித்துத் தெரிந்தார்.

மற்றவர்களுடன் பேசும்போது காந்தி இயல்பாக மென்குரலில் கேட்டார்.

“ஏன் கதர்த் துணிகளை நீங்கள் அணிவதில்லை? இப்படி வெளிநாட்டுத் துணிகளை அணிந்திருக்கிறீர்களே?’’
மகாத்மாவாகத் தாங்கள் உணர்ந்தவருக்கு முன்னால், பொய் சொல்லவில்லை அந்தப் பயணிகள்.

“கைத்தறித் துணிகளை வாங்க எங்களுக்கு வசதியில்லை’’ எளிமையான பதில் தான். ஆனால் காந்தியைச் சிந்திக்க வைத்தது.

கையால் நூற்கப்படும் கைத்தறித் துணிகளின் விலை அப்போது சற்றே அதிகம். உடைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததால் தூங்க நேரமானது.
மதுரை நெருங்கிவிட்டது. வெளியே பார்த்தார் காந்தி. இரண்டாவது முறையாக மதுரைக்கு வரும் அவரை வரவேற்கப் பெருங்கூட்டம் திரண்டிருந்தது.
காந்தியைப் பார்த்ததும் அவர்களுக்குப் பரவசம். முழக்கங்களை எழுப்பினார்கள். வருகையைக் கொண்டாடினார்கள்.

கூட்டம் சூழ ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார் காந்தி.
மேலமாசி வீதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களான ராம்ஜி, கல்யாண்ஜியின் வீட்டில் தங்க ஏற்பாடு ஆகியிருந்தது. கோலாகலம் சூழ காந்தி வீட்டிற்குள் நுழைந்தார்.

அவரைப் பார்க்க நிறையப் பேர் யத்தனித்தாா்கள் வீதியில் பகல் வேளையில் கடந்து போன எளிய மக்கள். எல்லாரையுமே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் காந்தி.
அவர்களில் பெரும்பாலானவர்கள் எளிய உடையையே அணிந்திருந்தார்கள். இடுப்பைச் சுற்றி ஒரு வேட்டி. திறந்த மார்பு. பெரும்பாலும் மேலாடை இல்லை. அவ்வளவு தான்.

அவர்களுடைய வாழ்வின் எளிமையைச் சொல்லின அந்த ஆடம்பரமில்லாத உடைகள். மௌனமாகக் கற்றுக் கொடுத்தார்கள் மதுரை மக்கள்.

“லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணி கூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா?’’-
கேள்வி மனதிற்குள் எழுந்ததும் தன்னை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தார். தலைப்பாகை, மேலாடை, அங்கவஸ்திரம் அனைத்தையும் களைந்தார்.

பத்து முழத்திற்கு நீண்ட வேட்டியைக் கிழித்து நான்கு முழமாக்கினார். இடுப்பைச் சுற்றிக் கட்டினார்.

சட்டென்று அவருடைய தோற்றம் எளிய கார்ட்டூனைப் போலச் சுருங்கிவிட்டது.
இடுப்பில் அரையாடையோடு வெளியே கிளம்பியபோது அவருடன் இருந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். மக்களோ அதிசயமாகப் பார்த்தார்கள்.

அன்றைக்கு தெப்பக்குளம் போகிற சாலையில் உள்ள பொட்டலில் கூட்டம். மாறுபட்ட தோற்றத்துடன் வந்திருந்த காந்தியைப் பார்க்க கூட்டம் அலைமோதியது.
அவருடைய சராசரித் தோற்றம் சாதாரண மனிதர்களிடம் அவர்களுக்குள் ஒருவரைப் போல உணர வைத்தது.

அன்றையக் கூட்டத்தில் அதையும் அவரே தெளிய வைத்தார். “இனி இது தான் என்னுடைய உடை’’ என்றார்.

“கதராடை அணிந்து சுதேசி இயக்கத்தை வலுப்படுத்தினால் தான் சுயராஜ்யம் பெற முடியும்’’ என்று பேசிய போதிலும் – அவருடைய பேச்சை விட, மக்களிடம் பேசப்பட்டது அவருடைய மாறிய தோற்றம் தான்.

இந்த மாற்றம் நடந்தது 1921 செப்டம்பர் 20 ஆம் தேதி.

“நீண்ட யோசனைக்குப் பிறகே நான் எந்த முடிவையும் எடுப்பது வழக்கம். முடிவு எடுத்தபிறகு நான் வருந்த மாட்டேன். இந்த மாற்றம் இனி தவிர்க்க முடியாதது.

மதுரையிலிருந்து இதை ஆரம்பித்திருக்கிறேன்’’ என்று ஒரு வாரத்திற்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் ‘நவஜீவன்’ இதழில் (02.10.1921) எழுதியிருக்கிறார் காந்தி.

“எனது ஆடையை எந்த அளவுக்குக் குறைக்க இயலுமோ, அது தான் இந்த அரைகுறை ஆடையணிந்த மக்களுடன் என்னைச் சமன்படுத்த உதவும்’’ என்று உணர்ந்ததாக அன்று காந்தியைச் சொல்ல வைத்து, அவருடைய தோற்றத்தை மாற்றிய அந்த வீடு இன்னும் அதே பழமையின் மெருகோடு மேலமாசி வீதியில் இருக்கிறது.
இந்த வீட்டில் காந்தி தங்கியிருந்தது மூன்று நாட்கள். இப்போது காதி விற்பனைக் கூடமாக இயங்குகிற வீட்டின் முன்னால் ஒரு போர்டு அன்றைய மாற்றத்திற்கான சாட்சியத்தைப் போல.

தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு காந்தி பேசிய இடத்தை இப்போது “காந்தி பொட்டல்’’ என்றழைக்கிறார்கள்.
அன்று பேசிய இடத்தில் காந்தியின் முழு உருவச்சிலை. கீழே அதை அறிவிக்கும் கல்வெட்டு.

காமராஜர் மீதும், சிவாஜி மீதும் பற்று வைத்திருப்பவர்கள் இந்த இடத்தைக் கவனத்துடன் பராமரிக்கிறார்கள்.
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் “எதுவும் மாறும்’’ எனச்சொல்லும் காலத்தின் உறைந்த அடையாளங்களாக இன்னுமிருக்கின்றன அந்த இடங்கள்.

இங்கிருந்து நான்கு கி.மீ தூரத்தில் இருக்கிற காந்தி மியூசியத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் மறைந்தபோது, அவருடைய ரத்தம் சிந்திய வேட்டியின் ஒரு பகுதி மரக்கலரில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
உடை விஷயத்தில் மதுரையில் காந்தியின் மனசில் உருவான மாற்றம், வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற போதும் மாறவில்லை.

எந்த அதிகார மையத்தைச் சந்தித்தபோதும் அதே உடையை மாற்றிக் கொள்ளவில்லை. இறக்கும்போதும் அதே உடை தான்.

மற்றவர்களை காதி உடுத்தச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் விலையுயர்ந்த ஆடை அணிகிற வினோதத்தை காந்தி செய்யவில்லை..

எதிலும் வெளிப்படையாக இருந்தார் – உடையைப் போலவே.

“எதை நான் பின்பற்றத் தயாராக இல்லையோ, அதை நான் எப்போதும் பிறருக்கு உபதேசம் செய்யத் தயங்கியிருக்கிறேன்’’

அவர் மீது கருத்து முரண்கள் பலருக்கு இருந்தாலும் – காந்தி சொன்ன சொல்லுக்கு அவருடைய வாழ்க்கையே சாட்சியமாக இருக்கிறது.

அந்த வாழ்வே நிறைவான ஒரு செய்தி தானே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *