பாபர் மசூதி தொடர்பாக 1992 ஆம் ஆண்டு தினமணியில் வெளியான தலையங்கம்!

தலைகுனிய வைத்த தினம்’
1992 டிசம்பர் 6 ஆம் திகதி அன்று பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் திகதியன்று தினமணி நாளிதழ் இதழில் வெளியான தலையங்கம்.

தலைப்பு : தேசத் துரோகம்

ஞாயின்று அயோத்தியில் நடந்த அட்டூழியம் நமது தேசத்தின் கெளரவத்துக்கே இழுக்காகும். ஒரு மதத் தொடர்பான இலக்கை அடைவதற்கு ஏமாற்று வேலை, மிருக வெறிச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கக்கூடிய, தயாரான நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சி இருக்கிறது என்பதை நாட்டுக்கு அம்பலமாக்கியிருக்கிறது.

இந்தியாவின் ஆளும்கட்சியோ முதுகெலும்பு இல்லாமல் செயல்படுவதில் புதிய சாதனை நிகழ்த்தியிருக்கிறது. தன்னுடைய கையாலாகாதத் தனத்தை வெட்கப்படத்தக்க, செயலற்ற, கையைக் கட்டிக் கொண்டிருக்கும் உத்தியாக காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டிருக்காவிட்டால், மதில் மேல் பூனையாக நடந்து கொள்ளுதல், நாசவேலை இவற்றின் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்று பாரதீய  ஜனதாக் கட்சி  நம்பியிராவிட்டால், கடந்த சில வருஷங்களாக மசூதி, கோவில் என்ற பெயரில் நீடித்து வந்த பிரச்சினை இந்த அளவுக்குப் பூதாகரமாக உருப்பெற்றிருக்காது.

ஞாயிறு அன்று நடந்த அறிவுக்கு ஒத்துவராத, ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவங்களால் ஏற்கனவே வகுப்புவாத, தீவிரவாதப் போக்கால், நலிந்த நிலையில் உள்ள நமது சகோரத்துவ உணர்வு இன்னும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் கொஞ்சங்கூட சந்தேகமில்லை.
அயோத்தியில் நடந்த சம்பவங்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை சொல்வது உண்மை என்று நம்பும் அளவுக்கு யாரும் அறிவில்லாதவர்கள் அல்ல. அயோத்தியில் நடந்த அட்டூழியங்களும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜிரங்தள் ஆகியவற்றின் தலைவர்களின் சொல்படி நடப்பதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதைக் கடைசி நாட்களில் நடந்த சம்பவங்களும் உறுதி செய்கின்றன.

தங்களது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத் தீவிரவாதிகளிடம் விட்டுவிட்டார்கள் என்பதை அதற்கடுத்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் உறுதி செய்கின்றன.

உச்சநீதிமன்ற ஆணை மீறப்படாது என்று உ.பி. முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த உறுதி மீறப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் வெட்கமில்லாமல் கைகழுவி விடப்பட்டது.
அதற்குப் பிறகு, முதல்வர் பதவியிலிருந்து விலகுவதைத் தவிர, கல்யாண்சிங்கிற்கு வேறு வழியில்லை. சங்கலித் தொடர் போல் நடந்த சம்பவங்கள் அவர்கள் கையை மீறி நடந்ததாகக் கூறும் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உச்சநீதிமன்றம் கோரியபடி பிரமாண வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துவிட்டு இத்தகைய எதிர்பாராத சம்பவத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினால், அதையும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மிகவும் அச்சம் தருவது என்னவென்றால், இந்த நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநில முதல்வரும், அவரது கட்சியும் ஏமாற்றுவதையே தங்களுடைய நடைமுறை உத்தியாகக் கொண்டிருப்பதும், தாங்கள் நிச்சயமாக அமல்படுத்த விரும்பாத நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் ஆணவப் போக்கும் தான்.

ஞாயிறு அன்று நடந்த சம்பவங்கள் பிரதமர் நரசிம்மராவின் அரசியல் அறிவுக்கூர்மைக்குப் பெரும் பாராட்டு என எடுத்துக் கொள்ள முடியாது. முடிவு எடுக்காமல் இழுத்துப் போகும் போக்கை அவர் புதிய நிர்வாக கலாச்சாரமாக உயர்த்தியிருக்கிறார்.

ஆனால் தேசத்திற்கு ஏற்படும் பேரழிவைத் தவிர்க்க பிரதமர் ஒருவர் உறுதியாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் தவறிவிட்டார் என்பதுதான் அவருக்கு இறுதியாகக் கிடைத்த லாபம். இந்த முதுகெலும்பில்லாத கோழைத்தனம் இந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் பெரும் பளுவைத் தந்திருக்கிறது.

அரசியல் லாபத்திற்காக ஆசைப்படுகிறவர்கள் கொள்கைப் பிடிப்பற்ற கும்பலினால் வழிநடத்தப்படுகிற தலைவர்கள் ராவும், டாக்டர் ஜோஷியும் என்பதை இப்போது உலகுக்கு உணர்த்திவிட்டார்கள். இத்தகையவர்கள் சரித்திம் மன்னிக்காது.
நிலைகுலைந்து போயிருக்கிற இந்த நாட்டின் நம்பிக்கை மீண்டும் நிலைப்படுத்தப்பட வேண்டும். இதனை ‘புதிய கரசேவை’ ஆக்கபூர்வமான கரசேவை ஒன்றினால் தான் சாதிக்கமுடியும். இந்தக் கரசேவைக்கு குடியரசுத்தலைவர் தலைமை தாங்கவேண்டும்.

தவறுகளைச் சீர்செய்யும் நடவடிக்கையாக தேசிய ஒற்றுமை, அயோத்தியில் சமரசத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். துரோகம் இழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கு ராவ்களும், ஜோஷிகளும, கல்யாண்சிங்குகளும் இதனை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *