நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான் என்று கல்லறையில் எழுதுங்கள்

“என் இசையை கேட்டு என்னை வளர்த்து விட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்னொரு ஜென்மம் வேண்டும். அதிலும் நான் எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல்ல மனிதானக வாழ்ந்த திருப்தி இருக்கிறது. என் கல்லறையில் ‛ஒரு நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள். அது போதும்.”

– 2017 ஜனவரியில், ஒரு வார இதழுக்காக எடுத்த நேர்காணலில், தன் மனதுக்குள் இருந்த, இந்த உணர்வை வெளிப்படுத்தினார் எஸ்.பி.பி. அந்த நேர்காணல் முழு வடிவம் இதோ…


50 வருட திரை இசை வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்த திருப்தியுடன் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கிறார் பாடும் நிலா பாலு. பொறியியல் படிக்க நெல்லூரில் இருந்து சென்னை வந்த சிறுவனை தமிழ் சினிமா இசையின் தவிர்க்க முடியாத குரலாக கொண்டாடித் தீர்த்தவர்கள் தமிழர்கள்.

அவர்களை சந்தித்து நன்றி நவிலும் பணியில் மும்முரமாக இருக்கிறார். அதற்காக உலகம் முழுவதும் சுற்றி எஸ்.பி.பி. லைவ் கன்சர்ட் நடத்திக் கொண்டிருக்கும் இந்த உலகம் சுற்றும் பாடகனை ஒரு காலை வேளையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகனாக ஒரு வாழ்க்கையை இளம் வயதில் உங்களால் வாழ முடிந்ததா?

நான் ஒரு இஞ்ஜினியர் ஆகணும் என்பது தான் என் அப்பாவின் கனவு. ஐ வாஸ் எ வெரி குட் ஸ்டூடண்ட். ஸோ, எனக்கும் அந்த கனவு இருந்தது. ஆனா நம்ம முயற்சி இல்லாமலேயே, நமக்குத் தெரியாமலேயே நான் ஒரு பாடகனாக வந்ததால கடவுள் தந்த பரிசா தான் இந்த வாழ்க்கையை நினைக்கிறேன்.

தெலுங்கில் என் முதல் பாடலை நான் பாடின பிறகு அப்பாவிடம் போய் விஷயத்தை சொன்னேன். “யாரோ தயவு பண்ணி உனக்கு படத்துல பாட சான்ஸ் கொடுத்திருக்காங்கடா…! கண்டசாலா முன்னால நீ எல்லாம் ஒரு எலி. அவர் ஒரு ஐராவதம் மாதிரி இருக்கார். எதோ வாய்ப்பு கிடைச்சிருக்கு பவ்யமா இரு. தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சா நல்லா ப்ராக்டீஸ் பண்ணி மேல வா. ஆனா படிப்பை மட்டும் விட்டுடாத” என்றார்.

நான் என் இன்ஜினியரிங்கை தொடர்ந்து படிச்சுகிட்டே தான் பாடிகிட்டும் இருந்தேன். ஒரு கட்டத்துல காலேஜூக்கே போக முடியாத அளவுக்கு நான் மியூஸிக்ல பிஸி ஆன பிறகு, காலேஜில் அட்டென்டன்ஸ் பிரச்னை எல்லாம் வந்தது.

மியூசிக்கா, படிப்பானு முடிவு செய்ய வேண்டிய நிர்பந்தம். அப்பாகிட்டயே போய் ஐடியா கேட்போம்னு முடிவு பண்ணினேன். ஒருவேளை அப்பா, ‘போய் படிக்கிறதை பாருடா’னு சொன்னா, மியூசிக்கை ஏறகட்டிட்டு இன்ஜினியரிங்கை தொடரலாம் என்பது தான் என் ஐடியா. அவர் அப்படித் தான் சொல்லுவார் என்றும் எதிர்பார்த்து போனேன்.

ஆனால் அவரோ, “நீ நல்ல பையன். நல்லா படிச்ச. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருங்காலத்துல உனக்கு எது சாப்பாடு போடும்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது.

ஆனா ஒன்ணு. ஒரே சமயத்துல ரெண்டு குதிரையில சவாரி செய்யணும்னு மட்டும் எப்பவும் நினைக்காதே. உனக்கு எது பிடிக்குதோ அதுல மனசு வச்சு நல்லா உழைச்சு மேல வா. நீ இதை தான் செய்யணும்னு நான் சொல்லமாட்டேன்” என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

சரி… ரெண்டு வருஷம் பார்ப்போம். மியூசிக் சரியா வர்லனா திரும்ப பையை தூக்கிட்டு காலேஜூக்கே போயிடலாம் என்ற முடிவோட தான் இசைத் துறைக்கு வந்தேன். ஆனா அப்புறம் திரும்பிப் பார்க்க கூட கடவுள் எனக்கு நேரம் கொடுக்கல.

எங்கப்பாவோட அந்த கனவை நிறைவேற்ற முடியாம போச்சு. ஆனா எங்க அப்பா இருக்குற வரைக்கும் நான் செய்யுற வேலையை பார்த்து சந்தோஷப்பட்டுட்டு தான் இருந்தார்.

நீங்கள் ஏன் இப்போது வரை முறையாக சங்கீதம் பயில முயற்சிக்கவில்லை?

சினிமாவில் நான் பாட ஆரம்பித்த பிறகு, நான் முறையா சாஸ்திரீய சங்கீதம் பயின்று கச்சேரி பண்றதை பார்க்கணும் என்று அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். கண்டிப்பா பண்றேன்னு சொல்லி இருந்தேன். ஆனா மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் ஒரு நாளுக்கு ஆறேழு ரிக்கார்டிங்கெல்லாம் பாடிட்டு இருந்ததால, அவரோட அந்த ஆசையை மட்டும் கடைசி வரை நிறைவேற்ற முடியாமலேயே போச்சு.

இப்ப வரைக்குமே சாஸ்திரீய சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செஞ்சுகிட்டே தான் இருக்கேன். நேரம் கிடைக்கும்போது, ‘எனக்கு ஆதார ஸ்ருதியில இருந்து சங்கீதம் கற்றுக் கொடுங்க’னு யார்கிட்டயாவது போய் கேட்டா, ‘விளையாடாதீங்க சார். உங்களுக்கு தெரியாத சங்கீதமா’னு கேட்டு திருப்பி அனுப்பிடறாங்க. நான் என்ன செய்யுறது சொல்லுங்க?

பிஸியா இருக்குறதுனால கத்துக்க முடியலனு சொல்றது எனக்கு நானே துரோகம் பண்ணிக்கிறேனோனும் தோணுது. இனிமே கத்துக்க முடியுமோ முடியாதோ? அதை காலத்துகிட்டயே விட்டுட்டேன்.

இளையராஜா?

வயசுலயும், வித்தையிலயும் எனக்கு சீனியர். சினிமாவில் எனக்கு ஜூனியர். இளையராஜாவுக்கு முன்னாலயே பாரதிராஜா தான் எனக்கு ஃப்ரெண்ட். அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கும்போது தற்செயலா எனக்கு அறிமுகமானான். அவன் நாடகத்துக்கு போய் நான் லைவ்வா பாட்டு பாடுவேன். எனக்கு கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க வரும். அதனால அவன் நாடகத்துக்கு வாசிச்சிருக்கேன். இப்படி நாங்க நண்பர்களானோம்.

அப்ப நான் ஒரு சின்ன கார் வாங்கி இருந்தேன். நானே தான் டிரைவிங். கச்சேரிக்காக எங்க வெளியில போனாலும் பாரதிராஜா என் கூடவே இருப்பான். நிறைய கதைகள் சொல்லுவான். எல்லாமே ரொம்ப அட்வான்ஸ்டு திங்கிங்கா இருக்கும்.

அவனோட ‘16 வயதினிலே’ கதையை நானும் அவனுமே சேர்ந்து தயாரிக்கிறதா முடிவு பண்ணினோம். அப்ப எந்த மொழிப் படமா இருந்தாலும் பெங்களூர்ல ஷூட்டிங் நடத்துனா மானியம் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுக்காக பெங்களூர்ல ஒரு கம்பெனி ஆரம்பிச்சு வேலை பார்த்தோம். ஆனா ஆரம்பகட்ட ஷூட்டிங் நடத்தக்கூட எங்களால காசு புரட்ட முடியல. அப்புறம் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் அவனுக்கு சான்ஸ் கிடைச்சது.

இதுக்கு இடையில நான் நிறைய மேடை கச்சேரிகள்ல பாடிகிட்டு இருந்தேன். அனிருத்தா என்கிறவர் தான் எங்க டீம் லீடர். அவர் தான் முதல் முதலா எனக்கு மேடையில பாடுற வாய்ப்பு தந்தவர். அவர் ஒரு ஹார்மோனியம் ப்ளேயர். கார்பரேஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார்.

எங்க வீட்டுல நாங்க ஒருநாள் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தப்ப “நாங்க பாராதிராஜா ஊர்காரங்க. அண்ணன் தான் உங்கள பார்த்துட்டு வர சொல்லி அனுப்பினாரு”னு மூணு பசங்க வந்தாங்க. “யார் யார் என்னென்ன இன்ஸ்ட்ரூமென்ட் வாசிப்பீங்க”னு கேட்டதும், “தம்பி ராசய்யா ஹார்மோனியம் வாசிப்பான்” என்றார் பாஸ்கர்.

“எங்க… வாசிப்பா”னு சொன்னேன்.

ரெண்டு கையிலயும் பெல்லோஸ் போட்டு ரெண்டு கையாலயும், ‘டாக்டர் ஷிவாகோ’ படத்துல வர்ற லாராஸ் மெலடி தீம் வாசிச்சான்… அசந்துட்டேன் நான்.

“எங்க மியூசிக் படிச்சீங்க”னு கேட்டேன்.

“எங்கயும் படிக்கல” என்றார்.

“அப்புறம் எப்படி வெஸ்டர்ன் வாசிக்கிறீங்க’னு கேட்டதும், “என்னை அறியாமயே வாசிக்கிறேன் சார். எனக்கு மியூசிக் தெரியாது” என்றார்.

அடடா இந்த பையனை விட்டுடக் கூடாதுனு மனசு அடிச்சுகிட்டது. ஆனா ஹார்மோனியத்துக்கு ஏற்கெனவே அனிருத்தா இருக்காரேனு சொன்னதும், “நான் கிடார் கூட வாசிப்பேன்” என்றார். அதிலிருந்து எங்கள் குழுவின் கிடார் ப்ளேயர் ஆனார் ராஜா.

அதன்பிறகு அனிருத்தா வேலை காரணமாக எல்லா கச்சேரிக்கும் வரமுடியாமல் போனதால் ராஜா ஹார்மோனிய ப்ளேயர் ஆனார்.

அமர்சிங் என்ற கங்கை அமரன் கிடாரிலும், பாஸ்கர் ட்ரிபிள் காங்கோவிலும் அமர்ந்தனர். குழு பெயரை ‘பாவலர் சகோதரர்கள்’னு வச்சோம். ஆயிரக்கணக்கான கச்சேரிகள் பண்ணோம்.

அதுக்கு அப்புறம் தான் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட கிடாரிஸ்டா சேர்ந்தார். அப்ப ராஜா கம்போஸ் பண்ணின நிறைய பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் பேரில் வந்தது. அப்பவே ரொம்ப டிசிப்ளினா இருப்பார்.

அந்த நோட் சரியா வாசிக்கலனு ரிக்கார்டிங்ல யாராவது சொன்னா, “திரும்ப போட்டு கேளுங்க. நான் சரியா தான் வாசிச்சிருக்கேன்”னு போல்டா பேசுவார்.

அவர் இசை மேல அவருக்கு அப்படியொரு நம்பிக்கை எப்போதுமே உண்டு. அவருடைய குணம் அப்படி. இப்போது கூட ராஜாவை சில நேரங்களில் தவறாக சிலர் நினைப்பதற்கு அந்த குணம் தான் காரணம்.

ராஜாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்?

ரொம்ப பிடிச்சது அவனோட முயற்சி, டெடிகேஷன், டிசிப்ளின். புயலே அடிச்சாலும் ரிக்கார்டிங்குக்கு அவன் லேட்டா வந்தது இல்ல.

பிடிக்காதது… அவனை சுத்தி ஒரு சின்ன வட்டம் போட்டுகிட்டு அதுக்குள்ளயே இருந்துட்டான். யாரையுமே கிட்ட நெருங்கவிட்டது இல்ல. அதுக்கு என்ன காரணம்னு அவனுக்கு தான் தெரியும்.

நாங்க ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்கும்போது எவ்வளவு ஜாலியா இருந்தோம். எத்தனை அழகான நாட்கள் அவை. அப்பகூட அவன் ரொம்ப டிசிப்ளினா தான் இருப்பான். மேடையில நான் ஒரு ராங் நோட் பாடிட்டாகூட “என்னய்யா நீ… அந்த காந்தாரம் ஸ்ருதி சேராம பாடிட்டியே”னு கோவிச்சுப்பான். தொழில் ரீதியா இது.

பர்சனலா பார்த்திங்கன்னா நானும் பாரதிராஜாவும் தான் இன்னுமே அவனை வாடா போடானு பேசுற ஃப்ரெண்ட்ஸ். அதுவும் நாங்க அவன் கூட தனியா இருக்கும்போது ரொம்ப ஜாலியா ஜோவியலா பேசுவான். மேடைனு வந்துட்டா அவன் வேற.

எனக்கு என்ன தோணும்னா இவன் கலகலப்பான வாழ்க்கையை மிஸ் பண்றானேனு தோணும். நிறைய பேரை சந்திச்சு, கருத்துக்களை பரிமாறிகிட்டு இன்னும் மகிழ்ச்சியா இவன் இருக்கலாமே. சன்னியாசி மாதிரி எல்லாரையும் விட்டு தூரமா இருக்கானேனு தோணும். அது அவனைப் பொறுத்தவரை கரெக்டா இருக்கலாம். ஆனா ஒரு ஃப்ரெண்டா எனக்கு அப்படி தோணும்.

பாடகர், நடிகர், இசையமைப்பாளர்.. இதில் முழு திருப்தி தந்தது எது?

சார்… நான் ஒரு பாடகராக வரவில்லை என்றால் இது எதுவுமே நடந்திருக்காது. என்னோட ஸ்பெஷல் குவாலிட்டியா எல்லோரும் சொல்றது ஐம் எ வெரி குட் எக்ஸ்பிரசிவ் சிங்கர். அதனால இயல்பாவே எனக்குள்ள ஒரு நடிகன் எப்பவும் இருக்கான். ரிக்கார்டிங்ல பாடும்போது நான் மைக் முன்னால எப்பவுமே நடிக்கத் தான் செய்வேன்.

உங்களுக்குள் இருந்த நடிகனை முதலில் எப்படிக் கண்டு கொண்டார் கே.பாலசந்தர்?

நான் என்னோட ஆந்திரா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து மேடையிலே ஒரு 20 நிமிஷ மைம் செஞ்சேன். அதை பார்த்த கே.பி. சாருக்கு ஒரே ஆச்சர்யம். டேய்… பெரிய நடிகன்டா நீ. உனக்கொரு கேரக்டர் கொடுக்கணுமேனு சொல்லிகிட்டே இருந்தார். அதன் விளைவா கிடைச்சது தான் ‘மனதில் உறுதி வேண்டும்’ டாக்டர் கேரக்டர்.

அந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முதல் நாள் எங்கப்பா இறந்துவிட்டார். நான் முறைப்படி மொட்டை அடிச்சு அப்பாவுக்கு எல்லா சடங்குகளும் செஞ்சேன். 15 நாட்கள் கழிச்சு தான் என்னால வீட்டைவிட்டே வெளியில வரமுடியும்ங்கிற நிலை.

ஆனா சத்யா ஸ்டூடியோவுல ஆஸ்பிட்டல் செட் போட்டு ரெடியா இருந்தார் கே.பி. சார். அப்ப சுஹாசினி ரொம்ப பிசியான ஆர்ட்டிஸ்ட். அவங்க டேட்ஸ் வேற வாங்கி வச்சிருந்தார்.

“என்னால இந்தப் படம் பண்ண முடியுமானு தெரியல சார்”னு அவருக்கு போன் செஞ்சு சொன்னேன். எனக்காக எல்லா டேட்ஸையும் மாத்தி 15 நாட்கள் காத்திருந்தார் பாலசந்தர் சார். அந்த படத்துல பார்த்திங்கனா கூட மொட்டை அடிச்சு லேசா வளர்ந்த முடியோட தான் இருப்பேன். அதுக்கப்புறம் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 65 படம் நடிச்சிட்டேன்.

டைரக்ஷன் பக்கம் இன்னும் வரலியே?

ஆசை இருக்கு. ஒரு படமாவது டைரக்ட் பண்ணிடனும். ஆனா அதுக்கு முன்னால யாருகிட்டயாவது ஒரு படமாவது அசிஸ்டென்ட்டா வேலை பார்த்து சினிமாவை முழுசா கத்துக்கணும். நான் ஒரு இன்டிபென்டன்ட் டைரக்டரா இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா டெக்னிக்கல் விஷயங்களையும் கத்துகிட்டு டைரக்டர் ஆகணும். நிச்சயமா டைரக்ட் பண்ணுவேன்.

எத்தனையோ பேருக்கு பாடி இருக்கீங்க. யாருக்கு உங்க குரல் அப்படியே பொருந்திப் போனதா நினைக்கிறீங்க?

ஒரு குரல் யாருக்குமே 100 சதவீதம் பொருந்திப் போகாது. நிச்சயமா இருக்கவே இருக்காது. முதல்லயே பாட்டு ரெக்கார்ட் பண்ணிடறோம். அதுக்கு ரொம்ப அழகா அவங்க நடிக்கும்போது எனக்கும் பேர் கிடைக்குது, அவங்களுக்கும் பேர் கிடைக்குது.

அதே சமயத்துல நல்ல பாட்டை கெடுத்த நடிகர்களும் இருக்காங்க. ரிக்கார்டிங்ல உயிரை கொடுத்து பாடியிருப்போம். ஸ்கிரீன்ல அது வரலைனா எல்லாமே வேஸ்ட். ஆடியோவுல கேட்டு தான் சந்தோஷப்படணும்.

காமெடியன்சுக்கு பாடும்போது மட்டும் தான் குரலை மாத்தி ட்ரை பண்ணுவேன். எம்.ஆர்.ராதா அண்ணனுக்கு பாடியிருக்கேன், சுருளிராஜனுக்கு, தேங்காய் சீனிவாசனுக்கு பாடி இருக்கேன். அப்ப மட்டும் தான் லேசான மாற்றம் செய்துப்பேன். மத்தபடி வேற யாருக்குமே குரலை மாற்றிக் கொண்டது இல்லை.

ஏர்.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை எப்படி இருக்கிறது இன்றைய இசை?

இன்றைய தலைமுறையிடம் திறமைக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா அவங்க தங்கள் மனசை டெக்னாலஜி மேல வைக்கிற அளவுக்கு இசை மீது வைக்கிறது இல்ல. அந்த பாடலில் அதன் ஆத்மா வெளிப்படுவதில்லை. அதனால் தான் அந்த காலத்து பாட்டு மாதிரி இல்லனு நிறைய பேர் சொல்றதை இன்றும் கேட்க முடியுது.

ஒரு படத்துக்காக கம்போஸ் செய்யப்படுகிற பாடல் சார்ட் பஸ்டரில் இருந்தால் போதும்னு நினைக்குறாங்க. அது நீண்ட நாட்கள் நிலைச்சு நிக்குமானு யோசிக்கிறதில்ல.

அதுக்கு மியுசீஷியன்ஸை மட்டும் குறை சொல்லவும் முடியாது. பாலசந்தர், கே.விஸ்வநாத், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாடலை மிஸ் பண்ணினா கதையில் ஒரு லிங்கை தவறவிட்டுவிடுவோம். அந்த அளவுக்கு அது படத்துடன் கலந்து இருக்கும். அந்த அளவுக்கு சேலஞ்சிங்கான சிச்சுவேஷன்கள் கொடுப்பாங்க.

இன்றைக்கு அப்படிப்பட்ட பாடல்கள் அதிகம் வருவதில்லை. சாங் ஃபார் த சேக் ஆஃப் சாங். அந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தாலும் பரவாயில்லை. இல்லையென்றாலும் ஒன்றும் தவறில்லை என்பது போன்ற சிச்சுவேஷன்கள் தான் அமைக்கப்படுகின்றன. அது தான் பிரச்னையே. திறமையான பாடகர்கள், இசையமைப்பாளர்கள் இருந்தும் நல்ல பாடல்கள் இன்றைக்கு அரிதாகத் தான் அமைகிறது.

இன்றைய இளம் தலைமுறையின் கம்போசிஷன்களில் பாடுவதற்கு முன் அவர்களை எப்படி கணிக்கிறீர்கள்?

முதலில் பாட்டை எனக்கு அனுப்ப சொல்லிடுவேன். அது அவர்களின் தகுதியை எடை போடுவதற்காக இல்லை. அந்த பாட்டை என்னால பாட முடியுமா முடியாதானு என்னை நானே எடை போட்டுக்க அப்படி சொல்லுவேன்.

சிலது ஸ்ருதி ரொம்ப ஜாஸ்தி வச்சிருப்பாங்க. என்னால் அந்த உயரத்தை தொட முடியாமல் போகலாம். சில பாடல்களில் இந்த வயசுல நான் பாடக்கூடாத வரிகள் இருக்கும். சிலது சின்னப் பசங்க பாடினா தான் நல்லா இருக்கும், என் குரலுக்கு செட் ஆகாது.

இதையெல்லாம் ஜட்ஜ் பண்ண தான் முன்னாடியே பாட்டை அனுப்ப சொல்லி கேட்டுட்டு அப்புறமா முடிவு பண்றேன். ஒரு நல்ல விஷயம் என்னன்னா… இன்னைக்கும் தினமும் ஒரு பாட்டாவது ரிக்கார்ட் பண்ணிடறேன். அது போதும்.

இசையமைப்பாளராக தொடராததற்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?

அதெல்லாம் ஒன்ணும் இல்ல சார். யாரும் சான்ஸ் கொடுக்கல அவ்வளவு தான். இப்பக்கூட நிறைய பேர் ஏன் சார் பாடுறதை குறைச்சுட்டீங்கனு கேட்குறாங்க. நான் எங்க கம்மி பண்ணேன். யாரும் கூப்பிடறதில்ல.

நிறைய திறமையான யங்ஸ்டர்ஸ் பாட வந்துட்டாங்க. நேச்சுரலா வாய்ப்பு குறையத்தான் செய்யும். ஒருகாலத்துல நான் வந்தேன்ல. அப்படித்தான். நெக்ஸ்ட் ஜென்ரேஷனுக்கு ஹேப்பியா வழிவிடணும்.

ஆனா மியூசிக் டைரக்ஷன் ஏன் குறைஞ்சதுன்னு எனக்கு ஐடியாவே இல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம் சேர்த்து 70 படங்களுக்கு மேல இசையமைச்சுட்டேன். எந்த படத்துலயும் எனக்கு திருப்தி இல்லாத வேலையை செய்யவே இல்ல.

சிகரம் முடிச்சதும் அழகன் பண்ண சொன்னார் கே.பி. சார். ஒரே சிட்டிங், 15 நாள்ல பாட்டு ரெக்கார்ட் பண்ணி வேணும்னு கேட்டார். என்னால முடியாதுன்னு சொல்லி நானே அறிமுகப்படுத்தி வச்சது தான் மரகதமணி. என்னைவிட திறமையானவர்கள் இருந்ததால எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராம போயிருக்கலாம்னு நினைக்கிறேன்.

பல வருடங்களாக புகைப் பிடிச்சுகிட்டு இருந்த நீங்க ஒரு கட்டத்துல அதை நிறுத்தினீங்க. ஒரு பாடகரா அந்தப் பழக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

காலேஜ் படிக்கும்போது ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் சிங்கர் ஆகி நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போது, இந்தப் பழக்கத்தை நிறுத்திடணும்னு பல முறை யோசிச்சிருக்கேன். ஆன அந்தப் பழக்கத்தை விட முடியாம 30 வருடங்கள் தவிச்சேன்.

கடைசியில என் பொண்ணு தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வச்சா. ஒரு நாள் எனக்கு ஏதாவது பிராமிஸ் பண்ணிக் கொடுங்கப்பா என்று கேட்டாள். என்ன வேணும்டானு கேட்டேன். நாளையில இருந்து சிகரெட் பிடிக்கக் கூடாது என்றாள். சரிடானு கையில் அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன். அவ்வளவு தான். அன்னியோட அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.

நிறைய பாடகர்கள் குரலை பாதுகாப்பதற்காக ஜில்லுனு எதுவும் சாப்பிடாம, புளிப்பு சாப்பிடாம அப்படியே குரலை கடைசி வரை பாதுகாப்பாங்க. என்னைப் பொறுத்தவரை ஜில்லுனு சாப்பிடறதுக்கும் வோக்கல் கார்ட்சுக்கும் சம்மந்தமே இல்ல.

முகமது ரஃபி, கச்சேரிக்கு நடுவுலயே அரைகிளாஸ் ஐஸ்கட்டி போட்டு கூல் டிரிங்ஸ் குடிப்பதை பழக்கமாவே கொண்டிருந்தவர். பாலமுரளி சாருக்கு ஐஸ் வாட்டர் இல்லாம இருக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை நம் குரலை பாதிப்பவைகள் புகை, குறைவான தூக்கம், தூசி இவைகள் தான்.

ஒரு சிங்கர் புகைப்பதும், குடிப்பதும் தவறு. நீங்க செஞ்சீங்களேன்னா… நான் செஞ்சேன் தான். அதுக்கு இப்ப என்ன பண்ண முடியும்? என் வாழ்க்கையை திரும்ப ரீவைண்ட் பண்ணி வாழ முடியுமா? நான் தப்பு பண்ணிட்டேன், அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க.

50 ஆண்டு கால இசைப் பயணம் கற்றுக் கொடுத்தது என்ன?

இன்னும் கற்றுக்கிட்டே இருக்கேன். இந்த 50 வருடங்களில் நேர்த்தியை நெருங்கி வந்திருக்கிறேனே தவிர. இன்னும் நேர்த்தியை தொட்டுவிடவில்லை. செய்கிற கலையில் குறைவான தவறுகளை செய்பவன் தான் உலகிலேயே மிச்சிறந்த கலைஞன்.

எனக்கு இருக்குற மிகச்சிறிய ஞானத்துக்கு எவ்வளவு புகழை கொடுத்திருக்கிறார் இறைவன். அதனால் வாழ்க்கையில் எனக்கு அதிருப்தி என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். இந்த 70 வயதிலும் கடவுள் ஆசியில் எனக்கு சுகர், பி.பி., என்று எந்த பிரச்னையும் இல்லை. 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ் தானே.

இந்த 50 வருடங்களில் தன்னிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். நிறைய பணம் சம்பாதிச்சேன். நிறையவே இழந்தேன். இந்த 50 வருட இசை வாழ்க்கையில் 48-வது வருடம் தான் கடனில் இருந்தே வெளியே வந்தேன்.

தினமும் 5 பாட்டு பாடிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது வீட்டுல சேட்டு காத்துகிட்டு இருப்பான். ஒரு நாள் கூட இன்னிக்கு பணம் இல்ல நாளைக்கு வா என்று சொல்லக்கூடிய நிலைமையை கடவுள் எனக்கு கொடுக்கல. ஐஸ்வர்யம் என்பது பணத்தால வராது. கடன் இல்லாத வாழ்க்கை வாழுறவன் தான் உண்மையான பணக்காரன்.

என் இசையை கேட்டு என்னை வளர்த்து விட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்னொரு ஜென்மம் வேண்டும்.

அதிலும் நான் எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல்ல மனிதானக வாழ்ந்த திருப்தி இருக்கிறது. என் கல்லறையில் ஒரு நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள். அது போதும்.

நன்றி: அருண் சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *