அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு காலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்!

ஒக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளால் அதிகரித்த கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் உலகின் பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது.

உலகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின் அளவு 60% அதிகரித்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. உலக மொத்த மக்கள் தொகையில் பணக்காரர்களாக உள்ள 1 சதவிகிதத்தினரால் ஏழ்மையில் உள்ளவர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக கார்பன் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய கார்பன் வெளியீட்டுத் திட்டம் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் நுகர்வை விரிவாக்கம் செய்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் (Greenhouse Gas) தொடர்ந்தால் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி 2100 ஆம் ஆண்டிற்குள் உலக கடல் மட்டம் 38 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவு உயரும் என நாசா தலைமையிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக வெப்பமயமாதலால் (Global Warming) பனிக்கட்டிகளின் மேற்பரப்பு உருகும் என்பதால், அவை கடல் நீரில் கலந்து அதன் மட்டம் உயர பங்களிப்புச் செய்யும்.

அமெரிக்காவின் பல்லோ பல்கலைக்கழகத்தின் திட்ட தலைவர் நோவிக்கி, பனிக்கட்டிகள் எவ்வளவு உருகும் என்பதை பொறுத்து தான் எதிர்காலத்தில் கடல் மட்டம் எவ்வளவு உயரும் என்பது தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *