மறைந்த பாடகர் SPB யின் எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டவர் MGR!

1969 – ஆந்திர மாநிலம் நெல்லூரில் பெற்றோர் இருக்க , சென்னையில் தனது மாமாவின் உதவியுடன், கல்லூரியில் படித்துக்கொண்டே சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பை தேடிக்கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் SPB.

அந்த காலத்தில் பாடலை ரெக்கார்டிங் செய்யும் ஸ்டுடியோவில் A/C வசதிகள் கிடையாது. அதனால் ரெக்கார்டிங் அறையில் பாடினாலும் பாடல் வெளியேயும் கேட்க்கும். AVM ஸ்டுடியோவில் உள்ள ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் SPB ஒரு தெலுங்கு பாடலை பாடிக்கொண்டிருக்க, அதே AVM ஸ்டுடியோவில் வேறொரு சினிமா படப்பிடிப்பிற்காக வந்த எம்.ஜி.ஆர் சிறிது நேர ஓய்விற்காக அங்குள்ள மரத்தடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்காக தமிழில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய பாடலை தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறார் SPB. அந்த பாடல் எம்.ஜி.ஆரின் காதில் விழுகிறது.

தனது உதவியாளரை அழைத்து, ஸ்டுடியோவில் அந்த பாடலை பாடிக்கொண்டிருப்பது யார் என விசாரித்துவர சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

பாலசுப்பிரமணியம் என்ற ஒரு கல்லூரி மாணவர் பாடிக்கொண்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரிடம் வந்து சொல்கிறார் அவரது உதவியாளர்.

இரண்டு, மூன்று நாட்கள் கடக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் SPB தன் நண்பரோடு தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் ஒரு பெரிய கார் வந்து நிற்கிறது. அந்த காரிலிருந்து இறங்கி SPBயின் அறைக்கு வருகிறார் எம்.ஜி.ஆரின் உதவியாளர் பத்மநாபன்.

‘எம்.ஜி.ஆரின் அடுத்த படத்தில் நீங்கள் ஒரு பாடலை பாட வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவரை சந்திக்க நாளை காலை ராமாவரம் தோட்ட வீட்டிற்கு உங்களால் வர முடியுமா என கேட்டு வர சொன்னார்’ என்றார்.

நடப்பது கனவா நனவா என யோசிக்க முடியாத நிலையில் இருந்தார் SPB. தமிழில் அதுவரை வெறும் 3 பாடல்களை மட்டுமே பாடியுள்ள தனக்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் தேடி வந்து வாய்ப்பு தந்ததை நம்ப முடியாத நிலையில் இருந்தார். நிச்சயம் வருகிறேன் என சொன்னார்.

அப்போது SPBயிடம் டூவீலர்கூட இல்லை, சைக்கிள் மட்டுமே இருந்தது.

மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் வீடான ராமவரம் தோட்டத்திலிருந்து SPBயை அழைத்து செல்ல கார் வந்திருந்தது.

ராமாவரம் தோட்டத்திற்கு போகிறார் SPB. அங்கு ஏற்கனவே ஒரு குழு அவருக்காக காத்திருந்தது. படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் MSV, பாடகி சுசிலா, பாடலாசிரியர் புலவர் குழந்தை, அவர்களுக்கு மத்தியில் எம்.ஜி.ஆர் என ஒரு குழுவே இருந்தது.

“என்னுடைய அடுத்த படமான அடிமைப்பெண் படத்தில் நீங்கள் ஒரு பாடலை பாட வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதமா?” என எம்.ஜி.ஆர் கேட்க, சம்மதம் என்கிறார் SPB.

அப்போது SPBக்கு தமிழில் படிக்க தெரியாது என்பதால் பாடல் வரிகளை தெலுங்கில் எழுதிக்கொண்டு பாடுகிறார்.

“ஆயிரம் நில வா, ஓராயிரம் நிலவே வா” என்ற பாடலில் உச்சரிப்பில் மட்டும் ஓரிரு தவறுகளை திருத்துகிறார் MSV. அன்று நாள் முழுவதும் அங்கேயே பாடலுக்கான ரிகர்ஸல் நடக்கிறது. மூன்று நாள் கழித்து ‘ரெக்கார்டிங்’ வைத்துக்கொள்ளலாம் என சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

வீட்டிற்கு வந்ததிலிருந்து SPBக்கு மிக கடுமையான காய்ச்சல். டைபாய்ட்டு காய்ச்சல் வந்திருக்கிறது, அதனால் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லிவிடுகிறார் மருத்துவர்.

மூன்றாம் நாள் முடிவில் பாடல் ரெக்கார்டிங்கிற்கு அழைத்து செல்ல SPB தங்கியிருந்த இடத்திற்கு கார் வருகிறது. எம்.ஜி.ஆரின் உதவியாளர் வந்து பார்க்கிறார். காய்ச்சலில் SPB சுருண்டு படுத்திருக்கிறார். அதை பார்த்துவிட்டு திரும்பப்போய் விடுகிறார்.

SPBக்கு மிகப்பெரிய வருத்தம். தானாக தேடி வந்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இப்படி கைநழுவி போய் விட்டதே என்ற மனவுலைச்சலில் இருக்கிறார். நிச்சயம் அதே தேதியில் பாடல் ரெக்கார்டிங் நடந்திருக்கும். எனக்கு பதில் வேறு யாரைவது வைத்து ரெக்கார்டிங்கை முடித்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டார்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் SPBயை தேடி எம்.ஜி.ஆரின் உதவியாளர் வருகிறார். ” உங்களுக்கு உடம்பு சரியாகிடுச்சா? மீண்டும் ஒரு முறை டாக்டரை போய் பார்த்துவிட்டு நாளைக்கு AVM ஸ்டுடியோவிற்கு வந்து MGR உங்களை பார்க்க சொன்னார்” என்கிறார்.

எம்.ஜி.ஆர் தனக்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்பளித்திருக்கிறார். இதை நிச்சயம் நழுவ விடக்கூடாது என நினைத்து மறுநாள் நேரமாகவே AVM ஸ்டுடியோவிற்கு போய் காத்திருக்கிறார் SPB.

எம்.ஜி.ஆர் ஸ்டுடியோவிற்கு வருகிறார். ‘போய்ப் பாடுங்க’ என்கிறார்.

அங்கு போனால் அதே ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்.
SPBயால் அதை நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? போன மாசமே ரெக்கார்டிங் முடிஞ்சிருக்குமே? எனக்காகவா இத்தனை நாட்களாக காத்திருந்தாங்க? என நினைக்கும்போதே வார்த்தை முட்டுகிறது.

ஸ்டுடியோவிற்கு வெளியே எம்.ஜி.ஆரை நோக்கி ஓடி வருகிறார்.

” சார் நீங்க எனக்கு ரெண்டாவது வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு நினைச்சேன். அதே பாடலை பாட திரும்பவும் வாய்ப்பு கொடுப்பீங்கன்னு நான் கனவிலும் நினைச்சதில்லை” என்கிறார்.

“நான் இந்த பாடலை உங்களுக்கு பதிலா வேற யாரையாவது பாட வச்சிருக்கலாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனா நீங்க இந்த பாடலோட ரிகர்சல் முடிந்ததும் உங்க கல்லூரி நண்பர்களிடம் போய், எம்.ஜி.ஆர் படத்துல நான் பாட்டு பாடுறேன்னு சொல்லி இருப்பீங்க. நாளைக்கு படம் ரிலீசாகும்போது அதை பார்க்கும் உங்க நண்பர்களுக்கு நீங்க பொய் சொன்னதுபோல ஆகிடும். அதைவிட முக்கியம் உங்களோட சினிமாத் துறை எதிர்காலமே இதோட முடிந்துவிடும். அதனாலதான் நீங்க சரியாகி வரும்வரை உங்களுக்காக பாடல் ரிக்கார்டிங்கை நிறுத்தி வைக்க சொன்னேன்” என்கிறார் எம்.ஜி.ஆர்.

அவர் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னார் SPB. தனது எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டவர், தனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம் MGR என்கிறார் SPB.

  • இந்த சம்பவங்களை SP.பாலசுப்பிரமணியம் அவர்கள் வீடியோவாக பேசி YouTube ல் வெளியிட்டிருக்கிறார்.

‘ஆயிரம் நிலவே வா’ SPB அவர்கள் தமிழில் பாடிய நான்காவது பாடல், அவரை தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரப்பிவிட்ட பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *