பாலியல் புகாரில் சிக்கியுள்ள இயக்குனருக்கு ஆதரவாக முன்னாள் மனைவிகள்!

பொலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை பாயல் கோஷ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அந்த இயக்குநருக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவிகள் இருவர் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்கள். 

இந்த விவகாரத்தில் நடிகை ஹுமா குரேஷி, அனுராகுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தன்னுடனோ வேறு எவருடனோ அவர் தவறாக நடந்து கொண்டதில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அனுராக் காஷ்யாப்பின் முன்னாள் முதலாவது மனைவி ஆர்த்தி பஜாஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனுராக், நீங்கள் ஒரு ராக்ஸ்டார். தொடர்ந்து பெண்களுக்கு நீங்கள் அதிகாரமளிப்பதைப் போலவே, பாதுகாப்பான இடத்தில் அவர்களை வைக்க தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார். 

மேலும், இந்த உலகில் குறைந்த அளவிலேயே நேர்மை உள்ளது. இந்த உலகம் முழுவதும் அதிகமாக உதவாக்கரைகள்தான் உள்ளனர். கிட்டத்தட்ட அனைவருமே மற்றவர்களை வெறுப்பதிலேயே அதிக சக்தியை செலவிடுகின்றனர். தற்போதைய நிகழ்வால் கோபம் அடைந்தாலும் பிறகு சிரிக்கிறேன். இந்த கட்டத்தை நீங்கள் கடக்க நேர்ந்ததில் வருத்தப்படுகிறேன். எப்போதும் போல உங்கள் குரலை உயர்த்தி எழுப்புங்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்று ஆர்த்தி பஜாஜ் கூறியுள்ளார். 

இதேபோல, அனுராக்கின் முன்னாள் இரண்டாவது மனைவி கல்கி கோச்சலின் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு ஆறுதலூட்டும் வகையில் கருத்து பதிவிட்டிருக்கிறார். 

அன்புள்ள அனுராக், இந்த சமூக ஊடகம் உங்களை ஊகிக்க அனுமதிக்காதீர்கள். பெண்களின் சுதந்திரத்துக்காக எழுத்து வடிவில் நீங்கள் போராடினீர்கள். தொழில்சார்ந்த முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நீங்கள் பெண்களின் மதிப்பை பாதுகாத்தீர்கள். இரண்டிலும் சமமாக என்னை நடத்தினீர்கள். அதற்கு நானே ஒரு சாட்சி. நமக்குள் விவாகரத்து ஆன பிறகும் அந்த மரியாதைக்காக நான் எழுந்து நிற்கிறேன். நாம் இப்போது ஒன்றாக இல்லாதபோதும் பணியிடங்களில் நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்த அந்த இடங்கள், இப்போது எனக்கு பாதுகாப்பற்றவை போல இருப்பதாக உணர்கிறேன். உங்களுடைய மதிப்பை விட்டுக் கொடுக்காதீர்கள். தைரியமாக இருங்கள். உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் முன்னாள் மனைவியின் அன்புடன் என்று தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார். 

நடிகை ஆர்த்தி பஜாஜை 1997ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் அனுராக் காஷ்யப், 2009இல் அவரை விவாகரத்து செய்தார். பிறகு 2011இல் கல்கி கோச்சலினை அவர் திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்த திருமணம் 2015இல் விவாகரத்தானது. 

அப்போது அதற்கான காரணமாக, தன்னை விட வயதில் மூத்தவரான அனுராக் காஷ்யாப்புடன் பெரிய கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இருவரும் ஒரே பக்கத்தில் இருக்க முடியாது என தோன்றியதால் பிரிந்து நண்பர்களாகி விட்டோம் என கல்கி கோச்சலின் கூறியிருந்தார். 

முன்னதாக, அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பாலியல் குற்றம்சாட்டிய நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் என்னை பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் மோதிஜி. இந்த நாட்டுக்கு உண்மை எது என்பதை காட்டுங்கள். எனக்கு இது எவ்வளவு ஆபத்து என்பது தெரியும். எனது பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது. எனக்கு உதவுங்கள் என்று கூறியிருந்தார். 

அனுராக் காஷ்யப் தன்னிடம் பேசும்போது, ரிச்சா சத்தா, மஹி கில், ஹுமா குரேஷி போன்ற நடிகைகள் தன்னுடன் உறவு கொள்ள சம்மதம் தெரிவித்தது போல நீயும் இணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியதாக பாயல் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தனது பெயரை பாயல் இணைத்து கருத்து வெளியிட்டதாகக் கூறி நடிகை ரிச்சா சத்தா அவருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திய அவர், மின்னஞ்சல் வழியாக பாயலுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பொலிவுட் திரைத்துறையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை கங்கனா ரனாவத், திரைப்பட வாய்ப்புகள் தொடர நடிகைகள் சில சமரசங்களுக்கு உடன்பட கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறிய விவகாரம் சர்ச்சையானது. இதன் பிறகு, மும்பையில் உள்ள தனது அலுவலகம் விதிமீறி கட்டப்பட்டதாகக் கூறி இடிக்கப்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவில் ஆளும் அரசுக்கு எதிராக கங்கனா ரனாவத் வெளியிட்ட கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கங்கனா ரனாவத்தை தமது இடுகையில் குறிப்பிட்டு தனக்கு உதவுமாறு நடிகை பாயல் கூறியிருப்பது, பொலிவுட் நடிகைகளின் திரைப்பட வாய்ப்பு நிலை தொடர்பான சங்கடமான மறுபக்கத்தை காட்டுவதாக திரை ரசிகர்கள் கவலையுடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

பொலிவுட் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள அனுராக் காஷ்யாப், தமிழில் நடிகை நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *