உலகப் பொருளாதாரத்தை பாதித்த கொரோனா!

‘அழகே வழுவானது; வழுவானதே அழகு’ என்று ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஒரு சூனியக்காரி சொல்லும் வசனம் வரும். இன்றைய கொரோனா கால எதார்த்தம் இப்படி, எது உண்மை; எது பொய் என்று எல்லாவற்றிலும் குழப்பமானதாகத்தான் இருக்கிறது. கொரோனா உலகப் பொருளாதாரத்தைப் பாதித்திருக்கிறது என்பது கிட்டத்தட்ட உலகம் முழுதுமே ஒப்புக்கொண்ட உண்மை.

ஆனால், நாம் இதுவரை கொண்டிருந்த அடிப்படைப் பொருளாதாரக் கட்டுமானங்கள் தொடர்பான நம்பிக்கைகளையே ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பதுதான் இக்காலத்தின் ஆகப் பெரிய கொடூரம். ‘நிதிச் சொத்துகள்’ (Financial Assets) என்ற கருத்துரு இப்படி கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் விஷயங்களில் ஒன்று.

பொருளாதாரத்தில் நிதிச் சொத்துகள் இல்லாமல் இன்று எந்த சிறு நிறுவனமும் இயங்க முடியாது. பொதுவாக சொத்துகள் என்பதை நிர்வாகக் காரணங்களுக்காக  பல்வேறு பிரிவு களாக வகுப்பார்கள். அவற்றில் ஒன்றுதான் நிதிச் சொத்துகள் மற்றும் நிஜ சொத்துகள் என்ற பகுப்புமுறை.

இதில், நிஜ சொத்துகள் என்பவை ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடம் உள்ள நிலம், இயற்கை வளங்கள், கனிமவளம், மனிதவளம் போன்றவைதான்.
ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடம் உள்ள ரொக்கம், பங்குகள், கடன்பத்திரங்கள், காசோலைகள், பிட்காயின் போன்ற கண்ணுக்குப் புலப்படா கரன்சிகள், சரக்குகள் போன்றவற்றை நிதிச் சொத்துகள் என்பார்கள்.

இந்த நிதிச் சொத்துகளை உடனடி செலாவணியாக மாற்ற முடியும். இதனை உடனடி தேவையை எதிர்கொள்ள பயன்படுத்த முடியும். ஆனால், நிஜ சொத்துகளை இப்படி உடனடி செலாவணியாக மாற்ற இயலாது. நாம் பண்டைய காலத்தின் பண்டமாற்று முறை போன்ற நேரடி உபயோகப் பொருட்களை செலாவணியாகப் பயன்படுத்துவதை எல்லாம் வரலாற்றுக் காலத்திலேயே கைவிட்டுவிட்டோம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போய் இப்போது பிட்காயின்கள், ஆன்லைன் கரன்சிகளில் வந்து நிற்கிறோம்.
ஆனால், பழங்காலம் முதல் இன்று வரை இப்படியான நிஜ சொத்துகளுக்கும் இந்த நிதிச் சொத்துகளுக்கும் ஒரு தொடர்பு இருந்து வந்தது. இந்த நிதிச் சொத்துகள் கையில் உள்ள நிஜ சொத்து ஒன்றின் குறியீடு போல செயல்பட்டு வந்தது. உதாரணமாக, ஒருவர் கையில் உள்ள பத்து ரூபாய் என்பது, அந்த ரூபாய் மதிப்பிலான தங்கத்துக்கு நிகர் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அளிக்கும் ஒப்புதல்தான்.

ரூபாய் கரன்சிகள் அரசால் அச்சிடப்படுபவை என்பதால் இதில் சிக்கல் இல்லை. ஆனால், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவை தனியார் நிறுவனங்களால் வழங்கப்படுபவை. கடந்த சில தசமங்களாகவே உலக அளவில் நிஜ சொத்துகளுக்கும் நிதிச் சொத்துகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துவருவதை பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்தனர்.
இப்போதைய கொரோனா காலத்தில் இந்த இடைவெளியில் பெரிய பள்ளமே விழுந்துவிட்டது என்கிறார்கள் அறிஞர்கள்.
உதாரணமாக, சமீபத்தில் உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவில் உள்ள பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் சந்தை மூலதனத்துக்கும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள விகிதம், 1990ல் 52% என்பதாக இருந்து, 2018ம் ஆண்டு 148% உயர்ந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

நிஜ சொத்துகள் மற்றும் நிதிச் சொத்துகளின் மதிப்பீடுகளில் உள்ள இடைவெளிதான் இதன் பிரதான காரணம். மேலும், பல நாடுகள் இன்று வறுமையாக இருக்கவும் இதுதான் காரணம் என்கிறார்கள்.கொரோனா காலத்தின் இந்த முரண்பாடுகள் மேலும் மேலும் கூர்மையடைவதுதான் அதிக சிக்கல். நிதிச் சொத்தும் நிஜ சொத்தும் ஒன்றல்ல. இப்படிச் சொல்வதன் பொருள் நிதிச் சொத்து தேவையில்லை என்பதல்ல. அதன் மதிப்பை குறைத்துக் கூறுவதும் அல்ல. ஆனால், இன்று ஒருவர் கையில் இருக்கும் தங்கம், நிலம், வீடு, வாகனம், ஆள் பலம், இயற்கைவளம் ஆகியவற்றுக்கும் புத்தகத்தில், காகிதத்தில், கணிப்பொறியில் இருக்கும் செல்வத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?

ஒரு தேர்ந்த ஏமாற்று மூளை நினைத்தால் கண நேரத்தில் பெரும் நிதிச் சொத்து கொண்ட கோடீஸ்வரர் ஒருவரை ஒரே
இரவில் ஓட்டாண்டியாக்கிவிட இயலுமில்லையா? ஹர்சத் மேத்தா போன்ற பங்குச் சந்தை ஊழல் பெருச்சாளிகளை நினைவில் கொள்ளுங்கள்.
இதுதான் நிஜ சொத்துக்கும், நிதிச் சொத்துக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாடு. நமது நடப்பு எதார்த்தம் இவ்விரண்டுக்கும் இடையே உள்ள எதார்த்தமான உறவை மேலும் மேலும் இடைவெளி கொண்டதாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

மூலதனம் அமைதியாக உறங்க இயலாது. அது வெளியே வந்தால்தான் பெருக இயலும். ஆனால், வெளியே வந்தால் ரிஸ்க்கும் அதிகம்.
மூலதனம் என்றால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். உதாரணமாக, ஒரு ஆட்டோமொபைல் தொழிலை எடுத்துக் கொண்டால், அவர்கள் மூல
தனத்தைக் கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டு, அந்த சரக்கை விற்பார்கள். இதனால் லாபம் கிடைக்கும். கிடைத்த லாபத்தைக் கொண்டு மேலும் அதிக முதலீட்டைப் பெருக்கி மேலும் அதிக லாபம் அடைவார்கள்.

இதுதான் நிஜ சொத்தின் நேரடி இயல்பு. நிதிச் சொத்து என்ன செய்கிறது? இப்படி பெருகும் லாபத்தில் பங்குதாரர்களுக்கு ஈவு தருவார்கள். நல்ல ஈவு தரும் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயரும். இதனால் நிறுவனத்தின் மூலதனம் பெருகும்.  இது வளர்ச்சிக்கு மேலும் மேலும் உதவும்.
இப்படி நிஜ சொத்துக்கும் நிதிச்சொத்துக்கும் உள்ள வளர்ச்சி உள்ளார்ந்தது.ஆனால், நமது கொரோனா காலத்தில் உலகம் முழுதும் உள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை உற்பத்தியில் ஈடுபடவே இல்லை. இவை தங்களிடம் உள்ள நிதிச் சொத்துகளை பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும், உற்பத்தியில் பெருகும் லாபத்தில் ஈட்டிய செல்வத்திலும் நிதிச் சொத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றன.

இவற்றை உடைத்து மீண்டும் மூலதனமாக்கி நிஜசொத்துகளை இயங்க அனுமதிப்பதில்லை. இதனால், இவ்விரு சொத்துகளுக்குமான முரண் அதிகரிக்கிறது. மறுபுறம் அந்தச் சொத்துகள் ஏட்டளவிலான சொத்துகளாக இருக்கின்றன.இந்தப் பிரச்னையின் உண்மையான தீர்வு என்பது செல்வத்தையும் வருமானத்தையும் முறையாகப் பகிர்வதுதான்.

ஆனால், அது எளியதல்ல. நமது அடிப்படைக் கட்டுமானம் என்பதே அதற்கு நேர் எதிரானதாக இருக்கிறது. இங்கு பல தேசங்களும் பொருளாதார நிபுணர்களும் இந்தப் பொருளாதாரப் பின்னடைவு என்பது ஏதோ கொரோனாவால் ஏற்பட்டது என்பதைப் போன்ற ஒரு மாயையை உருவாக்க நினைக்கிறார்கள்.

கொரோனா நமது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது என்பது உண்மைதான். ஆனால், அது எந்த தருணத்தில் வேண்டுமானாலும் சரியலாம் என்கிற நிலையில் இருந்த ஒரு மோசமான அமைப்பைத்தான் பாதித்திருக்கிறது என்கிறஉண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பொருளாதார அமைப்புகள் கொரோனா இல்லாவிடினும் இப்படியான பொருளாதாரப் பின்னடைவுகளை, சரிவுகளை சந்தித்துதான் ஆக
வேண்டும். இதுவே அதன் அடிப்படை  இயங்கியலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *