IPL தொடர் இன்று ஆரம்பம் சென்னையின் சுழலில் சிக்குமா மும்பை?

கொரோனா பாதிப்பால் சுமார் 4 மாதங்கள் தள்ளிப்போன ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இன்று ஒருவழியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அபுதாபியில் இன்று நடக்கும் முதலாவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை இதொடரின் மிகவும் வலுவான 2 அணிகளாக சென்னையும் மும்பையும் கருதப்படுகின்றன.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன என்பதில் இருந்தே இவற்றின் வலிமையை அறிந்து கொள்ளலாம்.

சம வலுவுடன் இருக்கும் இந்த 2 அணிகளும் மோதும் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் அனல் பறந்துள்ளது. இந்த 2 அணிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில்கூட பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

கடைசி விநாடி வரை யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று புரியாத வகையில் கடும் போட்டியைக் கொண்டிருந்த இந்த ஆட்டத்தில், மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது.

கடந்த போட்டியில் 1 ரன்னில் மும்பையிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்கு பழிவாங்கும் எண்ணத்துடன் இன்று களம் இறங்குகிறது.

ஆனால் அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த ஐபிஎல்-லில் ஆடாதது சென்னை அணிக்கு பெரும் சறுக்கலாக உள்ளது.

அத்துடன் தோனி, பிராவோ, வாட்சன் என்று சென்னை அணியின் முன்னணி வீரர்கள் வயதானவர்களாக இருப்பதால், மும்பையின் இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களால் ஆட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருப்பினும் வியூகம் வகுப்பதில் வல்லவரான தோனி, தலைமையேற்று நடத்தும்வரை சென்னை அணியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று சென்னை அணியின் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

அவர்களின் நம்பிக்கையை தோனியால் காப்பாற்ற முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரோஹித் சர்மாவின் தலைமையிலான மும்பை அணி, அனுபவமிக்க மற்றும் இளம் வீரர்களின் கலவையாக இருப்பது, அதன் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த மலிங்கா, இந்தத் தொடரில் ஆடாதது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என்பதை கேப்டன் ரோஹித் சர்மாவே ஒப்புக்கொண்டுள்ளார்.

மும்பை அணியைப் பொறுத்தவரை பேட்டிங்தான் அதன் மிகப்பெரிய பலமாக உள்ளது. ரோஹித் சர்மா, டி காக், பொலார்ட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா என்று மிக நீண்ட பேட்டிங் வரிசையை அந்த அணி பெற்றுள்ளது.

அதேநேரத்தில் ஹர்பஜன் சிங் இல்லாவிட்டாலும், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தஹிர், பியூஷ் சாவ்லா என்று மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சு கூட்டணியை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக கூறப்படும் அபுதாபி மைதானத்தில், சென்னையின் சுழலில் மும்பை சிக்குமா அல்லது மும்பையின் பேட்டிங் வரிசை சென்னையைத் தகர்க்குமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *