இரு கைகளால் நிமிடத்தில் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை!

மங்களூருவில் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை படைத்து உள்ளார். அவரது இந்த சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் கோபட்கர். இவரது மனைவி சுமா பட்கர். இந்த தம்பதியின் மகள் ஆதிஸ்ரூபா(17). ஆதிஸ்ரூபாவுக்கு இரு கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவரும் அந்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வந்தார். தற்போது 2 கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதி வருகிறார். அதாவது வலது கையில் எழுதும் வார்த்தையை, இடது கையையும் பயன்படுத்தி எழுதி வருகிறார். இதுபற்றி அறிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு வந்து, ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது. இதில் கலந்து கொண்ட ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார்.

இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த உத்தர பிரதேச கல்வி நிறுவனத்தினர், ஆதிஸ்ரூபாவை வெகுவாக பாராட்டி அவருக்கு விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25 வார்த்தைகள் எழுதியதே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஆதிஸ்ரூபா தகர்த்து உலக சாதனை படைத்து உள்ளார் என்று கல்வி நிறுவனம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சாதனை படைத்த ஆதிஸ்ரூபா கூறும்போது, நான் எனது தந்தை, தாய் நடத்தும் கல்வி பயிற்சி மையத்தில் தான் படித்து வருகிறேன். நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத உள்ளேன். எங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் பாடங்களை படிப்பார்கள். மற்ற நேரங்களில் எங்களது தனித்திறனை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். கடவுள் எனக்கு 10 விரல்கள் கொடுத்து உள்ளார். அந்த விரல்களை வைத்து நான் இன்னும் நிறைய சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளேன். இரு கைகளை பயன்படுத்தி இன்னும் வேகமாக எழுத திட்டமிட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து ஆதிஸ்ரூபாவின் பெற்றோர் கூறும்போது, 2 வயதிலேயே ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 பக்கங்கள் எழுதுவார். பள்ளிக்கு சென்றது இல்லை. எங்களது பயிற்சி மையத்தில் தான் படித்து வருகிறார். இசையிலும் ஆர்வம் கொண்ட ஆதிஸ்ரூபா, இந்துஸ்தானி இசையை கற்று வருகிறார். மேலும் கித்தார் வசிக்கவும் பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் பாடல் பாடிய ஒரு ஆல்பமும் வெளியாகி உள்ளது. யக்‌ஷகானா நாடகங்களில் நடித்து உள்ள ஆதிஸ்ரூபா, குரலை மாற்றி பேசும் போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று உள்ளார். தனது 10வது வயதில் 40 கலைகளின் தொகுப்பையும் வெளியிட்டார்.

அவர் இரு கைகளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்து உள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல கண்ணை கட்டி கொண்டு எழுதும் திறனும் அவருக்கு உண்டு. 2019ம் ஆண்டு வரை 1,600-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆதிஸ்ரூபா தனது திறமையை காட்டியுள்ளார். இவ்வாறு பெற்றோர் கூறினர். இதற்கிடையே ஆதிஸ்ரூபா இரு கைகளை பயன்படுத்தி எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆதிஸ்ரூபாவுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *