சினிமாவால் கோடம்பாக்கத்தில் புதிய குழப்பம்!

5 மாதங்களுக்கும் மேலாக ‘விலங்கு’ போடப்பட்டுள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான நேரம் கனிந்து வரும்போது கோடம்பாக்கத்தில் முட்டல், மோதல் ஆரம்பித்துள்ளது.

அண்மையில் தொடங்கப்பட்டுள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் தான் இந்தப் புயலுக்குக் காரணம்.

சினிமா தியேட்டர் அதிபர்களுக்கு அதிரடியாக 6 கோரிக்கைகளை முன்வைத்துள்ள தயாரிப்பாளர்கள், “இந்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால், படங்களைத் தர மாட்டோம்’’ என்று எச்சரிக்கும் தொணியில் குரல் கொடுத்துள்ளனர்.

என்ன கோரிக்கைகள்?

10 ஆண்டுகளாக கியூப், வி.பி.எஃப். (VIRTUAL PRINT FEE) கட்டணத்தைச் செலுத்தி வந்தோம். இனிமேல் இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் தரமாட்டோம்.
திரையரங்கு ஷேர் விகிதங்கள் 50, 40, 30 என்பது மிகவும் குறைவு. திரையரங்களின் தன்மை மற்றும் படத்தின் பட்ஜெட் அடிப்படையில் இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர வேண்டும்.
ஆன்லைன் புக்கிங் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு வேண்டும்.

ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென நிறுத்தக்கூடாது.

கன்பர்மேஷேன் என்ற பெயரில் எடுத்து நடத்தும் திரையரங்குகளுக்குப் படம் தரமாட்டோம்.

இது தயாரிப்பாளர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்.

இதனை நியாயப்படுத்துகிறார் பிரபல தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்:

“வி.பி.எஃப். கட்டணத்தை பல ஆண்டுகளாக நாங்கள் சுமந்து வருகிறோம். இப்போது 90 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. சின்ன மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்களால் வி.பி.எஃப். கட்டணத்தைத் தாங்க இயலாது.
விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறோம். யாரும் பாதிக்கப்படக் கூடாது’’ என்று தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார் தியாகராஜன்.

திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகிறார்.
“வி.பி.எஃப். கட்டணத்தைத் தருமாறு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தப்போவதில்லை. அவர்கள் படங்கள் தராவிட்டால், நாங்கள் தியேட்டர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஒளிப்பரப்புவோம்.

தயாரிப்பாளர்கள், ஓ.டி.டி. தளங்கள் மற்றும் டி.வி. சேனல்களுக்கு படங்களை விற்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் எங்களுக்குப் பங்கு தருவார்களா? பிறகு எப்படி தியேட்டர்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு அவர்கள் பங்கு கேட்கிறார்கள்?’

“தாங்கள் தரும் படங்களுக்கு தான் விளம்பரம் வருவதாக தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். நல்ல வாதம் ஒப்புக்கொள்கிறோம். திருமண மண்டபங்கள் மற்றும் பூங்காக்களில் அவர்கள் (தயாரிப்பாளர்கள்) தங்கள் சினிமாக்களைத் திரையிடலாமே?’’ என்று, திரையரங்கு உரிமையாளர்களின் கொதிப்பைக் கிண்டலாகப் பகிர்ந்து கொண்டார் திருப்பூர் சுப்பிரமணியம்.
5 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல உள்ளாட்சி அமைப்புகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
“கோடம்பாக்கத்தில் புதிதாக முளைத்துள்ள இந்தப் பிரச்சினைக்கு, அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’’ என்பது சினிமா துறையில் உள்ள பொதுவானவர்களின் கருத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *