20 இறுதியானது அல்ல மாற்றங்கள் வருமாம்!

அரசியலமைப்பின்  20 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்கள் சகிதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிரணி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கலாம் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (10) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான கருத்தாடலுக்கு இருவாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பலரும் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாடுபட்ட தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

எனவே, வர்த்தமானியை நாளாந்தம் திருத்திக்கொண்டு இருக்கமுடியாது. எனவேதான் அனைத்து கருத்துகளையும் உள்வாங்கிய பின்னர், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. திருத்தம் மேற்கொள்வதற்கான பொருத்தமான இடமும் இதுவே.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். எனவே, உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானமும் கிடைக்கப்பெறும்.

20 இற்கு எதிரணி உறுப்பினர்களும் ஆதரவு வழங்கலாம். அதற்காக கட்சி மாறவேண்டும் என்றில்லை. மாறினால்கூட அதனை தடுக்கமுடியாது.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *