முகமது குட்டி – மம்முட்டி ஆனது எப்படி?

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் கே.வி.ஜெயஸ்ரீ.

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என மொழி பெயர்த்துள்ளார் ஜெயஸ்ரீ.
கே.வி.ஜெயஸ்ரீயின் சகோதரிதான் மொழிபெயர்ப்பாளரும், வம்சி பதிப்பக உரிமையாளருமான கே.வி.ஷைலஜா. இவருடைய கணவர் எழுத்தாளரும், நடிகரும், கதைசொல்லியுமான பவா.செல்லத்துரை.

ஷைலஜாவின் பூர்வீகம் கேரளா என்றாலும், வசிப்பது திருவண்ணாமலையில்.
‘சிதம்பர நினைவுகள்’ ஷைலஜா மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த முதல் புத்தகம். அதைத் தொடர்ந்து பல புத்தகங்கள் இவருடைய மொழியாக்கத்தில் தமிழுக்கு வந்தடைந்திருக்கின்றன.

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் வாழ்வனுபவங்களைச் சொல்லும் ‘மூன்றாம் பிறை’ என்ற நூலும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வந்து கவனம் பெற்ற நூல். அதைப் பதிப்பித்தது வம்சி பதிப்பகம்.
கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள ‘செம்பு’ கிராமத்தில் இஸ்மாயில் – ஃபாத்திமா தம்பதிக்கு மகனாகப் பிறந்த முகமது குட்டி – மம்முட்டி ஆனது எப்படி?

மூன்றாம் பிறை – நூலிலிருந்து ‘செழுமையான’ ஒரு பகுதி கீழே:

எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ. படிக்கச் சேர்ந்தபோதுதான் பி.ஐ.முகம்மது குட்டி என்ற என்னுடைய பெயர் மிகவும் பட்டிக்காட்டுத்தனமாகத் தோன்றியது.
சிலர் என்னை மிகவும் கொச்சையாக மெகம்மது குட்டி என்றும் கூப்பிட்டார்கள். அப்பாவும், அம்மாவும் அன்றும் இன்றும் ‘மம்முது குஞ்ஞே’ என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இந்தக் கல்லூரியில் இல்லை என்பதால், நான் என் பெயரை ‘ஓமர் ஷெரிப்’ என்று மாற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

திலீப்குமார் யூசுப்கானாகவும், பிரேம் நசீர் அப்துல் காதராகவும் இருந்தவர்கள்தானே. கெ.பி.உம்மா் சினேகஜன் என்று மாறி பார்க்கவில்லையா, அதனால்தான் பெயர்மாற்றம் என்னை அதிக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்று நினைத்தேன்.

ஓமர் ஷெரீஃபாக மாற நினைத்தது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்கூடத் தெரியாது. ஆனால் அன்று என்னுடன் இருந்த மிகச் சிலருக்கு அது தெரிந்திருந்தது.
கல்லூரியில் எல்லோரும் மம்முட்டி என்று கூப்பிடும்போது இந்தப் பெயர் சரியில்லையே என்ற எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கும்.

என்னுடைய அப்பாவின் அப்பா பெயர் முகம்மது குட்டி. அப்படி பரம்பரை வழியாகத்தான் எனக்கு இந்தப் பெயர் வந்திருந்தது.

ஆனாலும் மம்முட்டி எனும் பெயரின் யதார்த்த வோ் தீர்க்கதரிசியான முகம்மதிலிருந்தே வந்திருந்தது.
இப்போதிருக்கிற பலருடைய பெயருக்கும் அதனுடைய வேருக்கும் இடையிலான பந்தம் மிகவும் சுவாரசியமானவை.

சேகரன் குட்டி என்ற பெயர்தான் சேகு, சேக்கு, செக்குட்டி, சேக்குண்ணி என்றெல்லாம் ஆனது. சமஸ்கிருத ருசியுடைய தேவனின் (Dhevan) பெயர்தான் அடித்தட்டு மக்களிடம் போய்ச் சேரும்போது தேவன் (Thevan) என்று ஆகிறது.
வேலாயுதம் என்ற பெயர்தான் வேலுப்பிள்ளை, வேலுக்குட்டி, வேலாண்டி, வேலன், வேலு என்றெல்லாம் ஆனது. ஜேக்கப் என்பது சாக்கோ, சாக்கோச்சி, சாக்கு, சாக்குண்ணி என்றெல்லாம் மாறிப்போனது.

குட்டப்பன் என்கிற பெயர் பிடிக்காததால் நண்பனொருவன் கெசட்டில் விளம்பரம் கொடுத்து, ‘ப்ரகாசன்’ என்று பெயரை மாற்றினான். பிறகும் அவன் ‘ப்ரகாசன் குட்டப்பன்’ என்றுதான் அறியப்பட்டான்.

பெயா் மாற்றம் பல நேரங்களில் இப்படித்தான் துக்கத்தில் முடிகிறது.
மம்முட்டி என்கிற பேரைக் கேட்கும்போது மனதில் உயர்ந்தெழும் உருவம் வடகேரளத்தில் மலபாாிலுள்ள முதியவருக்கானது. இது எப்படி வந்தது என்றெனெக்குத் தெரியாது.

முதன்முதலாக என்னைத் தேடிவந்த சினிமா வாய்ப்பு இந்தப் பெயரில்தான் வந்தது. மஞ்ஞேரியில் அட்வகேட் பி.ஏ.முகம்மது குட்டி என்ற பெயர் பலகை வைத்திருந்த நாட்களில் ஒரு மத்தியான வெயிலில் போஸ்ட்மேன் விசாரித்தபடியே வந்தார்.
அவருடைய கையில் அட்வகேட். மம்முட்டிக்கொரு கடிதம் இருந்தது. இப்படி ஒரு வக்கீலை அந்த ஏரியாவில் போஸ்ட்மேன் அறிந்த வரில்லை.

ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். இது எனக்காகத் தானிருக்கும் என்ற நம்பிக்கையில் நான் வாங்கினேன்.

கல்லூரியில் அதன் பழைமை தன்மையை யோசித்து விட்டொழித்திட வேண்டும் என்று நான் நினைத்த பெயர், இங்கே மீண்டும் என்னை சினிமாவிற்குக் கொண்டுச் செல்ல, தேடியலைந்து கண்டெடுத்தது.

மூன்றாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பி.ஜி.விஸ்வாம்பரன் மீண்டும் என் பெயரை மாற்றினார்.
ஜாதியும், மதமும் புரிபடாத ஒரு பெயராக இருந்தால் எல்லாத் தரப்பிலிருந்தும் கொண்டாடப்படுபவர்கள் இருப்பார்கள் என்றும் நினைத்தார்.

அக்கருத்தில் எனக்கும் முழு உடன்பாடு இருந்தது. அதனால் படத்திற்கான போஸ்டர் அடித்தபோது ‘சஜில்’ என்று பெயரை மாற்றி அடைப்புகுறிக்குள் மம்முட்டி என்றும் அச்சடித்திருந்தார்.

படம் வெளியாவதற்கு முன்பே, வெளியிலிருந்த பெயர் போய் அடைப்புக்குறிக்குள் இருந்த பெயர் மட்டுமே மீதியாக இருந்தது. அங்கேயும் மம்முட்டி என்னைப் பின் தொடர்ந்திருந்தார்.
மனதால் வெறுக்கவும், எதிா்க்கவும், வேதனைப்படவும் வைத்த பெயர்தான் பிறகு என்னை எல்லோருக்கும் அறியப்படவைத்தது.

வெளிநாடுகளில் ‘மாம்டி, மம்உட்டி, மாமுட்டி’ என்றெல்லாம் பலரும் அழைத்தபோது அதன் அடிப்படையில் வடகேரளத்தில் மலபாரில் வயதான தேய்ந்துபோன உருவமும் பெயரும்தான் நினைவிற்கு வரும்.
அந்தப் பெயர் என்னைப் பல நேரங்களில் ஆள் கூட்டத்தில் தனியனாய் அடையாளப்படுத்திடவும், நெருங்கவும், கரைந்து உருகவும் உதவியது என்பதென்னவோ உண்மைதான்.
குழந்தை பிறந்தவுடன் மனித உன்னதம், அடையாளம், கவுரவம், ஆதர்சம் என்பதெல்லாம் இல்லாமல் பெற்றோரும், நமக்கு வேண்டியவர்களும் வைப்பதுதானே பெயர்.

என் வாழ்வில் மம்முட்டியை என்னால் யோசிக்க முடியவில்லை. உதறி எறியப் பார்த்தும் மம்முட்டி என்னைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்.

அப்பாவும் அம்மாவும் ‘மம்மது குஞ்ஞே’ என்று கூப்பிடும்போது அவ்வார்த்தையில் அதிக வாஞ்சை இருப்பதாய் தோன்றும். பெயர்களை நாம்தான் பிரியமானதாய் மாற்றிக் கொள்கிறோம்.
ஆனால் என் பெயர் எல்லோராலும் உச்சரிக்கப்பட்டு உச்சரிக்கப்பட்டு எல்லோருக்கும் பிடித்தமானதாக மாறியிருக்கிறது.

அழைத்தலின் பின்னுள்ள அன்பும் வாத்சல்யமும்தான் பெயரைச் சந்தோசமாக்குகிறது.

என் பெயருக்கு இத்தனை பாசத்தைக் கொடுத்த எல்லோரின் அன்பைப் பொத்தி பாதுகாக்கவும், மேலும் அவர்களை ஆத்மார்த்தமாக நேசிக்கவும்தான் நான் சிரமப்பட வேண்டியிருக்கிறது.
நடிப்பிலும் அாிகாரத்திலும் அதன் பின்னாலும் அந்தச் சிரமத்தை நான் புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *