சத்தான உணவுக்காக பூச்சிகளை சாப்பிடும் வட கொரிய மக்கள்!

வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்பவர் தற்போது, தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தியதுடன், வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.

வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக கூறும் பார்க், வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை தாமும் பூச்சிகளை சாப்பிட்டதாக கூறுகிறார்.

பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாக கூறும் பார்க், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

பள்ளிகளில் நட்பு அல்லது காதல் என்பதையே காண முடியாது என கூறும் அவர், மின்சாரம் கூட வடகொரியாவில் பொதுவல்ல என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின்படி வடகொரியாவில் மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் நாளுக்கு ஒரு வேளை உணவருந்துபவர்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கிம் ஜாங் நிர்வாகம் கோடி கணக்கான டாலர்கள் செலவில் அணுஆயுதம் தயாரிக்க முனைப்பு காட்டுவதாகவும், அதில் ஒரு 20 சதவீதம் மக்களுக்காக செலவிட்டால் நாட்டில் பட்டினிச்சாவுகள் இருக்காது என்கிறார் பார்க்.

பார்க் தமது தாயாருடன் கடந்த 2007 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து சீனர் ஒருவரை நம்பி வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த நபர் சீனாவுக்கு அழைத்துச் சென்று தாயாரையும் 13 வயது சிறுமியையும் இன்னொரு சீன கும்பலுக்கு விற்றுள்ளார். அந்த கும்பல் பார்க்கின் தாயாரை பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளது. ஒருவழியாக அங்கிருந்து தப்பி மங்கோலியா சென்று, கோபி பாலைவனத்தைக் கடந்து, தென் கொரியாவில் பார்க்கின் சகோதரியுடன் இணைந்துள்ளனர். தொடர்ந்து 2014-ல் பார்க் அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *