சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்

 

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகள் வகித்து வந்த பலரும் தங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஏமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கமாண்டராக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆளுநராக இருந்த அவரது மகன் அப்துல்லாசீஸ் பின் ஃபகாத்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சௌதி பாதுகாப்பு அமைச்சகத்தில் சந்தேகத்திற்கு இடமான நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக வேறு நான்கு அதிகாரிகளுடன் இவர்கள் இருவரும் விசாரணையை எதிர்கொண்டு உள்ளதாக சௌதி மன்னரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி மன்னராக சல்மான் இருந்தாலும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே சௌதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்.

சௌதி அரேபிய அரசில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனினும் இளவரசர் அரச அதிகாரத்தில் தனது பிடியை இறுக்கிக் கொள்வதற்காகவே உயர்மட்ட அளவிலான கைதுகள் நிகழ்த்தப்படுகின்றன என்று அவரது விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சௌதி மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அகமது பின் அப்துல்லாசீஸ் மற்றும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃப் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *