பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரனின் பேச்சால் சர்ச்சை!

பாராளுமன்றத்தில் மேற்கொண்ட சத்திய பிரமாணத்தை மீறும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட எம்.பியான நளின் பண்டார வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்பு முடிவடைந்தகையோடு விக்னேஸ்வரன் விவகாரம் சபையில் சூடுபிடித்தது.

ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய சஜித் அணி உறுப்பினரான மனுச நாணயக்கார,

” சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் உரையின்போது இலங்கையின் பூர்வீக மொழி பற்றியும் சுயநிர்ணய உரிமை சம்பந்தமாகவும் விக்கேஸ்வரன் வெளியிட்ட கருத்துகளை ஹென்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரிருந்தேன். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் அவரின் உரை ஹென்சாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.” என சுட்டிக்காட்டி சர்ச்சைக்கு பிள்ளையார்சுழி போட்டார்.

”  ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. ” என சபாநாயகர் சுட்டிக்காட்டியபோது,

ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சாந்த பண்டார,

” நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து அரசியலமைப்பைமீறும் விதத்தில் இருந்தால் அது ஹென்சாட்டில் இருந்து இதற்கு முன்னரும் நீக்கப்பட்டுள்ளது. எனவே, இவரின் உரையில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளும் நீக்கப்படவேண்டும்” – என வலியுறுத்தினார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,

” பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடமாட்டோம் என சபையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம். இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து ஒரு மணிநேரத்துக்குள்ளேயே அதனைமீறும் வகையில் விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரின் உரை இனவாதம் கொண்டது. சபையில் செய்த சத்தியப்பிரமாணத்தைமீறும் வகையில் உள்ளது. எனவே, அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவேண்டும்.”  – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *