கருப்பினத்தவர் மீதான தாக்குதலால் பற்றி எரிகிறது அமெரிக்கா!

அமெரிக்க பொலிஸாரால் சுடப்பட்ட மற்றுமொரு கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக்கிற்கு நீதி கோரி நடந்த போராட்டத்தில் காவலர்களால் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மே-25 ம் திகதி அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தவர் என்ற காரணத்தால் ஜோர்ஜ் புளோய்ட் என்பவர் டெரிக் என்ற காவலரால் முழங்காலால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலைக்கான நீதி கேட்டு நடந்த மாபெரும் போராட்டம் கொரோனா பேரிடரையே மறக்கடிக்கும் அளவுக்கு அமெரிக்காவை அதிரவைத்தது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பையே ஆட்டம் காணவைத்தது.

இப்படுகொலைக்காக, கருப்பினத்தவர் மட்டுமல்ல வெள்ளை இனத்தவர் என அனைத்து இனத்தவரும் இணைந்து போராடியது போராட்டத்திற்கு வலு சேர்த்தது. அதிலிருந்து, காவல்துறையினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில்தான், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் கெனோஷா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக்கை பொலிஸார் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அதுவும், அந்த இளைஞரின் முதுகில் 7 குண்டுகள் பாய்ந்த வீடியோ வைரலாகி உலகையே கோபப்பட வைத்தது. இனவெறியுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்பதால் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் நீதிக்கான போராட்டம் வெடித்துள்ளது.இந்தப் போராட்டத்தில்தான் இரண்டுபேர் காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மூன்றாவதாக சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இச்சம்பவம் மேலும் அமெரிக்கர்களிடையே ஆத்திரத்தை தூண்டி ட்ரம்ப் அரசுக்கு எதிராக போராட வைத்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்பிரச்சனைகள் ட்ரம்ப் அரசுக்கு எதிராக அமையும் என்றே கூறுகிறார்கள், அரசியல் விமர்சகர்கள். ஏனெனில், ஜோர்ஜ் புளோய்ட் கொல்லப்பட்டபிறகும் அதேபோன்ற பிரச்சனை என்பதால் அவருக்கு தேர்தலில் பாதகமாகவே அமையும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *