பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்றம் வருகிறார் பிள்ளையான்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாளைய தினம் நடைபெறவுள்ள 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கன்னி அமர்வுக்கு நீதிமன்ற அனுமதியுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறைச்சாலையில் இருந்த வண்ணமே நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் போட்டியிட்டு 54198 விருப்பு வாக்குகளைப் பெற்று சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றில் ஏற்கப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

இதனடிப்படையில் நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் படுகொலை தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்குமானு அனுமதியை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *