“சோ” பெயர் வந்தது எப்படி? – சோ-வே சொன்ன விளக்கம்

“எங்க அம்மா ராஜலட்சுமி. எல்லோரும் ‘ராஜம்மா’ என்று தான் கூப்பிடுவோம். அவரை மாதிரி ஒரு பொறுமைசாலியைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்குப் பொறுமை.

தாய் வழிப் பாட்டியும் ஆச்சரியமாக அத்தனை வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு சர்வ சாதாரணமாகச் செய்வார்.

அவர் அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை. அந்தக் காலப் பெண்களில் பலர் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு என்று அவதாரம் எடுத்த மாதிரி இருந்தார்கள். அப்படித்தான் எங்கம்மாவும் இருந்தார்.
எங்க அம்மாவைப் பற்றி எங்க தாத்தா அருணாச்சல ஐயர் ‘ஏக சந்த க்ராஹி’ என்று சொல்வார். அதாவது எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்கிற கற்பூரப் புத்தி. காதில் கேட்டதை அப்படியே கிரகித்து மனதிற்குக் கொண்டு போய்விடுவார்.

சாமியார்களையோ, ஜோதிடர்களையோ நம்ப மாட்டார். சந்நியாசிகளில் அவர்கள் நம்பி மதித்தது காஞ்சி மகாப் பெரியவாளை மட்டும்தான்.

டி.வி.யில் ஏதாவது சினிமாவைப் பார்க்கிறபோது ஹீரோவுக்குப் பின்னால் திரையில் வில்லன் வந்தால் “அதோ.. பாரு.. பின்னாடி வரான் பாரு..” என்று கத்துகிற அளவுக்கு மிக எளிமையான மனசு. அந்த அளவுக்குக் குழந்தைத் தனம்.

நான் எப்பேர்ப்பட்ட தப்பு பண்ணினாலும் “ஏன்டா.. இப்படி முட்டாளாய் இருக்கே..” என்பதைத் தாண்டி எதையும் பேசமாட்டார்.

அதுதான் அவர்களுடைய அதிகபட்சக் கண்டிப்பு.

அவர் எனக்கு வைத்த பெயர் தான் ‘சோ’.

அதற்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கிறது. ராஜராஜ சோழனுக்கு ஒரு சமயம் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து தப்பித்து கோயிலுக்கு அவர் ஓடினார். ஓடின போது முன்னால் இருந்த விநாயகர், சோழனிடம் “நீ பின் வழியா உள்ளே ஓடிப்போயிடு. நான் பிரம்மஹத்தி வந்தா பிடிச்சு வச்சுக்கிறேன்.” என்று சொல்லி விட்டார்.

அது சோழனைப் பிடித்த பிரம்மஹத்தி.

அதை நினைவில் வைத்து எங்க அம்மா என்னை ‘சோழன் பிரம்மஹத்தி’ என்று கூப்பிடுவார்கள். அப்படிக் கூப்பிடுகிற அளவுக்கு அப்போது சேட்டை, வம்பு, தொந்தரவு எல்லாம் நான் பண்ணி இருக்கேன் போலிருக்கிறது…

‘சோழன் பிரம்மஹத்தி’ என்று முதலில் கூப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அதைச் சுருக்கி ‘சோழன்’ என்று கூப்பிட்டார்கள்.

“சோழா… சோழா…” என்று கூப்பிட்டு அது இன்னும் சுருங்கி ‘சோ’ ஆகிவிட்டது. அப்புறம் மற்றவர்களும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படி எனக்கு வந்த பெயர் ‘சோ’.

அப்படி எங்க அம்மா வைத்த அந்தச் சுருக்கமான பெயர்தான் நான் பிரபலமாவதற்கு மிகவும் உதவியது என்று சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *