வாழைநாரில் தயாராகும் முகக் கவசங்கள்!



உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கிறது. ஒருபக்கம் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் சுகாதாரப் பணிகளுக்குத் தேவைப்படும் பொருள் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழை நாரில் முகக் கவசங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

வாழை நாரில் இருந்து தயாரிக்கப்படும் முகக்கவசம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள்.
சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சிகளுக்கு உலக நாடுகள் ஆதரவை அளித்து வரும் நிலையில், இந்த இயற்கையான முகக் கவசங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறார்கள்.

வாழ்க்கையை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது கொரோனா. இந்தச் சிக்கலான நேரத்தைச் சமாளிக்க மக்களால் பயன்படுத்தப்படும் முகக்கவசம், கவச உடைகள் போன்ற அத்தனையும் பிளாஸ்டிக் தயாரிப்புகளாக உள்ளன. அவை எளிதில் மக்குவதில்லை.

பிலிப்பைன்ஸில் அபாக்கா என்ற நார்ப்பொருள் ஒருவகையான வாழையில்  இருந்து எடுக்கப்படுகிறது. அதில் பலதரப்பட்ட ஃபைபர் பொருட்கள் தயாராகின்றன. அதனை தேநீர்ப் பைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
இரண்டு மாதங்களில் மக்கிவிடும் என்று சொல்கிறார் அத்தொழிலில் ஈடுபட்டுவரும் கென்னடி கோஸ்டேல்ஸ்.

ஐ.நா.வின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக நார்ப்பொருட்கள் தயாரிப்பில் பிலிப்பைன்ஸ் இருந்து வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் 85 சதவீத நார்ப்பொருள் தயாரிப்புகளை வழங்கியுள்ளது. இந்த ஆண்டில், அதன் மொத்த உற்பத்தி 100 மில்லியன்  அமெரிக்க டாலராக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கொரோனா காலத்தில் சிந்தட்டிக் ஃபைபரால் செய்யப்படும் முகக்கவசங்களைப் பயன்படுத்துகிறோம். அவை மக்குவதற்கு பல நாட்கள் பிடிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

அபாக்கா நாரில் தயாரிக்கப்படும் பொருள்களில் பத்து சதவீதம் மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன என்கிறார் கோஸ்டேல்ஸ். மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் அபக்கா நார்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவது மக்களுக்கு நல்லதுதான்.

பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக மக்கும் பொருட்களைத் தயாரிக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
ஆனால் பிலிப்பைன்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நடத்திய ஆய்வின் முடிவில், அபாக்கா நாரில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் நீரை எதிர்க்கும் தன்மையை அதிகம் பெற்றுள்ளன என்பது தெரிய வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *