பாராளுமன்றத் தேர்தலில் ஏழு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு!

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் ( 4.58%) நிராகரிக்கப்பட்டுள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தாலும் ஒரு கோடியே 23 லட்சத்து 43 ஆயிரத்து 302 பேரே ( 75.89%) வாக்குரிமையைப் பயன்படுத்தினர். 24.11 வீதமானோர் வாக்களிக்கவில்லை.
2019 ஜுலை மாத வாக்காளர் பட்டியலே தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதால் வாக்காளர்களில் சிலர் மரணித்திருக்கலாம், பலர் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். மறுபுறத்தில் கொரோனா பிரச்சினை வேறு. எனவே, 75 வீதமான வாக்கு பதிவு வரவேற்ககூடிய விடயமாகும்.
ஆனாலும், வாக்களிப்பு தொடர்பில் எவ்வளவுதான் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டாலும் நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டுதான் இருக்கின்றது

அது தொடர்பான பார்வையே இது.

இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது.

1. தேர்தல் திகதி – 1989 பெப்ரவரி 15

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59 லட்சத்து 62 ஆயிரத்து 31 ( 63.60%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3 லட்சத்து 65 ஆயிரத்து 563 ( 6.13%)

செல்லுபடியான வாக்குகள் – 55 லட்சத்து 96 ஆயிரத்து 468 ( 93.87%)

2.1994 ஒக்டோபர் 16

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 83 லட்சத்து 44 ஆயிரத்து 95 (76.24%)

நிராகரிக்கப்பட்ட வாக்ககள் – 4 லட்சத்து 389 ( 4.80% )

செல்லுபடியான வாக்குகள் 79 லட்சத்து 43 ஆயிரத்து 706 (95.20%)

3.2000 ஒக்டோபர் 10

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 91 லட்சத்து 28 ஆயிரத்து 823 (75.62%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 481,155 (5.27 %)

செல்லுபடியான வாக்குகள் 86 லட்சத்து 47 ஆயிரத்து 668 ( 94.72% )

5.2001 டிசம்பர் 05

அளிக்கப்பட்ட வாக்குகள் – 94 லட்சத்து 49 ஆயிரத்து 813 ( 76.03% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4 லட்சத்து 93 ஆயிரத்து 944 ( 5.22%)

செல்லுப்படியான வாக்குகள் – 89லட்சத்து 55 ஆயிரத்து 869 ( 94.77% )

5. 2004 ஏப்ரல் 02 

அளிக்கப்பட்ட வாக்குகள் – 97 லட்சத்து 97 ஆயிரத்து 680

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 34 ஆயிரத்து 948

செல்லுப்படியான வாக்குகள் – 92 லட்சத்து 62 ஆயிரத்து 732

6.2010 ஏப்ரல் 08

அளிக்கப்பட்ட வாக்குகள் 86 லட்சத்து 30 ஆயிரத்து 689 ( 61.26% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 96 ஆயிரத்து 972 ( 6.92% )

செல்லுபடியான வாக்குகள் – 80 லட்சத்து 33 ஆயிரத்து 717 ( 93.08%)

7.2015 ஒக்டோபர் 17

அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 98 ( 77.66%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 17 ஆயிரத்து 123  ( 4.43% )

செல்லுபடியான வாக்குகள் – ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 975 ( 95.57%)

வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.

அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம். ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)

கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

நன்றி ஆர்.சனத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *