இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார்

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை.

தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிவுகளை வைத்து தலைமைகளை மாற்ற வேண்டும் எனக்கூறுவது பொருத்தமற்றது.

தமிழரசுக் கட்சியில் இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எனக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அனைத்து உறுப்பினர்களும், மக்களும் இணைந்து ஒருமித்து கோரினால் அந்த தலைமையை ஏற்க நான் தயாராகவே உள்ளேன்.

அனைவரினதும் சம்மதத்துடனேயே அன்றி, இன்னொருவரது பதவியைப் பறித்து அதில் அமர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *