குண்டு வெடிப்பால் தகர்ந்து போன தலைநகரம்!

“மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை”,
“கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை”  – என்பது லெபனானைப் பொறுத்தவரை உண்மையாகி உள்ளது. இந்த உலகில் கஷ்டப்படுவதற்கென்றே இருக்கும் நாடோ, என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்நாட்டுக்கு பல்வேறு தொல்லைகள்.
மனிதன் வாழ்வதற்கு தேவைப்படும் முக்கிய தேவைகளில் ஒன்று தண்ணீர். அந்த விஷயத்தில்கூட தன்னிறைவு பெற முடியாத நாடாக உள்ளது லெபனான்.
கடுமையான பஞ்சத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்துவரும் லெபனானில் குடிப்பதற்கு தண்ணீர்கூட சரியாகக் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீருக்குதான் பஞ்சமென்றால், அந்நாட்டின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்கு சென்று அரசின் கழுத்தை நெரித்து வருகிறது.

சரி இருப்பதை வைத்து, கஞ்சியோ கூழோ குடித்து நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தால் அதற்கும் அங்கே வழியில்லை.
உலகின் முக்கிய தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஹிஸ்புல்லா, லெபனானில் ஆழமாக வேரூன்றி அந்நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஹிஸ்புல்லாவின் புண்ணியத்தால் உள்நாட்டுப் போர்கள், மற்ற நாடுகளுடன் விரோதம் என்று லெபனானின் தலையைச் சுற்றி ஏராளமான பிரச்சினைகள். இந்த சூழலில்தான் கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் – 4)  அந்நாட்டின் தலைநகரை தகர்க்கும் வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள ஒரு கிடங்கில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் அன்றைய தினம் மாலை 6.07 மணிக்கு வெடித்துச் சிதறியதில் சுமார் 10 கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த கட்டிடங்கள் சுக்குநூறாகி, வளர்ச்சியில் 40 ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றிருக்கிறது பெய்ரூட்.

இந்த வெடி விபத்தில் 135 பேர் மட்டுமே இறந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த வெடி விபத்தின் மூலம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெய்ரூட்டின் கவர்னர் மர்வான் அப்பவுட் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவமாகத்தான் இது கருதப்பட்டது. ஆனால் விபத்து நடந்த சில மணி நேரத்தில், இது குண்டு வெடிப்பல்ல  விபத்துதான் என்று லெபனான் அரசு தெரிவித்தது.

எதனால் ஏற்பட்டது வெடிவிபத்து:

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு பெய்ரூட்டுக்கு வந்த கப்பலில் கொண்டு வரப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம், துறைமுகத்தில் இருந்த கிடங்கு ஒன்றில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. காலங்கள் பல கடந்தபோதிலும் அவை வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் இருந்துள்ளன.
போதிய பாதுகாப்பு இல்லாமல் இது குவித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டால் பெய்ரூட் நகருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் துறைமுக அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், அரசு இதை கண்டுகொள்ளவில்லை.

இறுதியில் அதிகாரிகள் பயந்தது நடந்தே விட்டது. கடந்த செவ்வாய்க் கிழமை அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் பெய்ரூட்டின் முகமே சிதைந்தது.

அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?

அமோனியம் நைட்ரேட் என்பது அமோனியம் மற்றும் நைட்ரஜனின் கூட்டுக் கலவையாகும். விவசாய உரங்களைத் தயாரிக்கவும், வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக அமோனியம் நைட்ரேட், இந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. அமெரிக்காவில் ஆண்டுதோறும் மில்லியன் டன் கணக்கில் விவசாயத்துக்காக இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அங்கு இதுபோல் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை. ஆனால் பெய்ரூட் துறைமுகத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இந்த கொடூர வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வீடுகளை இழந்த 3 லட்சம் மக்கள் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 135 பேர் பலியாகி உள்ளனர். 5 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்த நிலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையில் இன்னும் யாராவது இறந்து கிடக்கிறார்களா என்பதை தேடும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லெபனான் அரசு நடவடிக்கை:

பெய்ரூட் நகரை தகர்த்தெறிந்த வெடிவிபத்து சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லெபனான் அரசு உறுதி அளித்துள்ளது. 2 வார நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ள லெபனான் அரசு, துறைமுக அதிகாரிகள் பலரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இத்தனை காலம் அங்கு அமோனியம் நைட்ரேட் குவித்து வைக்கப்பட்டதற்கும், வெடி விபத்துக்கும் காரணம் யார் என்பதை அறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இது தீவிரவாதிகளின் சதிச்செயல் என்று கூறிவருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். எது உண்மை என்பதை காலம்தான் நமக்கு விளக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *