பொத்தி பொத்திக் காக்கும் சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்!

பொத்தி பொத்திக் காக்கும் சில விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்போது வெட்கம், தயக்கம், அவமானம் என்று வெவ்வேறு உணர்வுகள் நம்மைச் சூழும்.
இயல்பை மீறி எதுவும் நிகழவில்லை என்று உறைத்த பின்னரே, அவையனைத்தும் விலகி மனம் உவகை கொள்ளும்.

இந்திய சமூகத்தில் தாம்பத்தியம் என்பதும் அப்படிப் பொத்திப் பாதுகாக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதனை மிக ஆழமாக, அழகாக, அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்துகிறது ‘பதாய் ஹோ’.
2018-ல் வெளியான இத்திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் குறைவான செலவில் தயாராகி இந்தியாவில் மட்டும் 130 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இதனாலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல மொழிகளில் ரீமேக் செய்வதற்கான போட்டியும் உருவானது.

ஆனாலும், இத்திரைப்படம் சிலகாலமாகத் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் ரசிகர்களை மட்டுமல்ல, உலகம் முழுக்கவிருக்கும் சாதாரண மக்களைக் கவர்ந்திழுக்கும் உள்ளடக்கம் இதன் திரைக்கதையில் இருக்கிறது.

எளிய மனிதர்களின் வாழ்க்கை!

ஒவ்வொரு வயதிலும் இன்ன விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டுமென்ற வரையறை உள்ளது. அது உடைபட்டால் என்னவாகும் என்பதே இக்கதையின் மையம்.
ஐம்பதுகளைத் தாண்டிய ஜிதேந்திர கவுசிக், மத்திய ரயில்வேயில் பணியாற்றுபவர். எதற்கெடுத்தாலும் ‘பப்லி’ என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு மனைவி பிரியம்வதாவிடம் பிரியம் செலுத்துபவர்.

இவரது மூத்த மகன் நகுல் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்ற, இளைய மகன் குல்லர் பள்ளி இறுதியாண்டு பயில்கிறார்.

இவர்களுடன் ஜிதேந்தரின் தாய் துர்காவும் சேர்ந்திருக்க, அந்த வீடே ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கான உதாரணமாக விளங்கி வருகிறது.

ஜிதேந்தர் வாங்கி வந்த மாம்பழமும், ஒரு மழைக்காலமும் அந்த குடும்பத்தின் இயல்பை மாற்றுகிறது.

ஜிதேந்தர் – பிரியம்வதா தம்பதியர் மூன்றாவதாக ஒரு குழந்தையை ஈன்றெடுக்கத் தயாராகின்றனர். நகுலும் குல்லரும் இத்தகவலைக் கேட்டு முகம் சிவக்க, துர்காவோ கொதித்தெழுகிறார்.
ஊர் உலகம் என்ன சொல்லும் என்ற எண்ணமே அந்த குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறது. நண்பர்கள், காதலி, அலுவலகம், குடும்பம் என்று எல்லாவற்றிலும் இருந்து நகுல் விலக இதுவே காரணமாகிறது.
ஆனால், அவரது காதலி ரெனியோ இதனை சர்வசாதாரண விஷயமாகப் பார்க்கிறார். அதையும் மீறி இருவருக்கும் இடையே இடைவெளி முளைக்கிறது.
இந்த நிலையில், ஒரு திருமணத்துக்காக ஜிதேந்தர், பிரியம்வதா, துர்கா மூவரும் வெளியூர் செல்கின்றனர். அந்த பயணமே, தன் மகனுக்கும் மருமகளுக்கும் எத்தகைய இடத்தை துர்கா தருகிறார் என்பதை தெரியப்படுத்துகிறது.

இடைப்பட்ட நாட்கள், குல்லருக்கும் நகுலுக்கும் தாய் தந்தையின் காதலைப் புரிய வைக்கிறது. அதன்பிறகு, எல்லாமே ‘சுபம்’ என்பதோடு படம் முடிவடைகிறது.

காட்சிகளின் அழகான கோர்வை!

வழக்கமான கதை போலத் தோன்றினாலும், அதனை காட்சிகளாக மாற்றிய விதத்தில் ‘அட’ போட வைக்கின்றனர் திரைக்கதை எழுதிய அக்‌ஷத் கில்தியால் மற்றும் சாந்தனு ஸ்ரீவஸ்தவா.

மனைவி கர்ப்பமானதைத் தயக்கத்துடன் தாயிடம் ஜிதேந்தர் விவரித்து முடிக்கையில், அவரது பல்செட்டும் செவித்திறன் குறைபாட்டுக்கான எந்திரமும் தனியே வைக்கப்பட்டிருப்பதாகக் காட்டும்போது சிரிப்பு பீறிடும்.

வெளியூர் சென்ற தாயிடம் மொபைலில் பேசுவதைக் கூட தவிர்க்கும் நகுல், மீண்டும் அவரை வீட்டில் பார்க்கையில் ‘சாப்பிடுறியா’ என்று கேட்டவுடன் நெக்குருகிவிடுவார்.
‘தனியறை ஏன் கேட்டாய்’ என்று முற்பாதியில் கோபப்பட்டு தம்பியை அடிப்பவர், பின்பாதியில் சக மாணவன் தம்பியை அடித்துவிட்டான் என்பதை அறிந்து கோபம் கொள்வது அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
தாய் தந்தையின் காதலை அவமானமாகக் கருதுபவர், ரெனியின் தாய் அதனை வெளிப்படுத்தியவுடன் சட்டென்று தனது தவறை உணர்ந்து பேசுவதும் இயல்பாகக் காட்டப்பட்டிருக்கும்.

பள்ளி கேண்டீனில் கடன் தொகையைச் செலுத்தும் குல்லர், அருகில் நிற்கும் மாணவியைப் பார்த்தவாறே கடப்பது பருவ வயதின் கொப்பளிப்பை ஒரு நொடியில் உணர்த்திவிடும்.

இதையெல்லாம்விட, ஒவ்வொரு காட்சியிலும் ‘பப்லி’ என்று ஜிதேந்தர் அழைப்பதும், பிரியம்வதா அதற்குப் பார்வையிலேயே ‘என்ன’ என்பதும் அழகு.

அருமையான நடிப்பு!

நகுலாக ஆயுஷ்மான் குரானாவும், ரெனியாக சான்யா மல்ஹோத்ராவும் நடித்திருந்தாலும், படத்தில் அற்புதமான காதலை வெளிப்படுத்துவது ஜிதேந்தர் – பிரியம்வதாவாக வரும் கஜராஜ் ராவ், நீனா குப்தா ஜோடிதான்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரைப்பட, தொலைக்காட்சி உலகில் நீனா குப்தா தெரிந்த முகம். அதனால், படத்தைத் தோளில் தாங்கிய கஜராஜ்தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தைத் தருகிறார்.

மகனையும் மருமகளையும் பார்வையாலே மென்று துப்பும் துர்காவாக வரும் சுரேகா சிக்ரி, இப்படத்துக்கு துணை பெண் பாத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதையும் இப்படம் வென்றது.

கண்களால் பார்க்கும்போது கொஞ்சமாய் அழகு மிளிர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு உணர்வைத் தன் ஒளிப்பதிவில் உருவாக்கியிருக்கிறார் சானு ஜான் வர்கீஸ்.

தேவ் ராவ் ஜாதவின் படத்தொகுப்பு, அபிஷேக் அரோராவின் பின்னணி இசை என்று பல விஷயங்கள் மேலும் அழகூட்டுகின்றன.

அனைத்தையும் கனகச்சிதமாக ஒருங்கிணைத்து மிளிரவைத்த வகையில் பளிச்சிடுகிறார் இயக்குனர் அமித் ரவீந்திரநாத் சர்மா.

அரிதாகப் பேசப்பட்ட கதைக்கரு!

மலையாளத்தில் டி.கே.ராஜீவ்குமார் இயக்கிய ‘பவித்ரம்’ திரைப்படமும், தமிழில் நிதிலன் இயக்கிய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படமும் இதே வகையில் வயதான தம்பதியர் குழந்தைப்பேறு பெறுவதைப் பேசியவை.
அவற்றில் இருந்து விலகி, எத்தனை வயதானாலும் தம்பதிகளுக்கிடையே கலவி என்பது இருந்தே தீரும் என்பதை உரக்கப் பேசியதற்காகவே ‘பதாய் ஹோ’வுக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டியிருக்கிறது.
உதட்டோடு உதடு கவ்வும் முத்தங்களையும் அரை நிர்வாணக் காட்சிகளையும் குழந்தைகள் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டவாறே ரசிக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர் இன்றும் இருக்கின்றனர்.

அதே குழந்தைகள் வளர வளர, மூடப்பட்டிருக்கும் அவர்களது படுக்கையறையை இயல்பாகக் கடந்து போகச் செய்யும் பக்குவத்தை விதைப்பது சாதாரண விஷயமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *