பணியாளர்கள் 35 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் HSBC வங்கி!

லாபத்தில் சரிவு, 35 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் வங்கி

இடைக்கால லாபம் சரிந்ததை அடுத்து பணி வெட்டுகளை துரிதப்படுத்த எச்.எஸ்.பி.சி வங்கி முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வாராக்கடன் அளவு 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை வரை உயரும் என்றும் அந்த வங்கி கூறுகிறது.

ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வங்கியின் மறுகட்டுமான திட்டத்தை இந்த வாராக்கடன் விஷயம் துரிதப்படுத்தும் என வங்கியின் தலைவர் நோயல் குயின் தெரிவித்துள்ளார்.

இதில் 35,000 பணி வெட்டுகளும் அடங்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்களது செயல்பாட்டுச் சூழல் வியத்தகு அளவில் மாறிவிட்டதாகக் கூறுகிறார் நோயல்.

வங்கியின் வணிகத்தை வலுப்படுத்தக் கூடுதல் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியாகக் கருதப்படும் எச்.எஸ்.பி.சி வங்கி வரி செலுத்துவதற்கு முந்தைய லாபத்தில் 65 சதவீத சரிவை இந்த வருடத்தின் முதல் பாதியில் சந்தித்துள்ளது. இது கணிக்கப்பட்டதை மோசமான சரிவாகும்.

கொரோனா வைரஸின் காரணமாக வாராக்கடனின் அளவு அதிகரித்ததாகக் கூறுகிறது அந்த வங்கி.

குறைந்த வட்டி சூழலும் எச்.எஸ்.பி.சி வங்கி மீது பெரியளவில் தாக்கம் செலுத்தி உள்ளது. இது வங்கியின் லாபத்தைக் குறைத்துள்ளது.

பணி வெட்டு

பிரிட்டனின் பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி, உலகம் முழுவதும் பணியாற்றும் 235,000 பணியாளர்களின் எண்ணிக்கையில் 35000 பேரை குறைக்கப் போவதாக ஜூன் மாதம் கூறி இருந்தது.

வங்கியின் கட்டமைப்பை மாற்றப் பிப்ரவரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படியே இந்த பணி வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

கொரோனா பரவலின் காரணமாக இந்த பணி வெட்டுகள் முதலில் கிடப்பில் போடப்பட்டதாக அந்த வங்கி கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *