பம்பாயில் இரண்டு ஆண்டுகள் ருத்ர தாண்டவம் ஆடிய பிளேக்!

பம்பாயில் 1896ம் ஆண்டு நுழைந்த பிளேக் இரண்டு ஆண்டுகள் ருத்ர தாண்டவம் ஆடியது. பிறகு, அங்கிருந்து நகர்ந்து அதே மகாராஷ்ட்ராவின் புனேவுக்குள் நுழைந்தது. அப்போது இந்தப் பகுதிகள் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தன.

பம்பாய் நகரத்துக்குள் பிளேக் நிகழ்த்திய கொடூரங்களை சென்ற அத்தியாயத்திலேயே பார்த்தோம். அதற்கு சற்றும் குறைவில்லாத கொடூரங்கள்தான் புனேவிலும் நிகழத்தொடங்கின.

கொள்ளை நோய்த் தடுப்புச் சட்டம் 1897ஐ அப்போதைய வெள்ளையர் அரசு தீவிரமாக அமல்படுத்தியது. சமூக இடைவெளி, லாக்டவுன், குவாரன்டைன், கடுமையான பரிசோதனைகள் என இன்று கொரோனாவுக்கு நிகழ்ந்த, நிகழும் எல்லா சமூக ஏற்பாடுகளும் அன்றும் அரங்கேற்றப்பட்டன.

மக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். வீட்டைவிட்டு வெளியே வந்தாலும் போலீசார் கடுமையாகத் தாக்கினார்கள். மறுபுறம் எளிய மக்கள் அன்றாட ஜீவனத்துக்காக என்ன செய்வதெனத் தெரியாமல் வெளியே வரத் தொடங்கினர். போலீஸ் அவர்களை மூர்க்கமாகத் தாக்கியது.

நோய் அறிகள் இருக்கிறதென்று மருத்துவமனைகளுக்குச் சென்ற பெண்களிடம் அங்கிருந்த காவலர்கள், பரிசோதனை என்ற பெயரில் தவறாக நடக்க முயன்றனர். நோய்க்கொடுமை மற்றும் வறுமையால் வாடியவர்கள் மீது ஆங்கிலேயே அரசின் போலீஸும் தாக்குதல் நடத்தியதால், மக்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.

ஒருபுறம் தேசியவாதிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மக்களிடையே சுதந்திரக் கனலைக் கொளுத்திவிட்டு எரிய வைக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம், பிளேக் மற்றும் வெள்ளை அதிகாரிகள் செய்த கெடுபிடிகளால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் கிளர்ச்சியிலும் இறங்கினார்கள். அரசு அவர்களை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கியது..

பாலகங்காதர திலகர், தான் நடத்திவந்த ‘கேசரி’ என்ற நாளிதழில் பிரிட்டிஷ் அரசின் இந்த வன்முறைகளை எழுதியது போராட்டக்காரர்களுக்கு மேலும் உணர்வுகளைத் தூண்டு வதாக அமைந்தது. 1897ம் ஆண்டு ஜூன் இரண்டாம் நாள் புனேவின் வரலாற்றில் மறக்கவியலாத நாளாக அமைந்தது.
விக்டோரியா அரசியின் வைரவிழாவான அன்று, புனேவின் அரசுக் கட்டடம் கோலாகலமாக இருந்தது.

திடீரென அங்கு தன் சகாக்களின் உதவியோடு நுழைந்த பாலகிருஷ்ணஹரி சப்பேகர், தாமோதர் ஹரி சப்பேகர், வாசுதேவஹரி சப்பேகர் ஆகிய மூன்று சகோதரர்களும் பிளேக்கைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக இருந்த வால்ட்டர் சார்லஸ் ரேண்ட் என்ற வெள்ளை அதிகாரியையும்  அவரின் அடுத்த நிலை அதிகாரியான சார்லஸ் ஈகர்ட்டன் என்பவரையும் சுட்டுக் கொன்றார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் லண்டனையுமே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு புனேவில் அரசின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகின.
மூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்கள். ஒருபுறம் பிளேக்கிடமும் மறுபுறம் சுயநலமான வெள்ளை அரசிடமும் மக்கள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தார்கள்.
பம்பாய் மாகாணத்திலிருந்து பிளேக் மெல்ல மெல்ல வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. பம்பாய் போன்ற துறைமுக நகரத்துக்கு பிழைப்பு தேடி நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்த எளிய மனிதர்கள் பிளேக்கினால் ஏற்பட்ட உயிர் பயத்துக்கும் வெள்ளை அரசின் கெடுபிடிகளுக்கும் பயந்து சொந்த ஊருக்கே திரும்பினர்.

இப்படிச் சென்றவர்கள் இந்தியாவின் உட்புற கிராமங்களுக்கும் பிளேக்கைக் கொண்டு சென்றனர். மேலும், இந்தியாவின் ரயில் தடங்கள் பிளேக்கின் முக்கியமான பரவல் வழித்தடங்களாக இருந்தன. எந்த ரயில் தடங்கள் இந்தியாவை நவீன தேசமாக மாற்றியதோ அந்த ரயில் தடங்கள் வழியாகவே பிளேக்கும் பரவியது. தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களில் இருந்த எலிகள் மூலம் பிளேக் இந்தியாவின் மூலை முடுக்குக்கு எல்லாம் சென்றது.

அப்படித்தான் புனேவிலிருந்து வங்காளத்துக்குள் நுழைந்தது பிளேக். கல்கத்தாவுக்குள் பிளேக் நுழைந்தது 1898ம் ஆண்டில்தான் என்கிறார்கள். ஆனால், சில ஆய்வாளர்கள் அதற்கும் சில ஆண்டுகள் முன்னரே – அதாவது பம்பாயில் முதன் முதலாகத் தாக்கியதுக்கு முன்பே – கல்கத்தாவில் பிளேக் நுழைந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

பிளேக்கைப் போன்றே கால் மூட்டு, அக்குள் உள்ளிட்ட பகுதி களில் வீக்கத்தோடும், காய்ச்சலோடும் சிலர் அப்போதே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதைக்கொண்டு பம்பாய்க்கு முன்பே பிளேக் கல்கத்தாவுக்குத்தான் வந்தது என்கிறார்கள்.

அலெக்சாண்டர் மெக்கின்ஸி என்ற நிபுணர்தான் முதன் முதலில் ஹவ்ராவில் பிளேக் தொற்று இருப்பதை 1898ல் கண்டறிகிறார். உடனடியாக இதற்கென ஹெச்.ஹெச்.ரைஸ்லி தலைமையில் ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பிளேக் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.

பம்பாயில் அசட்டையாக இருந்து தடுமாறிய அரசு கல்கத்தாவில் விழித்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், என்ன விழித்து என்ன பயன்… பிளேக்கின் கோர தாண்டவத்தை அவர்களாலும் கட்டுப்படுத்த இயலவேயில்லை.தொடக்கத்தில் இதற்கென சிறப்புச் சட்டங்கள் எதுவும் அமலாக்கப்படவில்லை.

அதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரத்துக்கும் மருத்துவர்களுக்கும் இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சியோ முன் அனுபவமோ சுத்தமாக இல்லை. பம்பாய் மாகாணத்தைப் போல் போலீஸ் அல்லது ராணுவத்தைக் கொண்டு கல்கத்தாவின் சூழ்நிலையைக் கையாளவும் பிரிட்டிஷார் அஞ்சினர்.

வங்காள சமூக மக்கள் மராட்டியர்களைப் போல் அல்லாது அரசியல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருந்ததால், பம்பாயைப் போல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அங்கு ஏற்பட்டதைவிடவும் சூழல் சிக்கலாகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது.

அதனால்தான் மருத்துவக் குழுவை முதலில் நிர்மாணித்தார்கள். சுகாதார அதிகாரி ஒருவர் கல்கத்தா கார்ப்பரேஷனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் கல்கத்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பிளேக் நோயாளிகளைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் சிம்சனும் தன் பணியைத் திறம்படச் செய்தார்.  

அரசின் நடவடிக்கைகளைக் கடந்தும் பிளேக் தீவிரமாகப் பரவிக்கொண்டுதான் இருந்தது. ‘மெட்ராஸ் ராஜ்தான்’ என்று அழைக்கப்பட்ட மதராஸ் மாகாணத்துக்கும் பிளேக் பரவியது. இன்றைய கர்நாடகாவின் சில பகுதிகள், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மாபெரும் தென்னிந்திய நிலப் பகுதியே மதராஸ் மாகாணம்.

வட இந்தியாவோடு ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் பிளேக் பரவல் குறைவாகவே இருந்தது. என்றாலும் தென்னிந்தியா, குறிப்பாக இன்றைய தமிழ்நாடு பிளேக்குக்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களும் சென்னையும் பிளேக்கால் அதிகம் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வெள்ளையர்கள் கோடைவாசஸ்தலமாகப் பயன்படுத்திய ஊட்டி, கொடைக்கானலிலும் பிளேக் பரவியது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் ஊருக்கு ஊர் பிளேக் மாரியம்மன் கோயில்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.
பிளேக் என்னும் கொடிய நோய் அம்மை போலவே ஏதோ அம்மனின் கோபம் என்ற எளிய மக்களின் புரிதலே இந்தக் கோயில்களை உருவாக்கின!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *