பாபர் மசூதி 1528இல் முகலாய மன்னர் பாபரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது!

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்திருந்த பாபர் மசூதி 1528இல் முகலாய மன்னர் பாபரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

பாபர் ஆட்சி செய்தபோது அவரது தளபதிகளில் ஒருவராக இருந்த மிர் பாகி என்பவர் அந்த மசூதியைக் கட்டினார்.

ஆனால், அந்த இடம் இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமர் பிறந்த இடம் என்று கூறி கரசேவகர்களால் 1992ஆம் ஆண்டு அந்த மசூதி இடிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளன.

இந்த சூழ்நிலையில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி மட்டுமல்லாது முகலாய மன்னர் பாபரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வேறு சில மசூதிகள் குறித்தும் பார்ப்போம்.

பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடம், அதாவது தற்போது புதிதாக ராமர் கோயில் கட்டப்பட உள்ள இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது பால்ரஸ் மசூதி.

பாபர்
படக்குறிப்பு,பேகம் பல்ரஸ்பூர் மசூதி

இதேபோல பைசாபாத் மாவட்டத்தில் உள்ள தர்ஷன் நகரில் உள்ள பேகம் பல்ரஸ்பூர் மசூதியும் பாபர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

மூன்றாவது மசூதியின் பெயர் மும்தாஜ் மசூதி. இது லக்னோ மற்றும் பைசாபாத் இடையில் உள்ள மும்தாஜ் நகர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

பாபர் மசூதியுடன் ஒப்பிடும் பொழுது இந்த மூன்று மசூதிகளும் அளவில் மிகச் சிறியவை.

ஆனால் இவற்றுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் வெளிப்படையாக தெரியும் வகையில் அமைந்துள்ளன.

இந்த மூன்று மசூதிகளிலும் ஒரு கோபுரம் கூட இல்லை. பாபர் மசூதியில் அமைந்திருந்ததை போல மையத்தில் ஒரு பெரிய குவிமாடமும், அதன் பக்கவாட்டில் இரண்டு சிறிய குவிமாடங்கள் இருக்கின்றன.

இந்த மூன்று மசூதிகள் மட்டுமல்ல. அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட அனைத்து மசூதிகளும் இதே போன்று தோற்றம் உடையவை என்கிறார் லக்னோவில் உள்ள வரலாற்று ஆய்வாளர் ரோஹன் தாக்கி.

“இந்தப் பகுதிகளில் இருக்கும் மசூதிகளில் இரண்டு அம்சங்கள் குறிப்பாக இருக்கும். அவற்றில் ஒன்று இந்த மசூதிகளில் ஸ்தூபி இருக்காது. மூன்று குவிமாடங்ங்களை கொண்டவையாகவே இந்த மசூதிகள் இருக்கும். இவை அனைத்தும் சுமார் 200 ஆண்டுகாலம் பழமைமிக்கவை. அவாத் நவாப்கள் ஆட்சிக்கு முன்பே இவை கட்டப்பட்டவை. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மசூதிகளில் ஒன்று அல்லது மூன்று குவிமாடங்கள் இருக்கும்.”

“மிகச்சில மசூதிகளில் மட்டும் ஐந்து குவிமாடங்கள் இருக்கலாம். இரண்டு குவிமாடங்கள் இருக்கும் மசூதிகளை உங்களால் பார்க்க முடியாது,” என்கிறார் ரோஹன்.

பாபர்
படக்குறிப்பு,மும்தாஜ் மசூதி

முகலாய மன்னர் பாபர் அயோத்திக்கு இருமுறை பயணம் மேற்கொண்டதாக பாபர்நாமா எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் வரலாற்று பேராசிரியர் ஹர்பன்ஸ் முக்கியா.

அவாத் சமஸ்தானத்தில் நிலவிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக அந்த பகுதிக்கு பாபர் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் மசூதி பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பாபர் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான மசூதிகள் ஒன்றுபோலவே இருக்கும் என்று பிபிசியிடம்பேசிய அவர் தெரிவித்தார்.

மேற்கண்ட மூன்று மசூதிகளில் மும்தாஜ் நகரில் உள்ள மசூதியைத் தவிர பிற இரண்டு மசூதிகளும் நல்ல நிலையில் இல்லை.

“முகலாயர்களின் தொடக்க காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் அவர்களின் படைத்தளபதிகளால் கட்டப்பட்ட கட்டடங்களில் வடிவமைப்பு ஒன்றுபோலவே இருந்தன,” என்று புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் சதீஷ் சந்திரா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாபர்

இந்த மூன்று மசூதிகளும் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த கல்வெட்டு போன்ற ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

இந்த மசூதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களை வைத்து அவை எப்போது கட்டப்பட்டன என்று தெளிவாகக் கண்டறிய முடியும் என்கிறார் ரோஹன்.

“இந்த மசூதிகளை பாபரின் தளபதி மிர் பாகி மிகவும் அவசர அவசரமாக கட்டியிருக்கலாம். அவருடன் இருந்த ஆயிரக்கணக்கான படையினர் ஓரிடத்தில் தங்கி இருந்தபோது அவர்களுக்கு வழிபட மசூதி தேவை எனும் நோக்கில் இவை கட்டப்பட்டிருக்கலாம்,” எனக் கருதுகிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *