அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தள்ளிவைக்க ஆலோசனை!

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானால், அதில் முறைகேடும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குப் பதிவில் முறைகேடு நடக்கும் என்ற டிரம்பின் கூற்று சரியென்று சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும் தபால் வாக்குகளுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்து சொல்லி வருகிறார் டிரம்ப். அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம் என்பது அவரது கருத்து.

கொரோனா உலகத் தொற்றால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார கவலைகளைக் கருத்தில் கொண்டு பல அமெரிக்க மாகாணங்கள் தபால் வாக்குப் பதிவு முறையை எளிதாக்கவேண்டும் என்று கூறுகின்றன.

அதே நேரம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலைத் தள்ளிவைக்கும் உரிமை அதிபருக்கு இல்லை. அப்படி ஒரு முன்மொழிவு இருந்தால் அதனை காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம்தான் அங்கீகரிக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *